Monday, September 24, 2007

கானா பாட்டு ஜோரு



கானா பாட்டு ஜோரு
கத்திரி வெயிலு மோரு
மெட்ராசுதான் ஊரு
பாடி வச்சேன் பாரு

காத்து வாங்க பீச்சி
வாடா போலாம் மச்சி
காந்தி கையில குச்சி
குச்சி மேல பட்சி
கூவி விக்கிறான் பஜ்ஜி
தொட்டுக்கத்தான் சொஜ்ஜி

நிக்குது பாரு காரு
காருக்குள்ள யாரு
பக்கத்து ஊட்டு பிகரு
கூட ஆளு யாரு
கூலிங் கிளாஸ் சாரு
நம்ம கணக்கு வாத்தியாரு

டலுக்குள்ள மீனு
கரைக்கு மேல பொண்ணு
மீனப் போல கண்ணு
பார்க்க சொல்ல மானு
பேரக் கேட்டேன் நானு
பேரு சொன்னா பானு
மாமா வந்தா ரன்னு
இல்ல மாட்டிக்கிட்டா டின்னு

Wednesday, September 19, 2007

"கிறுக்கு" கோயிந்தன்


ன்புள்ள MLA அய்யாவுக்கு, நல்லா இருக்கீங்களா? நான்தான் கிறுக்கு கோயிந்தன். என்ன உங்களுக்கு நெனவுல இருக்குதா இல்லியான்னு தெரியில? நான்தான் உங்களோட 8-ங் கிளாஸ் வர படிச்ச கோயிந்தன், நாங்கூட கிறுக்கி கிறுக்கி எழுதறதால நீங்க எனக்கு கிறுக்கு கோயிந்தன்னு பட்டப் பேரு கூட வச்சீங்க இல்ல, இப்ப ஞாபகம் இருக்கும்னு நெனக்கிறேன். போன வாரம் நீங்க பக்கத்து ஊருக்கு நம்ம கட்சி கொடி கம்பம் திறப்பு விழாவுக்கு வந்தப்ப அப்படியே நம்ம கிராமத்துக்கும் வருவீங்கன்னு எல்லாரும் சொன்னாங்க, நானும் அன்னிக்கி வேலைக்கு போவாமா காத்து கிடந்தேன். அப்புறம் அடுத்த நாள் பேப்பர்ல பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன், உங்களுக்கு வயித்து வலின்னு, அப்படியே திரும்பிட்டீங்கன்னு. உடம்ப பார்த்துக்கோங்கய்யா, நீங்க நல்லா இருந்தாத்தான் நாங்க நல்லா இருக்கு முடியும். நீங்கதான் அப்பமே படிக்கறப்பவே நல்லா பேசுவிங்களே, அதான் MLA ஆயிட்டீங்க, நான் அப்படியே இந்த ஒண்ணரை ஏக்கர் வறண்ட பூமிய பாத்திகிட்டு வெவசாயமே கதின்னு ஆயிட்டேன். இப்பமெல்லாம் மொத மாறி மழை இல்லீங்க, பயங்கர வெயில், நம்ம பூமியே வறண்டு போச்சு. அங்க மெட்றாசுல எப்படீங்க, நல்ல வெயிலு அடிக்குமா? மத்தியான வெயில்ல எல்லாம் வெளிய போகாதீங்க, உங்க ஒடம்புக்கு எல்லாம் அது சரிப்படாது. இங்க நம்ம கெணத்துல தண்ணி எல்லாம் வத்திப் போச்சிங்க. மொத மாறி இல்ல, சொன்னா மானக்கேடு, தண்ணிய இப்பமெல்லாம் வெல கொடுத்து வாங்கறோம். தோட்டத்தில இருக்கற கொஞ்சம் பன மரத்த அப்படியே பாதுகாத்து வச்சிருக்கேன். நம்ம கட்சில மறியல் அது இதுன்னா அப்படியே மரத்த சாய்ச்சிரலாம் பாருங்க அதுக்குதான். போன முறை நம்ம சாதிக்காரங்க நடத்தின போராட்டத்துக்கு கூட 2 மரத்த சாய்ச்சு ஜமாய்ச்சிட்டேன். ஒரு வண்டி கூட போகலன்னா பார்த்துக்கோங்க. கட்சி ஆளுங்க உங்ககிட்ட சொல்லியிருப்பாங்கன்னு நெனக்கிறன். மத்தபடி பெருசா ஒண்ணும் விளைச்சல் இல்லீங்க, ஏதோ கிழங்கு, கடலைன்னு அப்பப்ப மழை பேஞ்சா போடறதுதான். நெல் எல்லாம் நினச்சி கூட பாக்க முடியாது. ஊட்ல தினமும் சோளக் கஞ்சிதாங்க. அதுதான் நமக்கு எல்லாம் கட்டுபடியாவும். இல்லைன்னா கூலி வேலைதான். பசங்க 2 பேரும் வளந்துட்டானுங்க. சின்னவனுக்குதான் இடது கை கொஞ்சம் சரியா இல்லை. அது வேற ஒண்ணும் