Monday, December 17, 2007

இளைஞர் ஸ்டாலினின் கையில்?



தி.மு.க இளைஞர் அணி முதல் மாநில மாநாடு, அதுவும் 25 ஆண்டுகள் கழித்து நெல்லை நகரமே திணறும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு உள்ளது. பலமுனைகளில் இருந்து பல(த்த) எதிர்பார்ப்புகள். ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்படுவாரா? கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த மாநாட்டை எப்படி கையாள்கிறார்கள் என பலவிதமான கண்(கள்)ணோட்டம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்காமல் "கமா" போட்டது போல் முதல்வரின் "காலம் நிறைய இருக்கிறது .. நீங்கள் எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்" என்ற சூசக பேச்சு. 25 ஆண்டுகள் அரசியல் அனுபவம், கட்சியின் முக்கிய பொறுப்புகள், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், போராட்டம், சிறை என அத்தனை அரசியல் அனுபவங்களும் நிறைந்த தலைவர்தான் (இளைஞர்?) இன்றைய ஸ்டாலின். தாத்தாவாகியும், இன்றும் இளமையுடன், தினமும் நடைப்பயிற்ச்சி உடற்பயிற்ச்சி என உடலை டிரிம்மாக (தொப்பையுடன் பெருத்த உடலை உடைய பல அரசியல்வாதிகள் மத்தியில்) வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வலம் வருபவர்தான் நம் ஸ்டாலின். அனத்து தகுதியும் வாய்ந்த ஒருவர் கட்சித் தலைமைக்கும், முதல்வர் பதவிக்கும் முற்றிலும் தகுதி பெற்ற ஒருவர் மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும், சொந்தங்களிடமிருந்தும் அங்கீகாரம் பெற நடத்தப்பட்ட பிரமாண்டமான கூ(த்து)ட்டம்தான் இந்த மாநாடு. இது தேவையா? இப்படித்தான் ஒருவர் தன் பலத்தை காண்பித்து அங்கீகாரம் பெற வேண்டுமா? இத்தனை தகுதி படைத்த இவருக்கே இத்தனை சிரமம் என்றால்? சாமான்யனுக்கு எப்படி?

வருடம் 2007-ல் தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றம் கண்டுள்ள நாம், அரசியல் மாநாடு என்ற பெயரில், பத்து லட்சம் பேரை திரட்டி நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? மாநாடு காண வந்த அனைவரும் சொந்த வேலையை விட்டு வந்திருப்பார்கள். எவ்வளவு பொருளாதார நஷ்டம்? எத்தனை உற்பத்தி பாதிப்பு? அரசும், ஆளும் கட்சியும் இதை கொஞ்சமாவது யோசித்ததா? தங்களது சொந்த பலத்தைக் காண்பிக்க பொதுஜனத்தை சூரையாடும் இந்த கட்சி மாநாடுகளின் சூசகம் எத்தனை இளைஞர்களுக்கு புரியப் போகுது? சினிமாவில் ஹீரோ வந்தாலும், கட்சிக் கூட்டத்தில் தன் தலைவரை பார்த்தாலும் ஆனந்தக் கண்ணீர் விடும் எத்தனை அப்பாவி இளைஞர்கள். தன்னை அறியாமல் வாய் விட்டு தொண்டை கட்ட தலைவர் மேடை ஏறும் வரை கத்தும் கடைநிலை தொண்டன் எத்தனைப் பேர்? இவர்களுக்கு மாநாடு என்ற பெயரில் கழகங்கள் காட்டும் கண்(கட்டு)காட்சிதான் இந்த மாநாடு. இதை எல்லாம் கற்பனையாக நான் எழுதுவதாக நினக்க வேண்டாம். கரை வேட்டி மட்டும்தான் நான் கட்டியதில்லை. கலைஞர் சேலத்திற்கோ, ராசிபுரத்துக்கோ வந்த போது (எங்கள் ஊரில் இரவு பஸ் இல்லாததால், வாடகை கார் எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் சென்று) மணிக்கணக்கில் காத்திருந்து தலைவரை பார்த்து கோசம் போட்டு ஆனந்தக் கண்ணீர் விட்ட கழக கண்மணிதான் நானும். அது மட்டுமல்ல, தேர்தல் சமயங்களில் சூரியன் சின்னம் வரைந்த அனுபவும், பூத்துகளில் நின்று கொண்டு வாக்கு சேகரித்த அனுபவமும் நிறைய உண்டு. அனைத்தும் மாயை, ஏமாற்று வேலை என்று நன்கு புரிந்துதான் இதை எழுதுகிறேன்.

இந்த நிலை மாற வேண்டும், நான் சிறுவயதில் செய்த தவறுகளையே திரும்ப (இப்போது) செய்து கொண்டிருக்கும் இளைஞர்களை மாற்ற வேண்டும், சிந்திக்க செய்ய வேண்டும். இளைஞர்களும், மாணவர்களும் தேர்ந்த களிமண் போன்றவர்கள், அதை செம்மையாக, பதமாக வடிவெடுத்தால்தான் நல்ல பாத்திரம் கிடைக்கும்.

ஸ்டாலின் அவர்கள் இதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என எனக்கு தெரியாது. அனைத்து தகுதியும் வாய்ந்த தாங்கள் முதல்வராக ஆக எந்த கேள்வியும், சந்தேகமும் இல்லை. அதே சமயத்தில்,

கழகங்களின் கண்ணாமூச்சிகளில் இருந்து இந்த இளைஞர்களை விடுத்து வேறு வழி நடத்த செல்ல முடியுமா?
மாநாடு, கட்சி என்று வேலைக்கு செல்லாமல் திரியும் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியுமா?
பேரணியில் நடந்து செல்ல தனிப்பயிற்ச்சி குடுக்கும் தங்கள் அமைப்பு அதை விட்டு தேர்ந்த விளையாட்டு துறையில் தனிப்பயிற்ச்சி குடுக்க முன் வருமா?
தமிழ்நாட்டை விட்டு வெளியில் வந்தால் "பெப்பே ..." மொழி தெரியாமல் விழி பிதுங்கும் இளைஞருக்கு பலமொழி கற்றுக் கொடுக்க உங்கள் ஆட்சி முன் வருமா?
இலவச மான்யம் என்ற பெயரில் வழங்கும் பிச்சையை நிறுத்தி நிரந்தர வருமானம் அளிக்கும் தொழிற்சாலைகள் தொடங்க வருமா?
கட்சி மாநாடு, பொதுக் கூட்டம் என்ற பெயரில் கூட்டம் சேர்க்காமல் (ஊடகங்கள் வழியாக) அவர்களை உங்களால் சென்று அடைய என்ன வழி என சிந்திப்பீரா?

..........இன்னும் பல கேள்விகள் இங்கு எழுப்பலாம். ஆனால், நான் கூற வந்ததின் அர்த்தத்தை சுருங்க சொல்லிவிட்டேன்.

மாநாட்டில், தங்கள் தலைவரும் தந்தையும் என்ன கூறினார்? தந்தை பெருமைபடும் வகையில் மகனாக, நல்ல தலைவனாக தாங்கள் இருப்பீர்கள் என நம்பிக்கை படக் கூறினார். அவர் எதை வைத்து கூறினார் என தெரியாது, ஆனால், இன்றைய இளைஞர்களை தங்களால் திருத்த முடியும், ஆரோக்கிய அரசியலை குடுக்க முடியும், ஒரு புதுமை "புரட்சியை" உருவாக்கி தங்கள் பெயருக்கேற்ப சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும், அதைத்தான் நான் (எனைப் போன்ற) மற்றவரும் விரும்புவர்.

பதில் உங்கள் கையிலல்ல, "செயலில்" ........

Thursday, December 6, 2007

பனி மழையும் பருவப் பெண்ணும்


பனி மழை பூவாய் பெய்து
பரவிக் கிடக்கும் அழகு!
பருவப் பெண் பூப்பெய்து
பட்டாடை போர்த்தும் அழகு!

பகலவன் வரவைக் கண்டு
பளீரென மின்னி மறையும் அழகு!
இனியவன் வரவைக் கண்டு
இதயத்தில் மின்னலாய் தோன்றும் அழகு!

Monday, December 3, 2007

கி.பி. 2071


ரோஜர் சாமியப்பனின் காலை பிராண்டி எழுப்பினான். அதற்குள் விடிந்து விட்டதா? இப்பதான் படுத்த மாதிரி இருக்குது, ரோஜர் எழுப்புகிறான் என்றால் ஏதாவது முக்கிய செய்தி இருக்கும். அரைத் தூக்கத்தில் கண் விழித்து பார்த்தான். எதிர்பார்த்த மாதிரியே ரோஜர் அவனுடைய செல்லை கவ்விக் கொண்டு வாலாட்டிக் கொண்டிருந்தான். என்ன அவசரமோ என செல்லை வாங்கிப் பார்த்தான். அவசர வானிலை செய்தி, விவசாய கழகத்திலுருந்து அவசர செய்தி என பிளாஷ் செய்திகள் மின்னிக் கொண்டிருந்தது. பக்கத்திலுள்ள ஜாரிலிருந்து ஒரு ரொட்டித் துண்டை எடுத்துப் போட ரோஜர் வாலாட்டி நன்றி சொல்லியவாறே ஒடினான். என்ன செய்தியாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டே செல்லிலிருந்த ஒரு பட்டனை அமுக்க, தன் படுக்கை எதிரில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் லேசர் மூலம் ஒரு ஒளி சதுரம் உருவாக, முதல் செய்தியை படிக்க ஆரம்பித்தான். அடுத்த 24 மணி நேரத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பிக்கும், 3 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளது.


இது என்னடா வம்பா போச்சு, வயலில் நெற்கதிர் முதிர்ந்த தருவாயில் உள்ளது, நாளைக்குத்தானே ரோபோக்கள் மூலமா பயிரை அறுவடை செய்ய கம்யூட்டரில் புரோகிராம் பண்ணி வச்சிருக்கோம். இப்ப முதல்ல அதை மாத்தி, இன்னிக்கே வேலையை தொடங்கற மாதிரி புரோகிராம் பண்ணனும். சரி அடுத்த என்ன செய்தி இருக்கு என பார்த்தான். மோசமான வானிலையைக் காரணம் காட்டி நாளை மறுநாள் நடக்கவிருந்த விவசாய கழக மாநாட்டை இன்று காலையே நடத்த இருக்கிறார்கள். தக்காளி மற்றும் தேயிலை பறிக்கும் அதிநுட்பம் வாய்ந்த ரோபோக்களை தயாரித்து அறிமுகப்படுத்தும் அமைப்பில் இவன் பங்கு நிறைய இருந்தது. இவன் நேரில் சென்று அதை செய்முறை விளக்கம் அளிக்க ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்தான். என்னடா, ஒரே நாளில் இத்தனை சிக்கலா என நினைக்கும் போதே, அவன் அன்பு மகள் மல்லிகா அப்பா என ஓடி வந்தாள். என்னம்மா? சொல்லு என்று தன் அருகில் அழைத்தான். அப்பா, எங்க பள்ளியில போன வாரம் நடந்த தேர்வில நான்தான் முதலா வந்திருக்கேன். அதைப் பாராட்டி, இன்னிக்கு காலையில 10 மணிக்கு விருது குடுக்க போறாங்க. நீங்களும் அம்மாவும் அவசியம் வரணும்பா என்றாள். அப்பதான் எனக்கு பெருமையா இருக்கும் என்று கூறி விட்டு இவன் பதிலைக் கூட எதிர்பாராமல், 10 மணிக்கு பார்க்கலாம்பா என்றவாறே பறந்து சென்றாள்.

அதே 10 மணிக்குதான் டெல்லியில் புது ரோபோவின் செய்முறையை குடுக்க வேண்டும். இன்னிக்கு யார் முகத்திலடா முழித்தோம்? ரோஜர் .... என்னடா இப்படி சிக்கல்ல மாட்டி விட்டுட்டியே? என முணகிக் கொண்டே தன் காலை விருப்ப பானமான ஸ்காட்ச்சை எடுத்து கிளாசில் ஊற்றிக் கொண்டே மணி பார்த்தான். அதற்குள் 8.00 ஆயிடுச்சா? ஒரே முடக்கில் கிளாசில் இருந்ததை வாயில் ஊற்றிக் கொண்டு, தன் செல்லில் இருந்த இன்னொரு பட்டனை அமுக்க, தன் மாஸ்டர் கம்யூட்டரின் புரோகிராம் விண்டோ தெரிய வந்தது. எதோதோ பட்டன்களை அமுக்கி நெல் அறுவடை ரோபோக்களை இன்று காலை 9.00 மணியிலிருந்து வேலை துவங்குகிற மாதிரி புரோகிராமை மாற்றி அமைத்தான். மல்லிகாவின் பள்ளிக்கு கட்டாயம் போகணும், இல்லையென்றால் பாவம் பிள்ளை ஏமாந்து விடுவாள். பள்ளிக்கு போனால், எப்படி டெல்லியில் 10 மணிக்கு செய்முறை விளக்கம் கொடுப்பது. பலமாக யோசித்தான். சரி, அதுதான் நல்ல ஐடியா. விடுவிடுவென எழுந்து மொட்டை மாடிக்கு சென்று தன் கிளைடரை கிளப்பினான். அடுத்த 3வது நிமிடத்தில் தனது பரிசோதனை வயலில் இருந்தான். அங்குள்ள காமிராக்களை ஆன் செய்து அந்த புது ரோபோவை இயக்கி தக்காளி பறிப்பதை விளக்கம் சொல்லிக் கொண்டே வயலில் இயக்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், அனைத்து செயல் முறைகளையும் விளக்கி காமிராவில் பதிவு செய்து தனது செல்போனில் காபி செய்து கொண்டு உடனே கிளைடரை கிளப்பி வீட்டுக்கு வந்து சேர மணி ஏற்கனவே 9:15. வீட்டின் முற்றத்தில் உள்ள மானிட்டரில் ரோபோக்கள் நெல் அறுவடை செய்து கொண்டிருப்பது ஒடிக் கொண்டிருந்தது. அதை பார்த்து கொண்டே குளித்து பள்ளிக்கு கிளம்ப தயாரானான். ஐந்தே நிமிடத்தில் கிளம்பி தயாராகி வந்து தன் மனைவி செண்பகத்திற்காக காத்திருந்தான்.

எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்து வேகமானாலும் இவ மட்டும் சீக்கிரம் கிளம்ப மாட்டாளே என மனதில் நினைத்துக் கொண்டிருந்த போதே, நான் கிளம்பிட்டங்க என செண்பகம் வந்தாள். இருவரும், மீண்டும் கிளைடர் பயணம், 5 வது நிமிடத்தில் பள்ளியில் இருந்தனர். 10 மணி, விழா ஆரம்பமாயிற்று. அதே சமயத்தில், இவன் செல் போனின் ஒரு பட்டனை அமுக்க, இவன் ஏற்கனவே பதிவு செய்த ரோபோ விளக்கமுறையும் டெல்லி அரங்கத்தில் ஒளிபரப்ப ஆரம்பித்தது. தலைமை ஆசிரியர் பேச ஆரம்பித்தார். "எல்லோருக்கும் வணக்கம் .... அதே சமயத்தில், சாமியப்பனின் குரல் டெல்லி அரங்கத்தில் ஒலிக்க ஆரம்பித்தது. "எல்லோருக்கும் வணக்கம், பொதுவா செய்முறைன்னா நேரிலதான் இருக்கும், ஆனா நான் முதல்ல வயல்ல இதை எப்படி பயன்படுத்தறதுன்னு காண்பிச்சுட்டு பிறகு உங்க முன்னால வந்து நிற்க போறேன்" எனக் கூறி செய்முறை படம் ஓட ஆரம்பித்தது. தலைமை ஆசிரியர் மல்லிகாவுக்கு விருது வழங்கும் போது மாணவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தது இவனுக்கு பெருமையாக இருந்தது. பள்ளி விழா ஒருவழியாக 10:30க்கு முடிய, தன்னுடைய ஜெட்டில் தாவி அடுத்த 20வது நிமிடம் டெல்லி அரங்கத்தில் நுழைய அனைவரும் இவனை கை தட்டி வரவேற்றனர். மீதமுள்ள செய்முறையும் முடித்து விட்டு, விருந்தில் கலந்து கொண்டு வீடு வந்து சேர்ந்த போது இரவு மணி 9.00. கருமேகம் வானில் எங்கும் படர்ந்து மின்னலுடம் மிரட்டிக் கொண்டிருந்தது. முற்றத்திலிருந்த மானிட்டர், நெற்கதிர் அறுவடை முடிந்தது என பிளாஷ் செய்து கொண்டிருந்தது. அப்பாடா என படுக்கைக்கு சென்றவன் ரோஜரை தடவிக் குடுத்து விட்டு தனது விருப்ப பானமான ஸ்காட்ச்சை எடுத்து கிளாசில் ஊற்றிக் கொண்டே செல் போனிலுள்ள சினிமா என்ற பட்டனை அமுக்க லேசர் திரையில் சிவாஜி ரஜினி "அதிருதுல்ல" என்று சொல்லிக் கொண்டிருந்தார். படம் வந்து எத்தனை வருசமாச்சு, ஆனா தலைவர் தலைவர்தான் என்று உளறிக் கொண்டே படுக்கையில் மல்லாக்க சாய்ந்தான்.


செண்பகம் கத்திக் கொண்டிருந்தாள். யோவ் என்னய்யா ரோஜா ரோஜான்னு பெனாத்திக்கிட்டு இருக்க. மணி 8-ஆவுது, இன்னும் என்னய்யா தூக்கம்? நாய் காலை நக்கறதைக் கூட தெரியாம மனுசனுக்கு என்ன தூக்கமோ தெரில. எந்திரிய்யா? நாளைக்கு மழை வருதாம், பண்ணையக்காரர் வூட்டுல இன்னிக்கே நெல் அறுவடை வச்சிருக்காங்க. சீக்கிரம் வர சொல்லி ஆள் வந்திருச்சு. அப்புறம் உம் புள்ள மல்லிகாவுக்கு ஒண்ணும் படிப்பு ஏறலயாம். உங்கிட்ட வாத்தியார் பேசணுமாம். அப்படியே பள்ளிக்கூடத்தில போயி என்னானு ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துரு. கந்தன் காலையில உன் பங்கு கள்ளை வேற இறக்கி வச்சிட்டு போயிருக்கான், மூஞ்சிய கழுவிட்டு வந்து குடிச்சுட்டு வேலைக்கு போய்யா. இன்னிக்காவது இந்த கருமாந்தரம் இரண்டாவது ஆட்டம் இங்கிலீசு படம் அது இதுன்னா பார்க்காமா நேரமா வந்து சேரு. நீ எங்க திருந்த போறீயோ என்று ஒரே மூச்சில் கூறிவிட்டு சாணியைத் தட்ட ஆரம்பித்தாள்.

Saturday, December 1, 2007

தமிழில் டைப் செய்வது எப்படி?

ப்படி? எப்படி? தமிழில் டைப் செய்வது எப்படி? இந்த கேள்வி எனக்கு முதன் முதலாக வந்த போது நண்பர் ஜான் பெனடிக்ட் உதவி செய்தார். இதே கேள்வி பலருக்கு இன்னும் இருக்கு, இதோ பதில்கள். இரண்டு விதமா நாம தமிழில் எழுதலாம்.

இந்த பதிவை செய்த பின் நணபர் ராஜகோபால் ஒரு அருமையான வழியை கூறியுள்ளார், இதோ அதையும் சேர்த்து ....

மிக மிக எளிய முறை - Google way - கிழே கண்ட URL-க்கு செல்லுங்கள்

1.http://www.google.com/transliterate/indic/Tamil

2. ஆங்கிலத்தில் டைப் செய்து space press செய்ய தமிழில் வார்த்தை தோன்றும் ...

3. ட்ரை அண்ட் என்ஜாய். இதை பயன்படுத்தும் போது இன்னும் பல பயன்பாடுகளை அறிவீர்... எடுத்துக்காட்டாக, தமிழ் வார்த்தை தோன்றிய பிறகு backspace press செய்ய எல்லா word combination-ம் தெரியும்.

4. அப்புறம் என்னா, cut and paste தான்.


முதலாம் முறை / எளியது: கீழ்கண்ட ஏதாவது ஒரு இணையப் பக்கத்திற்கு சென்று, ஒரு பக்கம் (Text Box-ல்) ஆங்கிலத்தில் டைப் செய்ய, மறு பக்கம் (இன்னொரு Text Box-ல்) தமிழில் வார்த்தைகள் தெரிய வரும். ammaa - என ஆங்கிலத்தில் டைப் செய்தால் அம்மா என தமிழில் காணலாம். பிறகு, அந்த தமிழ் செய்தியை அப்படியே Text Box-லிருந்து (Shift+a - Select all, Ctrl+c - Copy) Clipbiard-ல் Copy செய்து Blog site-க்கு சென்று Paste செய்யலாம், Comments பதிவு செய்யலாம்.

1. http://www.islamkalvi.com/web/Romanised2Unicode.htm
2. http://www.tamil.net/ (Scroll down to end of the page to see the Tamil keyboard)

இரண்டாம் முறை: ஏதாவது ஒரு EDITOR, நான் Murasu Editor (http://www.murasu.com/) பயன்படுத்துகிறேன். நீங்க எழுத வேண்டியதை இந்த Editor-ல எழுதி விட்டு, அதை ஒரு File-ஆ Store () (.mrt extension) பண்ணி வைத்துக் கொள்ளலாம். இப்ப நீங்க இந்த தமிழ் Content-ஐ அப்படியே Copy செய்து, அதை Unicode-ஆக மாற்றம் செய்த பிறகுதான் இணையத்தில் பதிவு செய்ய முடியும்.

1. Murasu Editor-ல் தங்கள் செய்தியை டைப் செய்து கொள்ளவும்
2. டைப் செய்த செய்தியை Copy (Shift+a - Select all, Ctrl+c - Copy) Clipbiard-ல் Copy செய்து கொள்ளவும்.
3. http://www.suratha.com/reader.htm என்ற இணையதளத்திற்கு செல்லவும் (scroll down to find 2 text boxes)
4. அங்குள்ள Top Text Box-ல், நீங்கள் ஏற்கனவே Clipboard-ல் Copy செய்து வைத்துள்ள செய்தியை இங்கு Paste செய்யவும்.
5. அடுத்து, TSC என்ற Radio button-ஐ check செய்யவும்
6. ட..டா.... இப்போது தங்கள் செய்தி கீழே உள்ள Text Box-ல் தெரிய வரும்.
6. இப்போது, இந்த, கீழே உள்ள Text Box-லிருந்து (Shift+a - Select all, Ctrl+c - Copy) Clipbiard-ல் Copy செய்து Blog site-க்கு சென்று Paste செய்யலாம், Comments பதிவு செய்யலாம்.

Wednesday, November 28, 2007

கதை உருவான கதை


ப்படி கதை எழுதுறீங்க? எங்க இருந்து இந்த ஐடியா எல்லாம் கிடைக்குது? ஒரு கதை எழுத எவ்வளவு நேரம் ஆகும்? இதுவெல்லாம் என்னைப் பார்த்து நண்பர்கள் கேட்ட கேள்விகள். உடனே தோன்றியது, சரி கதை உருவான கதையை எழுதலாம்னு, ஆங்கிலப் படத்தில கடைசியில் காண்பிப்பார்களே, எப்படி படத்தை எடுத்தாங்கன்னு (Making) அது போல என்னோட கதைகளின் கருமூலத்தை எழுதலாம்னு முடிவு பண்ணினேன். பொதுவாகவே, நமக்கு தெரிஞ்ச ஒரு விசயத்தை அடுத்தவங்களுக்கு நல்லா புரிஞ்சிக்கிற மாதிரி ஜனரஞ்சகத்தோட சொல்றதோ இல்ல எழுதறதுங்கிறதோ ஒரு பெரிய கலை. என்னுடைய வேலை நிமித்தமா நான் பல முறை "White Papers", "Solution Proposal" எல்லாம் எழுத வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களும், மேலாளர்களும் தெளிவா புரிஞ்சிக்கிற மாதிரி நம்ம நினைக்க கூடிய செய்தியை முறையா, தெளிவா எடுத்து சொல்ல வேண்டியது ரொம்ப அவசியமானது. ஒண்ணுமில்ல, ஒரு சிரிப்ப கூட (comedy, joke) இன்னொருத்தருக்கு நாம சொல்லணும்னா அதை நல்லா, முறையா சொல்ல வேண்டிய விதத்தில் எடுத்து சொல்லவோ அல்லது எழுதவோ செய்தாதான் அது சரியா போயி சேரும், மற்றவர்களும் கேட்டுட்டு சிரிப்பாங்க, இல்லைன்னா, ஓ அப்படியான்னு கொட்டாவிதான் விடுவாங்க. அப்படிப்பட்ட இந்த எழுத்து கலையை எனக்குள்ள வளர்த்துக்கணும் அப்படிங்கற ஒரு ஆர்வக் கோளாறுதான் நான் எழுத ஆரம்பிச்ச இந்த பதிவுகள் (Blog). கதை, கவிதை இரண்டுமே எழுதி இந்த கலையை வளர்த்துக்கணும்னு ஆசை ரொம்ப. ஆனாப் பாருங்க, இந்த கவிதை எழுதறது கொஞ்சம் கஷ்டமான வேலை. தலை வலியே வந்திரும். சில சமயம் நான் கவிதைன்னு சொல்லி நண்பர்களிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. கதை எழுதறது கவிதையைக் காட்டிலும் கொஞ்சம் சுலபமானதுங்கிறது என்னுடய கருத்து. கதை எழுத அடிப்படையா ஒரு மூலக்கருத்து வேணும். சிறுகதைகளில் பெரும்பாலும் ஒரு முடிச்சி இருக்கும், கடைசியில் முடிச்சி அவிழ்ந்து ஒரு செய்தியும் இருக்கும். நான் எழுதிய கதை எல்லாவற்றிலுமே என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களும், நான் கேள்விப்பட்ட செய்திகளும் மையக் கருத்தா இருந்ததுங்கறது ஒரு மறுக்க முடியாத உண்மை. கற்பனையும் கால் பகுதிக்கு இருக்கும். அதை உங்க எல்லோருடனும் பகிர்ந்துக்கணும் அப்படிங்கற ஆவலில் உருவானதுதான் இந்த "கதை உருவான கதை".

(முடிந்த வரை ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சி செய்கிறேன், மீறினால் பொறுத்தருள்க!, ஆங்காங்கே எழுத்துப் பிழை இருப்பினும் மன்னிக்கவும் (blame editor)).


1. உறவுகள் - அமெரிக்காவில் "Thanks Giving" சமயத்தில் எழுதியது. "Thanks Giving" ன்னா ஒரு குடுமபத்தில் உள்ள உறவுகள், அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், மற்றும் நண்பர்கள் எவ்வளவு தூரத்தில இருந்தாலும் இந்த நாள்ள ஒண்ணா கூடி விருந்த "Turkey" யோட "Special"-ஆ சாப்பிடறது ஒரு சம்பிரதாய பழக்கம். அதுவே "உறவுகள்"-ங்கிற தலைப்புக்கு காரணமாச்சு. எனக்கு ஒரு அண்ணன் இருக்கார். நான் இரண்டாவது ஆளு. சின்ன வயசில எங்களுக்குள்ள வந்த சண்டை (வடை, போண்டா-வுக்காக மல்லுகட்டினோம்) பெருசாயி, அதுல அவர நான் மாட்டி விட்டு கடைசில அவருக்கு எங்கப்பாவிடமிருந்து அடி கிடைக்கற அளவு நிலைமை மோசமாக எனக்கு ரொம்ப கஷ்டமாவும் வெட்கமாவும் இருந்தது. அப்ப எங்கப்பா நடத்தி வச்ச சமாதான பஞ்சாயத்தும், கூறிய அறிவுரைகளும், சமீபத்தில பார்த்த தமிழ் திரைப்படங்களின் பாதிப்பும்தான் இந்தக் கதையின் மையக் கருத்து.

2. சரவெடி - தீபாவளி சமயத்தில எழுதப்பட்ட கதை. நண்பர் கரண் தலைப்பை குடுத்து கதை எழுத சொன்னார். சின்ன வயசில பட்டாசு வாங்க நான் போடற கணக்கும், எங்க குடும்பத்தில காட்டுற கண்டிப்பும், நம்மலால முடியாததை, அடுத்தவங்க வெடிக்கறத பார்த்து பண்டிகையை ஓட்டறதுங்கிற சொந்த அனுபவம்தான் கதையோட மையக் களம். கொஞ்சம் சமுதாய முன்னேற்ற சிந்தனையோட குண்டு வெடிப்பு ட்விஸ்டு வச்சி நான் விட்ட புஸ்வானம்தான் இந்த வெடி.

3. மூலதனம் - என் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக பல இடங்களில் அலைந்து திரிந்தேன், மந்திரியின் பி.ஏ-விடம் எல்லாம் என்னுடைய "Resume" குடுத்து வைத்தேன், கடைசியில் ஊருக்கு வந்தேன். எங்க தோட்டம் உள்ள கிராமத்துக்கு போகணும்னா ஒரு நாளைக்கு ரெண்டே பஸ்தான், மற்ற வேலைகளில் நடராஜா சர்வீஸ், அப்படி இல்லைன்னா வாடகை சைக்கிளோ அல்லது அந்த வழியாக போகும் டிராக்டர் சவாரி. இந்த கிராமத்து சூழலே கதைக்கு களமாச்சு. எங்கப்பா என் அண்ணன் கூடப் படிச்சு கம்பனி நடத்தறவரோட விலாசத்தை குடுத்து, போயி பார்த்துட்டு வரச் சொன்னார். அங்க போயி, அவரு தொழில் நடத்தற விதத்தைப் பார்த்தேன், அதே போல நாம் ஏன் சுயமா பண்ணக்கூடாதுன்னு நினைச்சு, பின்னால "Software Consultancy" ஆரம்பித்து கிட்டத்தட்ட 70 Clients, 5-6 Employees மேல நிர்வகிக்கற அளவுக்கு வளர்ந்தேன். அந்த சுய அனுபவமும், கொஞ்சம் கற்பனையும்தான் இந்த கதைக்கு மூலதனமாச்சு. காசு சுண்டி விடற படம், ஐடியா வேற ஒண்ணுமில்ல, சிவாஜி இன்டெர்வல்தான்.

4. ஆயிரத்தில் ஒருவன் - ஆயுத பூஜைக்காக எழுதிய கதை. எங்க ஊர்ல பூஜையின் போது, நண்பர் ஒருவரின் லேத் பட்டறைக்கு சென்று பொரி விநியோகிப்பது வழக்கம். அது முடிந்து அடுத்து அச்சாபீஸ் நண்பர் அங்க போயிடுவோம். அது மட்டுமல்ல, ஒவ்வொரு பூஜைக்கும் ஒவ்வொரு மாதிரி அயிட்டம் இருக்கும். இந்த வருசம் பொரி குடுத்தா, அடுத்த வருஷம் சுண்டல்னு ஒரு வித்தியாசம் காட்டுவோம். அப்படி விநியோகிக்கும் போது, ரொம்ப முடியாதவங்க, ஏழைங்க, சின்ன பசங்க எல்லாம் பெரிய சாக்கு பையை எடுத்துகிட்டு வந்து வாங்கிட்டு போவாங்க. அப்ப தோணும், இவ்வளவு வாங்கி என்னடா பண்ணுவாங்கன்னு. எல்லாத்தையும் இவங்களே சாப்பிடுவாங்களா இல்ல யாருக்காவது குடுப்பாங்களா இல்ல வித்துருவாங்களான்னு. அப்படி சின்ன வயசில பார்த்து கிடைத்த அனுபவமும், கொஞ்சம் செண்டிமென்டையும் அள்ளித் தெளிச்சு உருவானவந்தான் இவன்.

5. பேட்டை துள்ளி - இது வித்தியாசமான ஒரு அனுபவம். 3 ஆண்டுகளுக்கு முன் ரம்ஜான் சமயத்தில் ஊருக்கு சென்ற போது என் நெருக்கமான நண்பர் முகமது ரபி தனது பகல் ரம்ஜான் விரதத்தை கலைத்து அவர் வீட்டில் விருந்து குடுத்தார். அப்போது நான் அவரிடம் கேட்டேன், ஏன் இன்னிக்கு விரதத்தை சீக்கிரம் முடிச்சிட்டேன்னு, அதுக்கு அவர் சொன்னார், அல்லாவே சொல்லியிருக்காரு தேடி வந்த விருந்தினரை மகிழ்ச்சியா உபசரிச்சிட்டு உன் குடும்ப கடமை எல்லாம் முடிச்சிட்டு எங்கிட்ட வான்னு. அதனால உன்னை முதல்ல கவனிக்கிறேன்னு என்னிடம் விளக்கம் சொன்னார். இந்த நெகிழ்ச்சியான அனுபவமும், என்னுடைய சபரி மலை பயண அனுபவமும், ஜாதி மத பேதமற்ற சமுதாயம் காண நான் கொண்ட பேராவலிலும் துள்ளி வந்ததுதான் இந்த கதை.

6. மேஜர் மைனர் - இது விநாயகர் சதுர்த்திக்காக எழுதப்பட்டது. செய்திதாளில் வந்த செய்தி, எந்த மாவட்ட கலெக்டர் என நினைவில்லை, ஈரோடு என நினைக்கிறேன் (என் கல்லூரியில் படித்த எனக்கு நன்கு அறிமுகமான எனக்கு ஒரு வருட ஜூனியர்தான் இப்போது ஈரோடு கலெக்டர்). அவர் விநாயகர் சதுர்த்தியை அமைதியாக எந்த கலவரம் இன்றி கொண்டாடவும், சிலை கரைப்பு பணிகளை எப்படி, எங்கு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி செய்தி வெளியிட்டிருந்தார். அந்த செய்தியும், கொஞ்சம் சிறுகதைக்கே உண்டான டிவிஸ்டும் கலந்து மேஜரானவந்தான் இந்த மைனர் (கதை).


7. ஊருக்குதான் உபதேசம் - இது சுவாரசியமான விசயம். பா.ம.க தலைவர் ராமதாஸ் அவர்கள் தன்னுடைய பசுமை டி.வி யின் ஆண்டு விழாவில் தமிழ் எப்படி எல்லாம் உபயோகிக்க வேண்டுமென வலியிறுத்தி பேசிய பேச்சு. சோறுன்னுதான் சொல்லணும் சாதம்னு சொல்லக் கூடாது, சாதம் வட மொழிச்சொல் என்று. படித்தவுடன் சிரிப்பு வந்தது. இவர் பேரிலேயே "தாஸ்" என்ற வடமொழி சொல் உள்ளதே அதற்கு அவர் என்ன பண்ணுவார் என்று. பல அரசியல்வாதிகள் தன் சுயநலத்திற்காக ஊருக்கு ஒரு விதியும் தனக்கு ஒரு விதியும் வைத்து பொதுமக்களை சுரண்டுகிறார்களே என்ற ஆதங்கத்தில் வந்த உபதேசம்தான் இது.

8. தவிப்பு - இது எனது முதல் கதை. யோசித்து யோசித்து கதை களம் பிடித்தேன். ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் வைக்க வேண்டுமென ரொம்பவே முயற்சி செய்தேன். கல்லூரியில் படிக்கும் போது ஆண்டு விழா மலர் வெளியிடுவார்கள். அதற்கு விளம்பரம் பிடிக்க நாங்கள் செல்வது வழக்கம். அப்படி போன இடத்தில் ஒரு பெண் காரியதரிசியிடம் நடையாய் நடந்து, அவர் இன்னிக்கி தரேன், நாளைக்கு தரேன்னு என என்னை அலைய விட்டு, நானும் ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து கடைசில் நண்பன் சொன்ன ஐடியாவுடன் (ரெண்டு பெரிய விளம்பர கட்டம் வாங்கினா ஒரு சின்ன விளம்பர கட்டம் இலவசம்) சென்று ஒரு வழியாக விளம்பரம் பிடித்து முடித்தேன். அந்த தவிப்பின் பிரதிபலிப்புதான் இந்த தவிப்பு.


கதையைப் படித்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Tuesday, November 27, 2007

உறவுகள்


பெரியசாமியும் சின்னசாமியும் எதிரும் புதிருமாக கையைக் கட்டியவாறே முகத்தை திருப்பிக் கொண்டு பஞ்சாயத்து முன் வந்து நின்றனர். பஞ்சாயத்து தலைவர் கணக்குபிள்ளை குடுத்த பிராதை கையில் வாங்கிக் கொண்டு மெளனம் கலைத்து பேச ஆரம்பித்தார். இந்த முறை என்னடா பிரச்சினை உங்களுக்குள்ள? ஏண்டா உங்க அண்ணன் தம்பி பிரச்சினையை தீர்க்கறதுக்கே வருசத்தில பாதி முறை பஞ்சாயத்தை கூட்ட வேண்டியிருக்கு. சொல்லுடா சின்னசாமி, நீதான் புகார் கொடுத்திருக்க, உன் புகாரை முதல்ல சொல்லு என்றார்.


ஒண்ணுமில்லைங்க, நேத்து ராத்திரி எங்க அண்ணன்... என சொல்லி முடிப்பதற்கு முன்பே அவன் மனைவி லட்சுமி, என்னய்யா இன்னும் மழுப்பற அந்த ஆளு பண்ண அட்டூழியத்த சொல்லுவியாம் அத விட்டுபுட்டு அண்ணன் நொண்ணன்னு என்று சீறினாள். ஏ புள்ள, பஞ்சாயத்துல பிரச்சினையை விசாரிக்கறமுல்ல, அதுக்குள்ள உனக்கு என்ன பெரியத்தனம், சித்த சும்மா இரு என்று தலைவர் அவளை அடக்க சின்னசாமி புகாரை தொடர்ந்தான். நேத்து ராத்திரி என் வயல்ல இருந்த பயிருக்கு தீ வச்சிப்புட்டாருங்க, நல்ல வேளை நான் சமயத்தில பார்த்து தீயை அணைச்சிப்புட்டேன், இருந்தாலும் பயிரு சேதமாயிருச்சுங்க. இவருதான் தீய வச்சாருன்னு சாட்சி கூட இருக்குதுங்கய்யா. இவரு சங்காத்தியமே இனி வேண்டாம், நான் அவருக்கு தம்பியும் இல்ல, அவரு எனக்கு அண்ணணும் இல்ல, இந்த உறவே வேண்டாம், அத்து விட்டுருங்கய்யா, அதுக்கு பிறகு அவரை வெட்டிபுட்டு ஜெயிலுக்கு போயிடறேன் என்று கோபமாக ஒரே மூச்சில் புகாரை சொல்லி முடித்தான்.


தலைவர் சாட்சிகளைப் பார்க்க அவர்களும் அதுதான் நடந்த்தது என்று தலையை ஆட்டி ஆமோத்தினர். ஏண்டா, உனக்கு என்ன புத்தி கித்தி கெட்டு போச்சா சோறு போடற பயிருக்கு போயி தீய வச்சிருக்கிய, ஏதுக்கடா இப்படி செஞ்ச என தலைவர் பெரியசாமியைப் பார்த்து கேட்டார்.


பின்ன என்னாங்க. எம் பொண்டாட்டி, அதுவும் வயித்துப் புள்ளக்காரி தண்ணி எடுத்துக்கிட்டு வரும் போது இவன் காரக் களத்து வழியா வந்திருக்கா. அதுக்கு இவனும் இவன் பொஞ்சாதியும் சேர்ந்துகிட்டு இந்த வழியா என் களத்துல போவக்கூடாது, சுத்திக்கிட்டு போன்னு சொல்லி திருப்பி அனுப்பியிருக்காங்க. அந்த கிறுக்கு புள்ளையும் வயித்துல புள்ளய வச்சிக்கிட்டு வயலை சுத்திகிட்டு வந்திருக்கா. ஒரு ஈவு இரக்கம் வேணாம், அண்ணின்னா அம்மாவுக்கு சமம், அது கூட தெரியாத மரியாத கெட்ட ஜனங்க. அதான் கோவம் வந்திருச்சு, தீய வச்சிப்புட்டேன். அவன் சொன்ன மாதிரியே உறவ அத்து வுட்டுருங்க, அதுக்கு பிறகு நானா அவனா பார்த்துக்கிறேன். நான் பார்க்க கோவணம் கட்டுண அவனுக்கு அவ்வளவு வீராப்பு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்னு நான் காட்டறேன் என்று பதிலுக்கு சீறினான் பெரியசாமி.


இதைக் கேட்ட தலைவர், என்னதான் நீ உன் கோவத்த சொன்னாலும், பயிர் சேதம் பண்ணியிருக்க கூடாது. அதுக்கு உண்டான நஷ்ட ஈட அவனுக்கு நீ குடுத்துதான் தீரணும். அது மட்டுமல்ல பஞ்சாயத்து தண்டனையும் உனக்கு உண்டு. 200 ரூவா அபராதமும் 50 தடியடியும்தான் பஞ்சாயத்து தண்டனை என தன் தீர்ப்பை சொல்லி முடித்தார். பெரியசாமியும் தலையை ஆட்டிக் கொண்டே வேறு வழியின்றி நஷ்ட ஈட்டையும் அபராதத்தையும் கணக்குப்பிள்ளையிடன் குடுத்தான். கணக்குப்பிள்ளை அபராத்தை எடுத்துக் கொண்டு நஷ்ட ஈடை சின்னசாமியின் கையில் குடுத்து விட்டு அருகிலுருந்த மாடனுக்கு கட்டளையிட்டார். டேய், அந்த உருட்டுக்கட்டையை எண்ணையில தோச்சு எடுத்துட்டு வா. மாடனும் தயாராக வச்சிருந்த கட்டையை எடுத்துக் கொண்டு சட்டையை கழட்டி தயாராக நின்றிருந்த பெரியசாமியின் அருகில் சென்று தண்டனையை நிறைவேற்ற கட்டையை ஓங்கினான்.


அது வரை நஷ்ட ஈட்டை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்த சின்னசாமி தலைவரை பார்த்து ஐய்யா ஒரு நிமிஷம், ஒரு வேண்டுகோள், அவரை அடிக்கும் போது, முதுகில அடிக்க வேணாம்னு சொல்லுங்கய்யா. சின்ன வயசில காய் பறிக்க நாங்க ரெண்டு பேரும் மரத்தில ஏறும் போது கிளை ஒடிஞ்சு நான் கீழே விழ இருந்தேன். அப்ப என்னய மேல தூக்கி விட்டுட்டு விழுந்துட்டாரு. விழுந்ததில அவருக்கு முதுகில பலமா அடிப்பட்டு பிறகு முதுகு பலகீனமாயிருச்சு. அதனால முதுகில அடி விழுந்தா அவரு தாங்க மாட்டாரு, முதுகு தவிர வேற எங்க வேணா அடிக்க சொல்லுங்கய்யா என்று நா தழு தழுக்க கூறியதைக் கேட்டு பெரிசாமியின் கண்களும் கலங்கியது.


இதைக் கேட்ட பஞ்சாயத்து தலைவர் புன்னகைத்தவாறே மாடனை திரும்பி வர சைகை காட்டி பேச ஆரம்பித்தார். ஏண்டா, அவனுக்கு அடிச்சா வழிக்கும்னு உன் மனசு வலிச்சு ஒரு சொட்டு கண்ணித் தண்ணி விட்டியே இதுதான் பாசங்கிறது. ரத்த சம்பந்தத்தில வந்த உறவை அந்த ஆண்டவன் இல்ல உங்கள பெத்த ஆத்தா வந்தா கூட அத்து வக்க முடியாது. உறவுங்கிறது நாம வேணுங்கிற போது சேர்த்துகிறதுக்கும் வேணாங்கிற போது கழட்டி விடறதுக்கும் ஒண்ணும் நம்ம கால்ல போடற செருப்பு இல்ல. அது நம்ம உடம்பு தோல் மாதிரி எப்பவுமே கூடவே ஒட்டியேதான் இருக்கும் சாகற வரைக்கும். புத்தி கெட்டு பூமிக்கும், பொருளுக்கும், வெட்டி கெளவரத்துக்கும் காட்டற வீராப்ப விட்டுபுட்டு ஒத்துமையா பொழச்சி இருக்கற வழிய பாருங்கடா என்று கூறி பஞ்சாயத்த முடித்தார்.


பெரியசாமிக்கும் சின்னசாமிக்கும் கூட ஏதோ உறைத்தது போல இருந்தது.

Thursday, November 8, 2007

சரவெடி


என் நண்பர் கரண் "சரவெடி" என்ற தலைப்பைக் கொடுத்து கதை எழுத சொன்னார். கதை எழுத காரணமாக இருந்த நண்பர் கரணுக்கும், மற்ற ஏனைய வாசக நண்பர்களுக்கும் என் குடும்பத்தார் மற்றும் என் சார்பாக "தீபாவளி நல்வாழ்த்துக்கள்".


கையில் இருந்த நூறு ரூபாயை திரும்ப திரும்ப எண்ணிக் கொண்டிருந்த பாலு அப்பாவின் குரல் கேட்டு நிமிர்ந்தான். எலே நூறு முறை இல்ல ஆயிரம் முறை எண்ணுனாலும் நூறு ரூவாதான் இருக்கும், திருப்பி திருப்பி எண்ணுனா நோட்டு என்ன குட்டியா போடும். சீக்கிரம் கடைத்தெருவுக்கு போயி பட்டாசு வாங்கியா. இப்பமே சொல்லிப்புட்டேன், தம்பி தங்கச்சி எல்லாரும் வெடிக்கற மாதிரி கம்பி மத்தாப்பூ, சங்கு சக்கரம்னு வாங்கு. ஆன வெடி பூன வெடின்னு வாங்கிட்டு வந்து நின்ன, அப்புறம் தீவாளி உனக்குதான். நான் இந்த டைய்லர் கடைக்கு போயி துணி வாங்கிட்டு வரதுக்குல்ல வந்துறணும். அங்கிட்டு இங்கிட்டு பராக்கு பார்க்காம சீக்கிரம் வா என்று கூறியவாறே கிளம்பினார். குடுத்தது நூறு ரூவா, இதுல ஆயிரத்தெட்டு கண்டிஷன் வேற, முணகிக் கொண்டே இவனும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். பட்டாசு விக்கிற விலையில மத்தாப்பூ சங்கு சக்கரம் வாங்குனாலே நூறு ரூவா பத்தாது, இதுல எப்படி நாம சரமெல்லாம் வாங்கறது. இந்த வருசமும் எதுத்த வூட்டு நாகராஜு வெடிக்கறத வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் என்று மனதுக்குள் எண்ணியவாறே கடைதெருவை வந்தடைந்தான்.

கடைத்தெருவே களை கட்டியிருந்தது. நடக்கவே வழியில்லை. மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. டேய் பாலு, கூடப் படிக்கும் சேகரின் குரல் கேட்டது. எலே பட்டாசு வாங்க கிளம்பிட்டியாலே. இங்க எல்லாம் வாங்காதே, ஊருப்பட்ட விலை சொல்லுவாங்க பழைய பட்டாச கட்டிருவாங்க. நம்ம பாளையம் அண்னாச்சி பெரிய கடை போட்டிருக்காரு, அங்கிட்டு போ, விலையும் கம்மி, பட்டாசும் புதுசா இருக்கும். சொல்லிக் கொண்டே காற்றாய் மறைந்தான். பாலுவுக்கும் அதுவே சரியெனப்பட்டது. கூட்டத்தில் ஊர்ந்து அண்ணாச்சி கடையை வந்தடைந்தான். ஆளுயரத்துக்கு பலகை கட்டி மேடை போல கடையை போட்டிருந்தார்கள். பட்டாசு எடுத்து குடுத்து பில் போட பல ஆட்கள் மேடை மேல் இருந்தனர். இவனும் அப்பா சொன்ன மாதிரியே மத்தாப்பூ சங்கு சக்கரம் எல்லாம் எடுத்து கூடவே ஒரு ஹண்ட்ரட் வாலா சரத்தையும் எடுத்து குடுக்க சொல்லி கேட்டான். நூத்தி பதினேழு ரூவா ஆச்சு என்றார் பில் போடுபவர். இவன் நூறு ரூபாயை மட்டும் தயங்கிபடியே நீட்டினான். அப்ப இந்த சரம் எல்லாம் வராது, வேணும்னா இந்த ஊசி வெடி ஒரு பாக்கெட் போடறேன் என்று சொல்லி பையில் போட்டு மீதிக் காசை கொடுத்தார். சரி, நமக்கு அவ்வளவுதான் என்று திரும்புகையில் பின்னால் இருந்தவரின் கை பட்டு இவன் கையிலிருந்த பை நழுவி பட்டாசு எல்லாம் கீழே விழுந்து மேடைக்கருகில் ஆங்காங்கே சிதறியது. இவனும் சிதறிய பட்டாசுகளை ஒவ்வொன்றாக எடுத்து பையில் போடும் போதுதான் கவனித்தான் மேடைக்கடியிலும் சில சிதறியிருந்தது. உடனே மேடைக்கடியில் நுழைந்து சிதறிய பட்டாசை எடுத்து பையில் போடும் போதுதான் அவன் கண்ணில் பளபளவென அந்த சரக்கட்டு பட்டது. இது நம்ம வாங்கலியே, தவுசண்ட் வாலா மாதிரி இருக்கே. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து விட்டு அதையும் எடுத்து பையில் போட்டுக் கொண்டு விடுவிடுவென அந்த இடத்தை காலி செய்தான்.

வழியெல்லாம் ஒரே யோசனை. ஒருவேளை அண்ணாச்சி வேற யாருக்கோ போடறத தவறா நம்ம பையில போட்டுட்டாங்களோ. இல்ல நம்மல மாதிரி யாரோ தவற விட்டிருப்பாங்களோ. அப்பா கேட்டா என்ன சொல்றது. இத எப்படி எங்க ஒளிச்சி வைக்கிறது. ஊருக்கு வெளியில் உள்ள பாழடைந்த புளியமர பங்களா உடனே ஞாபகத்துக்கு வந்தது. நண்பர்களுடன் அவ்வப்போது விடுமுறையில் புளி அடிக்க செல்வது வழக்கம். அங்கு யாரும் வசிப்பதில்லை. அதுதான் சரியான இடம். இப்ப வச்சிட்டு நாளைக்கு வந்து எடுத்து அங்கய கூட வெடிக்கலாம். அதுவே நல்ல யோசனையாக பட, வேக வேகமாக நடந்து புளியமர பங்களாவை வந்து அடைந்தான். அங்குள்ள இடிந்த திண்ணை ஒன்றின் அடியில் மறைவாக வைத்து விட்டு திரும்பியவனை ஒரு அதட்டல் குரல் தடுத்தது. யாருலே அது, இங்க என்னலே பண்றே? இல்லண்ணே, புளியங்கா பொறுக்க வந்தேன் என்று கூறிவிட்டு வேகமாக நிற்காமல் ஓட்டமெடுத்தான்.

எலே பழனி, யாருடா அது, பின்னால் தள்ளி வந்து கொண்டிருந்த மணி கேட்டான். யாரோ பொடிப் பையன் புளியங்கா பொறுக்க வந்திருப்பான் போலிருக்கு என்றான் பழனி பதிலுக்கு. சரி அத விடு நீ போன வேலை கச்சிதமா முடிஞ்சுதா? இது மட்டும் சக்சஸ் ஆயிடுச்சுன்னா, அப்புறம் இன்டெர்நேஷனல் லெவல்ல நாம பெரிய ஆளுக ஆயிரலாம் என்றான் மணி. அதெல்லாம் கச்சிதமா முடிச்சுட்டேன், யாரும் பார்க்காத மாதிரி இடத்தில சீக்ரெட்டா வச்சிட்டு வந்திருக்கேன் என்றான் பதிலுக்கு பழனியும். சரி வா, ஒரு ரவுண்ட் போடலாம் என்றவாறே மடியிலிருந்து பாட்டிலை எடுத்து இரண்டு கிளாஸில் ஊற்றினான். கூடவே முனியாண்டி விலாஸ் பிரியாணி பொட்டலத்தையும் பிரித்து வைத்தான். இருவரும் இப்பவே ஒரு லெவலுக்கு போக ஆரம்பித்தார்கள்.

"டமால்" "டமால்" "டமால்". தீவாளி வந்தா இது பெரிய இம்சடா, தூங்கக் கூட முடியாது, டேய் பாலு போய் படுரா என்றார் அப்பா. பாலுவும் அடுத்த நாள் காலை அந்த சரவெடியை எப்படி வெடிப்பது என்று எண்ணிக்கொண்டே தூங்க ஆரம்பித்தான்.

அடுத்த நாள் காலை, ஊரே பரபரப்பாக இருந்தது. லோக்கல் பேப்பரில் தலைப்பு செய்தி கொட்டை எழுத்துகளில் வெளியாயிருந்தது. நகரின் முக்கிய இடங்களில் குண்டு வைத்து தகர்க்க சதி. பழனி, மணி என்ற 2 சமூக விரோதிகள் புளியமர பங்களாவில் நாட்டு குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது, குண்டு தவறி வெடித்து இறந்தனர். குண்டை தவுசண்ட் வாலா பட்டாசு பேக்கில் வைத்து வெடிக்க திட்டம் போட்டுள்ளதாகவும் புலன் விசாரணையில் தெரிகிறது. இவர்கள் பிண்ணனியில் யார் என போலீஸார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள். இதைப் படித்த பாலுவுக்கு மட்டும் தெளிவாக புரிந்தது தான் எடுத்து வந்தது என்னவென்று. அமைதியாக தான் வாங்கி வந்த கம்பி மத்தாப்பை தம்பிக்கு பிடித்துக் காட்ட ஆரம்பித்தான்.

Tuesday, November 6, 2007

குடியானவ ராசா




கிழக்கால கம்மாக்கரை
தண்ணியில்ல வறண்டு போயி
ஆகிப்போச்சு சும்மாக்கரை
மழை பேய்ஞ்சு பல வருசமாச்சு
ஆடு மாடு மேய்ச்சி திரியும் இளவட்டம்
கில்லியாட இடமுமிங்கே தோதாச்சு

மேற்கால மாரியாக் கோயில்
வருசம் கண்டா திருவிழா
அதுக்கொண்ணும் குறைச்சலில்லை
இங்க அரிசி சோத்துக்கே வழியில்லை
ஆனா எம் பொஞ்சாதி
மாவிளக்கு போட மட்டும் தப்பவில்லை

குறுக்கால அரை கிலோ மீட்டர்
கூரை வீடு மச்சி வீடுன்னு
ஊரு ஜனமும் பெருகிப் போச்சு
அப்பன் வழி என் சொத்து
அரை ஏக்கர் மேட்டாங்காடாச்சு
பேருக்குதான் விவசாயி
பயிருக்கே வழியில்லாம போச்சு

காத்தால குடிக்கத்தான்
குளுகுளுன்னு கம்பங்கூழு
பகலெல்லாம் வேர்வை சிந்த
கிழங்கு மில்லு கூலி வேலை
ராவுக்கு உடம்பு நோவு
இருக்குதய்யா
கிளுகிளுன்னு நாட்டு சரக்கு

சாயங்கால வேளையில
பஞ்சாயத்து டிவிதான்
அப்பப்ப கீத்து கொட்டாய்
தரை டிக்கட்டுல சினிமாதான்
எம்.ஜி.ஆர் சிவாஜி போயி
ரஜினி கமலும் வந்தாச்சு
ரேடியோல கேட்ட காலம் போயி
டிவி சீரியலும் வந்தாச்சு

த்தனைதான் மாறினாலும்
எம் பொழப்பு மாறாது
எதிர்பார்ப்பும் ஒண்ணுமில்லை
ஏமாற்றமும் காணவில்லை
ஏன்னா நான் எப்பவுமே
மனசார குடியானவ ராசாதான்

Sunday, November 4, 2007

மூலதனம்


ன்னை இறக்கி விட்ட அரசு விரைவு பேருந்து புழுதி பறக்க போவதை கனத்த மனதுடன் பார்த்தவாறே சேகர் பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். எத்தனை கசப்பான அனுபவங்கள், நினைக்கையில் நடையே தள்ளாடியது, எல்லாம் போச்சு, இனி இந்த கிராமம்தான் நமக்கு கதி. என்னடா போன மச்சான் திரும்பி வந்த கதையா பொட்டி படுக்கையோட வந்துட்டே, வாசலில் கிழவியின் வரவேற்பு. இதுக்குதான் நான் அப்பமே சொன்னேன், வயலைப் பார்துக்கிட்டு எனக்கு ஒத்தாசையா சித்த இருடான்னு கேட்டாதானே எல்லாம் பட்டாதான் புரியும் இது அப்பாவின் பங்கு. அவன வந்ததும் வாராம வாய்க்கு வந்தத பேசாதீங்க, சேகரு நீ போயி கை கால் கழுவிட்டு வாடா, உனக்காக இட்டலி பண்ணியிருக்கேன், சூடா சாப்பிடு என அம்மா மட்டும் அன்புடன் இவன் பங்குக்கு நின்றாள்.

சேகர் துணி மாற்றி கை கால் கழுவிக் கொண்டு அம்மா வைத்த இட்லியை சாப்பிட்டு விட்டு கையித்து கட்டிலில் படுத்து கண் மூடினான். எத்தனை கனவுகளுடன் சென்னை பயணம். ஒரு வருசமாச்சு. ஏறி இறங்காத கம்பெனி வாசலே இல்லை. அனுபவம் இல்லை, இந்த வேலைக்கு உன் படிப்பு கொஞ்சம் அதிகம், இந்த வேலைக்கு நீ அந்த டிரையினிங் முடிச்சிருக்கணுமே என எல்லா இடங்களிலும் பல விதமான பதில்கள். பயோ டேட்டாவை திருவிழா நோட்டீஸ் மாதிரி போட்டோ காபி எடுத்து எத்தனை இடத்தில் குடுத்திருப்பான். ஒவ்வொரு கம்பெனிக்கும் அதற்கேற்ற மாதிரி சிரமம் எடுத்து தனியாக தயார் செய்வான். ஒன்றும் பயனில்லை. யாரோ சொன்னார்கள் என்று தன் தொகுதி எம்.எல்.ஏ-வின் பி.ஏ-விடம் கூட ஒரு 5 காபி குடுத்து வைத்தான். வேலை கிடைத்தால் தனியாக கவனிப்பதாக கூட சொல்லி வைத்தான். ஒன்றும் பயனில்லை. அரும்பாக்கம், அம்பத்தூர் என எல்லா தொழிற்பேட்டை கம்பெனிகளில் இவன் கால் படாத இடமே இல்லை. பேப்பரில் பார்த்த உடனே கட் செய்து செல்வான். ஆனால் அதே புளித்துப் போன பதில்கள். எத்தனை நாளைக்குதான் அப்பன் ஆத்தா காசில காலம் தள்ளறது. இனியும் முடியாது என முடிவு செய்து ஊருக்கே திரும்யிருந்தான்.

டேய், என்னடா பகல் கனவா, எந்திருடா என்றார் அப்பா. வா, இந்த மேற்கு பாறை முனிசாமிய போயி பாத்துட்டு வரலாம், கொஞ்சம் சைக்கிளை மிதி என்று அழைத்தார். இவனும் மறு பேச்சு பேசாமல் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். ஒரு அரை மணி நேரத்தில் முனிசாமியின் வீட்டை அடைந்தனர். இவன் வாசலிலேயே நிற்க, அப்பா உள்ளே சென்றார். ஒரு 15 நிமிடம் இருக்கும் திரும்பி வந்து சரி போலாம்பா என்றார். இவனும் சைக்கிளை மிதித்துக் கொண்டே கேட்டான். இவரை பார்க்க எதுக்கப்பா இவ்வளவு தூரம் வந்தீங்க, ஏதும் கொடுக்கல் வாங்கலா என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லையடா, இந்த முனிசாமி இருக்கானே நல்லா புத்திசாலி. பல இடத்தில கூலி வேலை செய்வான். எந்த பருவத்தில எந்த மண்ணுக்கு என்ன பயிர் போடணும்னு தான் அனுபத்திலய சொல்லிருவானா பார்த்துக்கோயேன். பல இடம் அனுபவம் இருக்கறதுனால அவன் கணிப்பும் ஆலோசனையும் சரியா இருக்கும். நம்ம தோட்டத்தில கூட இப்ப கடலை போட சொல்லி சொல்றான். நீ நாளைக்கே வண்டி கட்டிட்டு போயி நம்ம சொசயிட்டில ஒரு 2 மூட்டை விதை கடலை வாங்கியாந்துரு என்றார். இவனும் தலையை ஆட்டியவாறே ஒரு யோசனையுடனே சைக்கிளை மிதித்தான்.

இரண்டு நாள் இருக்கும், தன் துணி மணிகளை அவசர அவசரமாக அள்ளி எடுத்து பெட்டியில் வைத்தான். அம்மா, நான் சென்னைக்கு போறேன் வேலை விசயமா என்று அப்பா இல்லாத நேரமாக பார்த்து பணத்தை வாங்கி கொண்டு கிளம்பினான். 3 மாதமிருக்கும், மீண்டும் வீடு திரும்பினான். ஆனால் இந்த முறை ஒரு உற்சாகத்துடன் காணப்பட்டான். என்னடா இந்த முறையாவது வேலை கிடைச்சதா என்று அப்பா கேட்டார். வேலை மட்டுமில்லப்பா, 2-3 பேருக்கும் வேலையும் குடுத்திருகேன் என்றவாறே தன் விசிட்டிங் கார்டை காண்பித்தான். வெஸ்ட் ராக் வேலை வாய்ப்பு ஆலோசனை மையம் என்றிருந்தது. ஆமாம்பா, சென்னையில இருந்த ஒரு வருச காலத்தில எனக்கு எல்லா கம்பெனியும் அத்துப்படி, எங்க எந்த மாதிரி வேலைக்கு ஆள் எடுக்கிறாங்க, எப்படி பயோ-டேட்டா எழுதறதுன்னு எல்லாம் தெரியும். இந்த ஒரு வருச அனுபவத்தயே மூலதனமாக்கி நானே இப்ப கம்பெனி ஆரம்பிச்சிட்டேன். நிறைய பசங்க படிச்சி முடிச்ச உடனே எங்களை தேடி வராங்க. நாங்களும் அவங்களுக்கு எப்படி எந்த மாதிரி வேலை தேடறதுன்னு ஆலோசனை குடுக்கறோம், நல்ல வருமானமும் கூட என்றான். நீ நல்லா இருந்தா சந்தோசமடா, சரி, இந்த சைக்கிளை கொஞ்சம் மிதி இந்த மேற்கு பாறை முனிசாமிய போயி பாத்துட்டு வரலாம், கடலைக்கு அப்புறம் என்ன பயிரிடலாம்னு கேட்டுட்டு வந்திரலாம் என்றார். இவனும் சந்தோசமாக சைக்கிளை மேற்கு பாறையை நோக்கி மிதிக்க ஆரம்பித்தான். அவன் சட்டை பையில் வெஸ்ட் ராக் விசிட்டிக் கார்டும் ஆடிக் கொண்டிருந்தது.

Saturday, October 27, 2007

கேவல அரசியல்



முன்னாள் முதல்வர் வீட்டிலேயே அத்து மீறி ஆள் நுழைந்திருக்கிறான். ஆளைப் பிடித்து விசாரணையும் நடக்குது. பாதுகாப்பு விசயத்தில் இருக்கும் இந்த குறை வருத்தப்பட வேண்டிய விசயமே. ஆனாப் பாருங்க, கரும்பு தின்ன கூலியாங்கற கதையா இந்த அரசியல்வாதிங்க இத வச்சி எவ்வளவு அட்டகாசம் பண்றாங்க. இந்த கழகம், அந்த கழகம்ன்னு இல்ல எந்த கட்சியா இருந்தாலும் இதயேதான் செய்வாங்க. ஏன்னா, இது நம்ம ஆளுங்களோட தனி அரசியல் ஸ்டைலு.
குளிர்கால சட்டசபை தொடர் தொடங்கியாச்சு, சட்டசபைக்கு போயி எங்க ஊரு எம்.எல்.ஏ ஏதாச்சும் தொகுதிக்கு சாதிப்பாருன்னு எதிர்பார்த்து கிடக்கிற குப்பன் சுப்பனுக்கெல்லாம் வச்சாங்கய்யா ஆப்பு. தொடர் தொடங்கின உடனே பாதுகாப்பு பிரச்சினையை ஆரம்பிச்சாங்க. ஒத்துக்கிறோம், கண்டனத்துக்குறிய விசயம்தான். குரல் குடுக்கிறாங்க. அரசும் ஆளைப் பிடிச்சு விசாரிச்சுக்கிட்டிருக்கு. சரி அடுத்த வேலைய பார்ப்பாங்கன்னு பார்த்தா, சட்டசபைல விளையாடறாங்கய்யா. கடைசில முடிவு வெளிநடப்பு, சஸ்பெண்ட் இதுதான் மிச்சம்.
ஒரு நிமிஷம் இந்த ஆளுங்க எல்லாம் சிந்திக்கணும். ஒவ்வொரு எம்.எல்.ஏவும் அரசாங்க ஊழியன். அரசு சம்பளம், குடியிருப்பு, அப்புறம் சலுகைகள் வேற எக்ஸ்ட்ரா. மக்கள் வரிப் பணத்திலிருந்து கிடைக்கிற வருமானத்திலுருந்து வர பணத்தை சம்பளமா கை நீட்டி வாங்கற ஊழியன் தன் கடைமைய சரி வர செய்யாம, காலத்துக்கும் தலைவன் தலைவி புகழ் பாடி காலம் கழிப்பது சரியல்ல. முதல்வரோ இல்ல மந்திரியோ போகும் போது சாலை ஓரம் போக்குவரத்த தடுத்து நிறுத்தறாங்க. மாணவர்கள், வயதானவங்க, முடியாதவங்க, ஏழை, பணக்காரன்னு பொதுமக்கள் எல்லாரும் வழி விட்டு காத்து கிடக்கிறாங்க. எதுக்குய்யா? நம்மலால தேர்ந்து எடுக்கப்பட்டவர், நமக்காக வேலை செய்ய போயிட்டிருக்கார்ன்னு நாம் குடுக்கற முன்னுரிமைதான் அது. அதை சரியா புரிஞ்சிக்காம பொதுமக்களின் மனங்களை சூறையாடி, சுரண்டி அதில குளிர் காயும் இந்த கேவலமான அரசியல் நிலைமை மாறணும்.
மாறும் என்ற நம்பிக்கையில் ...

Tuesday, October 23, 2007

ஆயிரத்தில் ஒருவன்


ன்று ஆயுதபூஜை. மாலை நேரம் அந்த ஏரியாவே கலகலப்பாக இருந்தது. அண்ணா, அண்ணா இன்னும் கொஞ்சம் பொரி போடுங்கண்ணா. டேய், நீ முதல்லய வாங்கிட்ட அந்த பக்கம் போடா. எலே, பெரிய பட்டறைல பொரியோட சேர்த்து பொங்க சோறும் குடுக்கறாங்கலாம் என்று இன்னொரு குரல். அந்த கூட்டத்தோடு சேர்ந்து ரகுவும் வேகவேகமாக நடையைக் கட்டினான். இன்னும் ரெண்டு பட்டறையை பார்த்தா பை நிரம்பிரும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கூட்டத்தில் முண்டியடித்து பையைக் காட்டி பொரி வாங்கினான்.


ஒரு வழியாக பை நிரம்பியடவுடன் தன் சகாக்களுடன் ஒரு திண்ணையில் அமர்ந்தான். எல்லோரும் அவர்களுடைய பையை திறந்து கொறிக்க ஆரம்பித்தனர். அனைவரின் முகத்திலும் சந்தோசம். டேய், இன்னிக்கி ராத்திரி நம்ம பெரிய பட்டறையில வீடியோவுல தலைவர் படம் போடுறாங்களாம், எல்லாம் போலாம்டா என்றான் சேகர். ஆளப் பார்ரா, இன்னும் ஒரு ரவுண்ட் போயி பொரி வாங்கலாம்டா என்றான் இன்னொருவன். எதுவும் பேசாமல் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு சாப்பிடுவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தான் ரகு. என்னடா ரகு, ஒரே யோசனையா இருக்க? நீ சாப்பிடலயா என்றான் சேகர். இல்லடா, வீட்டுக்கு போலாம்னு பார்க்கிறேன் என்றான் ரகு பதிலுக்கு. வீட்டுக்கு போயி என்னடா பண்ணப் போற, நாங்களாவுது பள்ளிக்கூடம் போகணும், அனாதை ஆசிரமத்துல எடுபிடி வேலை பார்க்குற உனக்கு என்னடா அவசரம் என்றான் சேகர் கிண்டலாக. டேய் ரகு இப்ப சாப்பிடலனா பொரி, சுண்டல் எல்லாம் நாளைக்கு நமுத்து புளுத்து போயிருமடா என்றான் இன்னொருவன். மற்ற நண்பர்களும் இதை கேட்டு ரகுவை பார்த்து நக்கலாக சிரித்தனர். ரகு எதையும் காதில் வாங்காமல், மேனேஜர் தேடுவார், நான் போறேன் என்று யார் பதிலுக்கும் காத்திராமல் விருட்டென அந்த இடத்தை காலி செய்து ஒருவழியாக ஆசிரமத்தை வந்து சேர்ந்தான்.


எதிர்பார்த்த மாதிரியே மேனேஜர் ஆறுமுகம் எதிரில் வந்தார். எங்கடா போயிருந்தே என்று அதட்டலாக கேட்டார். இங்கதான் சார் இருந்தேன், நம்ம பக்கத்து நூல் மில்லுல இருந்து ஒரு பை நிறைய பொரியும் சுண்டலும் ஒரு ஆள் மூலமா குடுத்தாங்க, இந்தாங்க சார் என்று கையிலிருந்த பையை காண்பித்தான். அதான பார்த்தேன், பூஜையும் அதுவுமா எங்க உன் கூட்டாளிகளோட சேர்ந்து பொரி வாங்கி தின்ன போயிட்டியான்னு பார்த்தேன். சரி, இதை எல்லாம் சரியா பிரிச்சு இங்க உள்ள எல்லா பயலுகளுக்கும் குடு. அப்படியே பார்த்துக்கோ, நான் இந்த பெரிய பட்டறை வரைக்கும் போயிட்டு வர கொஞ்சம் லேட்டாவும் சரியா என்று கூறி விட்டு தன் சைக்கிளை மிதித்தார். ரகு ஆபிஸ் ரூமிலுள்ள சரஸ்வதி படத்துக்கு முன் தான் கொண்டு வந்த பொரியை படைத்து எல்லா மாணவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து தானும் ஒரு வாயை அள்ளி போட்டான். எதையோ சாதித்து விட்ட திருப்தியுடன் சாமி படத்தை பார்க்கும் போது சரஸ்வதி இவனை பார்த்து கருணையுடன் சிரிப்பதாக உணர்ந்தான்.

Tuesday, October 2, 2007

நேசிக்கிறேன் ...


ன் 3-வயது மகளுடைய பள்ளியில் "Family Value"
பார்ட்டியின் போது "I Love You Forever" என்ற தலைப்பிட்ட
சிறுவர் கதை படித்துக் காட்டினார்கள்.
அந்த கதை, இங்கே கவிதை உருவில்,

னக்கு பசிக்கையிலே
பாலூட்டி சோறூட்டினேன்!
உன் பொக்கை வாய் சிரிப்பிலே
என் பசி மறந்து போனேன்!
நீ தூங்க நான் தாலாட்டினேன்!
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

சிங்காரமாய் வளர்ந்தாய்
குறும்புகள் பலவும் செய்தாய்!
நானே சாப்பிடுகிறேன் என்று
வீடெல்லாம் இறைத்து
என்னை கோபமுற செய்தாய்!
அதை மறந்து தினமும்
நீ தூங்க நான் கதை படித்தேன்!
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

ளாகி வாலிபனாக
எங்கெங்கோ சென்றாய்!
புது சகவாசம் கொண்டாய்
தாமதமாக வீடு திரும்பி
என்னை வருத்தப்படவும் செய்தாய்!
அதை மறந்து தினமும்
நீ தூங்கியவுடன் மனதில் சொன்னேன்!
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

ல்யாணமாச்சு, பக்கத்து தெருவில்
தனி வீடும் போனாய்!
உனைப் பார்க்க ஆசை
நானும் வந்தேன்!
நீ தூங்கிப் போயிருந்தாய்
அதைக் கண்டு திரும்பி வந்தேன்!
வழியில் எனக்குள் சொல்லிக் கொண்டேன்
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

னக்கு வயசாச்சு
படுத்த படுக்கையானேன்!
உனைப் பார்க்க ஆசை
ஆசையில் உனை அழைத்தேன்!
நீ வரும் நேரம்
நான் தூங்கிப் போனேன்!
அதைக் கண்டு நீயும் தாலாட்டினாய்
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு அம்மாவே!

Monday, September 24, 2007

கானா பாட்டு ஜோரு



கானா பாட்டு ஜோரு
கத்திரி வெயிலு மோரு
மெட்ராசுதான் ஊரு
பாடி வச்சேன் பாரு

காத்து வாங்க பீச்சி
வாடா போலாம் மச்சி
காந்தி கையில குச்சி
குச்சி மேல பட்சி
கூவி விக்கிறான் பஜ்ஜி
தொட்டுக்கத்தான் சொஜ்ஜி

நிக்குது பாரு காரு
காருக்குள்ள யாரு
பக்கத்து ஊட்டு பிகரு
கூட ஆளு யாரு
கூலிங் கிளாஸ் சாரு
நம்ம கணக்கு வாத்தியாரு

டலுக்குள்ள மீனு
கரைக்கு மேல பொண்ணு
மீனப் போல கண்ணு
பார்க்க சொல்ல மானு
பேரக் கேட்டேன் நானு
பேரு சொன்னா பானு
மாமா வந்தா ரன்னு
இல்ல மாட்டிக்கிட்டா டின்னு

Wednesday, September 19, 2007

"கிறுக்கு" கோயிந்தன்


ன்புள்ள MLA அய்யாவுக்கு, நல்லா இருக்கீங்களா? நான்தான் கிறுக்கு கோயிந்தன். என்ன உங்களுக்கு நெனவுல இருக்குதா இல்லியான்னு தெரியில? நான்தான் உங்களோட 8-ங் கிளாஸ் வர படிச்ச கோயிந்தன், நாங்கூட கிறுக்கி கிறுக்கி எழுதறதால நீங்க எனக்கு கிறுக்கு கோயிந்தன்னு பட்டப் பேரு கூட வச்சீங்க இல்ல, இப்ப ஞாபகம் இருக்கும்னு நெனக்கிறேன். போன வாரம் நீங்க பக்கத்து ஊருக்கு நம்ம கட்சி கொடி கம்பம் திறப்பு விழாவுக்கு வந்தப்ப அப்படியே நம்ம கிராமத்துக்கும் வருவீங்கன்னு எல்லாரும் சொன்னாங்க, நானும் அன்னிக்கி வேலைக்கு போவாமா காத்து கிடந்தேன். அப்புறம் அடுத்த நாள் பேப்பர்ல பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன், உங்களுக்கு வயித்து வலின்னு, அப்படியே திரும்பிட்டீங்கன்னு. உடம்ப பார்த்துக்கோங்கய்யா, நீங்க நல்லா இருந்தாத்தான் நாங்க நல்லா இருக்கு முடியும். நீங்கதான் அப்பமே படிக்கறப்பவே நல்லா பேசுவிங்களே, அதான் MLA ஆயிட்டீங்க, நான் அப்படியே இந்த ஒண்ணரை ஏக்கர் வறண்ட பூமிய பாத்திகிட்டு வெவசாயமே கதின்னு ஆயிட்டேன். இப்பமெல்லாம் மொத மாறி மழை இல்லீங்க, பயங்கர வெயில், நம்ம பூமியே வறண்டு போச்சு. அங்க மெட்றாசுல எப்படீங்க, நல்ல வெயிலு அடிக்குமா? மத்தியான வெயில்ல எல்லாம் வெளிய போகாதீங்க, உங்க ஒடம்புக்கு எல்லாம் அது சரிப்படாது. இங்க நம்ம கெணத்துல தண்ணி எல்லாம் வத்திப் போச்சிங்க. மொத மாறி இல்ல, சொன்னா மானக்கேடு, தண்ணிய இப்பமெல்லாம் வெல கொடுத்து வாங்கறோம். தோட்டத்தில இருக்கற கொஞ்சம் பன மரத்த அப்படியே பாதுகாத்து வச்சிருக்கேன். நம்ம கட்சில மறியல் அது இதுன்னா அப்படியே மரத்த சாய்ச்சிரலாம் பாருங்க அதுக்குதான். போன முறை நம்ம சாதிக்காரங்க நடத்தின போராட்டத்துக்கு கூட 2 மரத்த சாய்ச்சு ஜமாய்ச்சிட்டேன். ஒரு வண்டி கூட போகலன்னா பார்த்துக்கோங்க. கட்சி ஆளுங்க உங்ககிட்ட சொல்லியிருப்பாங்கன்னு நெனக்கிறன். மத்தபடி பெருசா ஒண்ணும் விளைச்சல் இல்லீங்க, ஏதோ கிழங்கு, கடலைன்னு அப்பப்ப மழை பேஞ்சா போடறதுதான். நெல் எல்லாம் நினச்சி கூட பாக்க முடியாது. ஊட்ல தினமும் சோளக் கஞ்சிதாங்க. அதுதான் நமக்கு எல்லாம் கட்டுபடியாவும். இல்லைன்னா கூலி வேலைதான். பசங்க 2 பேரும் வளந்துட்டானுங்க. சின்னவனுக்குதான் இடது கை கொஞ்சம் சரியா இல்லை. அது வேற ஒண்ணும் இல்லீங்க, போன வருஷம் நம்ம கட்சில எல்லாரையும் பச்ச குத்திக்க சொன்னாங்க இல்லியா, அப்ப நம்ம ஊட்ல எல்லாத்துக்கும் குத்த சொன்னேன். சின்னவனுக்கு அது சேருல, காச்ச வந்து, அப்படியே அந்த கை விளங்காம போயிடுச்சு. அப்பமும் பாருங்களேன், கையில பச்சை அருமியா வந்திருக்கு. தூரம் கட்டி பார்த்தா கூட கொடி பளிச்சுன்னு தெரியும். அவனுக்கு பீச்சாங்கைதான் இப்படி, சோத்துக்கை நல்லா இருக்கு. சோறுன்னதும் ஞாபகத்து வருது. 2 மாசத்திக்கு முன்னாடி கட்சி மாநாடுன்னுன்னு சொல்லி லாரில ஏத்திகிட்டு போயி ஆட்டுக்கறி பிரியாணி பொட்டலம் குடுத்தாங்க, ரொம்ப அருமியா இருந்தது. நம்ம கட்சி நம்ம கட்சிதாங்க. கவனிக்கறதுல நம்மல யாரும் அடிச்சிக்க் முடியாது. அப்புறம் பாருங்க, என்னோட புராணத்தய சொல்லிகிட்டு இருகேன், அங்க நீங்க ரொம்ப பிசியா இருப்பீங்கன்னு நெனக்கிறேன். MLAன்னா சும்மாவா, எத்தன மீட்டிங், சட்டசபை, கம்யூட்டர்னு எம்புட்டு வேலை. பாவம் ஒத்த ஆளா நீங்க எவ்வளவு வேலையதான் பார்ப்பீங்க. எதோ வறண்ட பூமிக்கு இப்பமெல்லாம் மான்யம் குடுக்கறாங்கலாமே, நிசந்தானுங்களா. அப்படி எதுனாச்சும் இருந்தா சொல்லுங்கய்யா. ஏதாவது ஆட்டு லோன், மாட்டு லோன் இருந்தாலும் சொல்லுங்க. நான் ஒரு கிறுக்கன், உங்களுக்கு இருக்கற பல வேலையில என் சுயநலத்துக்கு உதவி கேட்கறன் பாருங்க. போன வாரம் இந்த எதுத்த கட்சி மாரிமுத்து உங்கள பத்தி தப்பா பேசிட்டான். அப்பமே அவன் கைய எடுத்திரலாம்னு பார்த்தேன் அதுக்குள்ளார நம்ம பசங்க வந்து தடுத்துட்டானுங்க. உங்க காதுக்கு இந்த விசயம் வந்தா ஒண்ணும் வருத்தபடாதீங்க, அடுத்த மாசம் திருவிழாவில அவன நான் பார்த்துக்கிறேன். உங்கள பார்த்து கூட ஒரு 4 வருசம் இருக்குங்களா? ஏதோ எலக்சன் வருதுன்னு பேசிக்கிறாங்க. அப்ப உங்கள கண்டிப்பா பார்த்திரலாம். நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க, இப்ப நம்ம 2 பசங்களுக்கும் கண்ணாலம் ஆயிருச்சு, எல்லாம் சேர்த்தி நம்ம ஊட்லய 6 ஓட்டு ஆச்சு, நம்ம சம்மந்தி ஊட்டு ஓட்டும் உங்களுக்குதான். பொண்ணு குடுத்திருக்கானுங்க இல்ல, நம்ம சொன்னா கேட்பாங்க. நீங்கதான் திரும்பி MLA எவனும் அசச்சிக்க முடியாது. ஒடம்பு நல்லா வச்சிக்கங்கய்யா, நீங்க நல்லா இருந்தாத்தான் நாங்க நல்லா இருக்க முடியும்.

- தங்கள் உண்மையுள்ள,
"கிறுக்கு" கோயிந்தன்

"மக்கள் ஆட்சி முறையில் நம்பிக்கை கொண்டு தான் சார்ந்த கட்சிக்கு விசுவாசமான விவசாய குடியானவனின் கிறுக்கல்"

Sunday, September 16, 2007

பேட்டை துள்ளி ...

    "நீங்க கன்னி சாமி வேற, மலைக்கு போயிட்டு வந்தவுடன் கண்டிப்பா மாற்றம் தெரியும் பாருங்களேன்" என்று சண்முகம் சொல்வதை ஊர் தலைவர் நவநீதகிருஷ்ணன் அமைதியாகக் கேட்டு கொண்டிருந்த போதே டெலிபோன் மணி ஒலிக்கத் தொடங்கியது. "நல்ல சகுணம்" என்று கூறியவாறே போனை எடுத்தவருக்கு கோயில் குருக்கள் சொன்ன செய்தி இடியாய் ஒலித்தது. உடனடியாக அப்துல்லாவைக் கூட்டி வர ஆளை அனுப்பினார். "சாமியே சரணம்" என்று மனதில் கூறி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நவநீதகிருஷ்ணன் அப்துல்லாவைப் பார்த்து கேட்டார். "உம்ம புள்ள அன்வர் பண்ண காரியத்த பார்த்தீரா?". "ஏதோ படிச்ச புள்ள, தெரியாம பண்ணிட்டான், கொஞ்சம் பொருத்துக்கோங்க" என்றார் அப்துல்லா பரிதாபமாக. "என்னய்யா படிச்ச புள்ள, என்னதான் தாயா புள்ளையா பழகினாலும் எங்களோட பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விட்டு குடுக்க முடியாது, தெரியுமா? ஆராய்ச்சி குறிப்பு எடுக்கறேன்ற பேர்ல அவன் எங்க கோயிலுக்குள்ள போனது பெரிய தப்பு, இதுக்கு உண்டான தண்டனையை கொடுத்தே ஆகணும். நான் இன்னிக்கு மலைக்கு போறேன், வந்து இந்த பஞ்சாயத்தை வச்சிக்கிறேன்" என்றவாறே விருட்டெனக் கிளம்பி போனார்.

  இது அவருக்கு முதல்மலை, அன்று இரவு அன்னதானம் எல்லாம் தடல்புடலாக முடிந்து, நவநீதகிருஷ்ணன் தன் குழுவுடன் பயணப்படும் போது நள்ளிரவைத் தாண்டி விட்டது. ஆனால் அவர் மனது இன்னமும் அன்வருக்கு என்ன தண்டனைக் கொடுப்பது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. "மலையிலிருந்து வந்ததும் முதல்ல கோயிலுக்கு வெள்ளை அடிச்சு குருக்களிடம் சொல்லி கும்ப அபிஷேகம் பண்ணிடனும், இதுக்கு உண்டான எல்லா செலவையும் அன்வரையே குடுக்க சொல்லணும், அதுதான் சரியான தண்டனை" என்று முடிவு செய்து அப்படியேத் தூங்கிப் போனார்.

    காலையில் அனைவரும் எருமேலி வந்து அடைந்தனர். இவர் கன்னி சாமி என்பதால், கண்டிப்பாக பேட்டை துள்ள வேண்டும் என குருசாமி சொல்லியிருந்தார். இவரும், "சாமியே அய்யப்பா" என பேட்டைத்துள்ளி ஆடிக்கொண்டே தன் குழுவினரைத் தொடர்ந்து சென்றார். ஒரு இடத்தில் எல்லா சாமிகளும் வரிசையாக உள்ளே சென்று வந்து கொண்டிருந்தனர். பக்கத்திலிருந்தவரிடம் மெல்ல கேட்டார், "என்ன சாமி இது, மசூதி மாதிரி இருக்கு, இங்க எல்லாம் போகணுமா?". "அட, நீங்க கன்னி சாமி இல்லயா, அதுதான் விவரம் தெரியல, இதுதான் வாவர் சன்னதி, வாவரும் அய்யப்பனும் தோழர்கள், எல்லா அய்யப்ப பக்தர்களும் வாவர் சன்னதிக்கு போயிட்டுதான் மலையே ஏறுவாங்க" என விளக்கம் அளித்தார். நவநீதகிருஷ்ணனுக்கு யாரோ பொறியில் அடித்த மாதிரி இருந்தது, அந்த சாமி சொன்னதைக் கேட்டுக் கொண்டே உள்ளே சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்தார். வெளியே வரும் போது முஸ்லீம் பெரியவர் ஒருவர் எல்லா சாமிகளுக்கும் விபூதிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்துல்லாவே அங்கு நின்று, "என்ன சாமி நல்லா இருக்கீங்களா?" என்று கேட்பது போல இருந்தது. "மலைக்குப் போனால் மாற்றம் தெரியும்" என சண்முகம் கூறியது சரிதான் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். ஊருக்குப் போனவுடன் தன் முழு செலவில் கோயிலுக்கு வெள்ளை அடிச்சு குருக்களிடம் சொல்லி "அய்யப்பன்-வாவர்" பூஜை ஏற்பாடு செய்து அப்துல்லா சமூகத்தையும் அழைத்து அமர்க்களப்படுத்த வேண்டும் என முடிவு செய்து குழுவினரைத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

Wednesday, September 12, 2007

மேஜர் - மைனர்


ன்று காலையில் அந்த தந்தி கடிதம் வந்தது முதலே கலெக்டர் ராமமூர்த்தி மிகவும் டென்ஷனாக இருந்தார். டவாலி கொண்டு வந்த காபிஆறி ஆடை கட்ட ஆரம்பித்தது. "மிக அவசரம்" என்று கொட்டை எழுத்தில் தலைப்பிட்ட அந்த தலைமை செயலக கடிதம் மின் விசிறி காற்றில் மேஜை மீது இன்னமும் படபடத்துக் கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை கடிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார். தங்கள் மாவட்டதிற்குட்பட்ட மேலபுரத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது இரு மதத்திலும் உள்ள இளைஞர் அமைப்புகள் கலவரம் ஏற்படுத்த திட்டம் தீட்டியுள்ளதாக ரகசிய புலனாய்வு அறிக்கை வந்துள்ளது. ஆகவே வழக்கத்திற்கு மாறாக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் - தலைமை செயலாளர்.

மேலபுரம் இந்து முஸ்லீம் ஏறக்குறைய சமமாக வாழும் ஊர். விநாயகர் சதுர்த்தி என்றாலே மாவட்ட நிர்வாகம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது வழக்கம். இந்த முறை மேலபுரம் இந்து மதத்தினர், சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாடுவதில் போஸ்டர் எல்லாம் அடித்து தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் இப்படி ஒரு விசயத்தை எப்படி கையாள்வது, ராமமூர்த்திக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது. போனை போட்டு போலீஸ் கண்காணிப்பாளர் ஆறுமுகத்தை அழைத்து அவசரத்தை சொல்லி உடனே வர சொன்னார். அடுத்த அரை மணியில் ஆறுமுகம் வந்தார்.

என்ன, எஸ்.பி, இரண்டு மதத்திலும் உள்ள முக்கிய தலைவர்களை அழைத்து நிலைமயை விளக்கி பேசிரலாமா? என்றார். இல்ல சார், விசயம் வெளிய தெரிஞ்சு விஷமிகள் உஷாராயிடுவாங்க, பேசாம ரெண்டு குரூப்லயும் சந்தேகப்படற ஆளுங்கள தூக்கி உள்ள வச்சிரலாம் என்றார் ஆறுமுகம். நோ, நோ, விஷேச சமயங்களில் அப்படி பண்ணா சரியா இருக்காது, அது இன்னமும் வேகத்தைதான் அதிகரிக்கும் என்றார் ராமமூர்த்தி. இதற்கிடையில் அவர் செல்போன் சிணுங்கியது, அடுத்த முனையில் அவரது 5 வயது மகள் வந்தனா. அப்பா, மேஜர்-க்கு எதிர் வார்த்தை என்னா? என்றாள். மைனர்-ம்மா, இங்க பாரு, அப்பா முக்கிய வேலயா இருக்கேன் கொஞ்ச நேரத்துக்கு கூப்பிட வேணாம் என்று செல்லமாக கடிந்து போனை வத்தார்.

போனை வத்தவுடன் அவரது முகம் பளீரென மலர்ந்தது. அதுதான் சரியான வழி, இன்டெர்காமில் தன்னுடைய பி.ஏவை அழைத்தார். அந்த மைனாரிட்டி யூத் வெல்பேர் (சிறுபாண்மை இளைஞர் நலன்) நிதி வழங்கும் விழாவை வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வச்சிரலாம். குறிப்பா, மேலபுரத்தில் வசிக்கும் எல்லா முஸ்லீம் இளைஞர்களுக்கும் பதிவு தபால் அனுப்பி வர சொல்லுங்க, நான் இன்னிக்கே அதுக்கு உண்டான நிதியை ஒதுக்கிடறேன் என்று உத்தரவிட்டார். தலை வலி விட்டது போல இருந்தது, வீட்டுக்கு போகும் போது வந்தனா குட்டிக்கு பிடிச்ச ஸ்ட்ராபெரி கேண்டி வாங்கிட்டு போகணும் என்று நினைத்துக் கொண்டே கிளம்ப தயாரானார்.

Tuesday, September 11, 2007

தமிழ் மொழியும் அரசியல்வாதியும்


மிழ் மொழி எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமான விசயம் தெரியுங்களா? நம்மாளு மொழி, இனம் அப்படின்னா அப்படியே உணர்ச்சி வசப்பட்டுருவான். அதுக்காக எதையும் தியாகம் பண்ண தயார் ஆயிருவான். இந்த ஒரு விசயத்த நம்மூர் அரசியல்வாதிங்க அவங்க சுயநலனுக்காக உபயோகப்படுத்த எந்த காலகட்டத்திலும் தவறியதே இல்லை. பழுத்த கட்சியிலிருந்து இருந்து இன்னிக்கி புசுசா முளைத்த கட்சிகள் வரை நம்ம பொதுஜனத்த இந்த விசயத்தில எந்த அளவுக்கு சுரண்டியிருக்காங்கன்னு நான் ஒண்ணும் புசுசா சொல்ல தேவையில்லை. ஒரு விசயமும் இல்லன்னா தமிழ் மொழிய கையில எடுத்திருவாங்க. மொழி வளர்க்கிறோம், பிற மொழி இருக்கக் கூடாது அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு போராட்டம். ஒரு வடக்கத்தி லாரி டிரைவர் வழக்கமா இங்கே மதுரைக்கு பக்கத்தில சவாரி வருவார். ஒரு முறை அப்படி வரும் போது கவனிச்சி இருக்காரு, நெடுஞ்சாலைகளில் இருந்த மைல்கல்ல இருந்த இந்தி பேரு தார் பூசி அழிச்சிருங்காங்க. அதப் பார்த்துட்டு கேட்டாரு, வெள்ளக்காரன் கொண்டு வந்த ஆங்கிலத்த வச்சிருக்கீங்க, நம்ம பாரத பொது மொழி இந்திய அழிச்சியிருக்கீங்களேன்னு, இப்படியே போனா ரூபாய் நோட்டுல இருக்கறதயும் அழிப்பீங்களா, இல்ல உபயோகப்படுத்தாம போயிருவீங்களான்னு கேட்டாரு. நம்ம அரசியல்வாதியோட திருவிளையாடல அவருக்கு விளக்கி சொன்னா புரியவா போகுது. அத விடுங்க, சமீபத்தில நம்ம தமிழக அரசு தமிழ் மொழிய பாதுகாக்கணுங்கற ஆர்வத்தில ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதாவது, தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று. இன்னிக்கி வரி ஏய்ப்பு செய்றவன் பட்டியல் போட்டா முக்கால்வசிக்கு மேல திரைப்படத்துறையில் இருக்கறவங்கதான் இருப்பாங்க, அவங்களுக்கு மேலும் ஒரு சலுகை. ஏன்யா? இதுல யாருக்கு நஷ்டம், பொதுஜனத்துக்குத்தானே, இந்த வரி சலுகையினால நம்ம கஜானா மேலும் காலி, அதை சரிகட்ட பொதுஜனத்து மேல வேறவிதமா வரி பாயும். ஒரு நண்பர் சொன்னாரு, தமிழ்-ல பேர் வச்சா பாராட்டுங்க, வரி சலுகை வேண்டாம், தமிழ் மொழி அல்லாத பேர் வச்சா இரட்டை வரி போடுங்க. பேர் வைக்கவும் பயப்படுவாங்க, அரசாங்கத்துக்கு வருமானமும் கிடைக்கும். அதுல தமாசு பார்த்தீங்கனா, பொறுக்கி, கெட்டவன் அப்படீனு எல்லாம் பேர் வச்சி வரி சலுகை வாங்கறாங்க, கேட்டா இதுவெல்லாம் தமிழ் பெயர். இந்த அரசியல்வாதிங்க இத எல்லாம் விட்டுட்டு சிவாஜிங்கற பேர் தமிழா இல்லையா? வரி சலுகை குடுக்கலாமா வேண்டாமான்னு விவாதம் பண்ணிக்கிட்டு நேரத்த வீணாக்கிட்டு இருக்காங்க. பாரத பிரதமர் தொலைகாட்சியில பேசறாரு, எங்க ஊரு பெருசுக்கு ஒண்ணும் புரியல. ஆனா, பிரதமர் பக்கத்தில இருக்கற நம்ம உள்ளூரு அரசியல்வாதியோட புள்ளய பார்த்துட்டு என்னமா சந்தோசப்படறாரு தெரியுமா? வாரிசு, குடும்பம்னு வாழையடி வாழையா இவங்களே குத்தகை எடுத்துகிறாங்க. அவங்க புள்ளங்க எல்லாம் வட மொழியில சர்வ சாதாரணமா பேசுவாங்க, அப்பதான டெல்லியில பொழப்பு நடத்த முடியும். நம்ம பொதுஜனம் ரயில் ஏறி கும்மிடிபூண்டி எல்லைய தாண்டினா, பெப்பே நமக்கு ஊமை பேச்சுதான். அரசியல்வாதிகளுக்கு எங்க எப்படி உணர்ச்சிபூர்வமா தாக்கணும்னு தெரியும், சரியா அடிக்கிறான், சாதிக்கிறான். இந்த நிலைமை மாற வேணும். இந்த விச காய்ச்சல் எல்லாருக்கும் பரவாம நம்மல நாமே தடுத்துக்கணும். சிந்தியுங்க, சரின்னு பட்டா, நமக்கு தெரிஞ்ச நாலு பொதுஜனத்துக்கு சொல்லுங்க ...

Sunday, September 9, 2007

ஊருக்குதான் உபதேசம் ...


ங்கும் தமிழ், எதிலும் தமிழ், எல்லாரும் தமிழில்தான் பேச வேண்டும், இனி சோறு போடுன்னுதான் கேட்கணும், சாதம் போடுன்னு யாரும் சொல்லகூடாது என காரசாரமாக பேசி முடித்தார் அழகுதாசன். கூட்டம் பலமாக கை தட்டி ஆர்ப்பரித்தது. அடுத்து கட்சித் தலைவர் தமிழ்மாறன் பேச வந்தார். அழகுதாசனை எனக்கு இளம்பிராயம் முதல் தெரியும். அவங்க அம்மா வச்ச சுந்தரதாஸ் என்ற பெயரையே தன் தமிழ் ஆர்வத்திற்காக அழகுதாசன் என மாற்றிக் கொண்டவர். அவர் முன்னிருத்தி நடத்தும் இந்த பிற மொழி அழிப்பு போராட்டத்திற்கு ஊரார் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் என கூறி அமர்ந்தார். கூட்டம் முடிந்து வட்டம், ஒன்றியம் என அந்த பகுதி கட்சி நிர்வாகிகள் தலைவரிடம் பேச காத்திருந்தனர். அழகுதாசன் முறை வந்தது. என்னய்யா அழகு? பேச்செல்லாம் அசத்தலா இருந்தது, உனக்கு கட்சியில பெரிய எதிர்காலம் இருக்கு, கடுமையா உழைக்கணும், அப்புறம் சொல்லு, குடும்பம் எல்லாம் எப்படி இருக்கு என்றார். உங்க ஆசியில எல்லாரும் நல்லா இருக்காங்கய்யா, பையன் என்ஜினிரியிங் முடிச்சிட்டு வீட்டுலதான் இருக்கான், இப்ப கூட டெல்லியில நம்ம தம்பி மந்திரியா இருக்கற துறையில இருந்து இன்டர்வியூ வந்திருக்கு, நீங்க பார்த்து சொன்னீங்கன்னா கொஞ்சம் சவுரியமா இருக்கும் என விண்ணப்பித்தார். உனக்கு இல்லாமயா, நான் இப்பவே போன் போட்டு சொல்லிடரேன் அவன நாளைக்கே டெல்லி போக தயாராக சொல்லு என தலைவர் சொல்ல கேட்டு, அழகுதாசன் அப்படியே தலைவரின் காலில் விழுந்தார். எல்லாம் முடிந்து வீட்டுக்கு போகும் போது, சக உடன்பிறப்பு ஒருவன், அய்யா, தம்பி டெல்லிக்கு எல்லாம் போனா ஹிந்தி தெரியணுமே, எப்படி சமாளிக்கும் என கேட்டான். அட நீ வேற, நான் என்ன அவ்வளவு விவரம் இல்லாதவனா? பையன சின்ன வயசில இருந்தே ஹிந்தி டியூசன் எல்லாம் போட்டு தயார்படுத்தி வச்சிருக்கேன், இந்தியாவுல எந்த மூலைக்கு போனாலும் பொழச்சிக்குவான் என்றார். உடன்பிறப்பும், அதான பார்த்தேன், அய்யா விவரம் இல்லாம இருப்பீங்களா என வழிந்தான். சரி, சரி, விடியறதுக்குள்ள ரயில்வே ஸ்டேசன், போஸ்ட் ஆபிஸ், மைல் கல்லுன்னு ஒரு இடம் விடாம சுத்தமா தார் பூசிரணும், வேலையெல்லாம் முடிஞ்சி காலையில வந்து பாரு என உடன்பிறப்பின் கையில் நூறு ரூபாயை குடுக்க அவனும் சந்தோசமாக கிளம்பினான்.

Thursday, July 12, 2007

தவிப்பு

கார்த்திக் காலையிலிருந்தே இருப்பு கொள்ளாமல் தவித்தான். வனிதா இன்று எப்படியும் ஒரு நல்ல முடிவு சொல்லி விடுவாள் என்று நம்பிக்கையுடன் இருந்தான். வனிதா நல்ல அழகான, புத்திசாலி பெண். 3 மாதங்களுக்கு முன்புதான் மாற்றலாகி இவன் வேலை செய்யும் அலுவலகத்திலேயே காரியதரிசியாக சேர்ந்திருந்தாள். வழக்கமாக எப்படியும் காலை 8:30 மணி அளவில் அலுவலகத்தில் இருப்பாள். கார்த்திக் ஒருமுறை மணி பார்த்தான், 9.30 ஆகியிருந்தது, இந்த நேரம் வந்திருப்பளே? நேற்று போகும் போது கூட நான் சொன்னதை தெளிவாக புரிந்து கொண்டதாகவும், நாளை காலை நல்ல முடிவு சொல்கிறேன் என்றும் சொன்னாளே. ஏன் இன்னும் கூப்பிடவில்லை? சரி, காலையில், அது இது என வேலை நிமித்தமாக பிசியாக இருப்பாள், கொஞ்சம் காத்திருக்கலாமே என தனக்குத்தானே சமாதானம் சொன்னான்.


டிரிங்.... டிரிங்.... தொலைபேசி சிணுங்கியது, ஆவலுடன் எடுத்தான். மறுமுனையில் பரசுராமன், அவனது மேனேஜர். அவன் போன வாரம் முடித்து கொடுத்த கம்பெனி பாலன்ஸ் சீட்டை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க சொல்லி உத்தரவிட்டார். கார்த்திக் மனசுக்குள்ளேயே அலுத்து கொண்டான், இது எப்படியும் ஓரு மணி நேரமாவது ஆகும். சலித்துக் கொண்டே கம்ப்யூட்டரில் கணக்கை சரி பார்க்க தொடங்கினான். ஒரு வழியாக அந்த வேலையை முடித்து விட்டு, மீண்டும் ஒருமுறை மணி பார்த்தான். 11:30, ஏன் வனிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை? நேற்று நடந்த சந்திப்பில் கூட நன்றாகதானே பேசினாள். அவள் விருப்பத்தை கூட மறைமுகமாக காண்பித்தாளே, ஒருவேளை, இன்று அலுவலகத்திற்கே வரவில்லையா? நேற்று தும்மி கொண்டிருந்தாளே, உடம்புக்கு எதேனும் சரியில்லையா? மனதிற்குள் பல கேள்விகள் முளைத்தன. பேசாமல் போன் செய்து கேட்டு விடலாமா? வேண்டாம், அவசரப்படுகிறேன் என்று தப்பாக நினைத்து விடுவாள். எதற்கும் அவள் இருக்கை பக்கம் சென்று அவளுக்கு தெரியாமல் வந்து விட்டாளா என பார்த்து விடலாம் என்று அவள் இருக்கை நோக்கி நடக்க தொடங்கினான். அப்போது அவள் மேனேஜர் அறைக்குள் நுழைவதை பார்த்தான். அப்பாடா, அவள் வந்திருக்கிறாள் என ஒருவித மகிழ்ச்சியுடன் தன் இருக்கைக்கு திரும்பி நடந்து சென்றான். அவளாக அழைக்கட்டும் என மீண்டும் காத்திருந்தான்.



டிரிங்... டிரிங்... தொலைபேசி சிணுங்கியது, வனிதாவா என ஆவலுடன் எடுத்தான். மீண்டும் மறுமுனையில் பரசுராமன். இந்த முறை, அவனை ஒரு மீட்டிங் என சொல்லி அழைத்தார். தட்ட முடியாமல், பொருமிக் கொண்டே அவர் அறைக்கு சென்றான். அங்கு பலர் கூடி இருந்தனர். கார்த்திக்கை மேனேஜர் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அது ஒரு புதிய புராஜெக்ட் சம்பந்தபட்ட கூட்டம் என அப்போதுதான் புரிந்தது. மீட்டிங் தொடர்ந்து 3 மணி நேரமாக நடந்தது. முடிந்தவுடன், அவசர அவசரமாக இருக்கைக்கு வந்து, சரி, பொறுத்தது போதும் அவளிடம் நேரிடையாகவே கேட்டு விடலாம் என்று அவளின் இருக்கை நோக்கி நடந்தான். இருக்கையில் அவள் இல்லை, வீட்டுக்கு போய் விட்டாள் போலும், இனி நாளைக்குதான், மிகுந்த ஏமாற்ற்த்துடன் திரும்பினான்.

அன்று மாலை, ஒரு பீர் பாட்டிலை திறந்து கொண்டே இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் தன் ரூம் மேட் குமாரிடம் நடந்ததை கூறி புலம்பி தள்ளினான். அதற்கு குமாரும், "கவல படாதே மாப்ளே! இருக்கவெ இருக்கு, ஒன்னோட கடசி அஸ்திரம், நாளைக்கு அத்த சொல்லி உண்டா இல்லியானு கேளு, அவ கண்டிப்பா ஒத்துகிடுவா" என அவன் சிங்கார சென்னை தமிழில் கூறியதை கார்த்திக்கும் கவனமாக காதில் வாங்கிக் கொண்டான்.

மறுநாள் காலை, அலுவலகம் போனவுடன், முதல் வேலையாக, அவள் இருக்கைக்கு சென்றான். அவளிடன் "என்னங்க, பிடிச்சிருக்கா, நேற்று முழுதும் உங்க பதிலுக்காக காத்திருந்தேன்" என கேட்டான்,. அவளும் சிறிது மெளனம் காத்து, "அதை பற்றி யோசித்தேன் ஆனால்!" என இழுத்தாள். கார்த்திக்கால் மேலும் பொறுக்க முடியவில்லை, தனது கடைசி (அஸ்திரம்) முடிவையும் சொன்னான். கார்த்திக்கின் ஸ்திரமான முடிவை கேட்டு வனிதாவின் முகம் பிரகாசமானது, "சரி" என சம்மதித்து தனது முடிவை சொன்னாள்.


உடனே, கார்த்திக் தன் இருக்கைக்கு ஒடி, குமாரை போனில் அழைத்தான். டேய், ரொம்ப தாங்ஸ்டா!, நீ சொன்ன மாதிரியே முதல் மாச இன்சூரன்சு பிரிமியத்த இலவசமா நானே கட்டிடறேன்னு சொன்னேன், உடனே பாலிசிக்கு ஒத்துகிட்டா, அவங்க குடும்பத்தாருக்கும் இதே மாதிரி போட்டுரலாம்னு சொல்லிட்டா என்றான் இரட்டை சந்தோசத்துடன். பதிலுக்கு குமாரும் "அப்ப இன்னிக்கு நைட் பார்ட்டிதான், என்று வழிந்தான். கார்த்திக் தனது லிஸ்டில் அடுத்து யார் என பார்த்தான், அக்கவுண்ட்ஸ் பிரிவில் புதிதாய் சேர்ந்த சித்ரா, தனக்குள் சிரித்துக் கொண்டே அவளை சந்திக்க தயாராக கிளம்பும் போது, டிரிங்... டிரிங்... தொலைபேசி சிணுங்கியது, மீண்டும் மறுமுனையில் மேனேஜர் பரசுராமன் ....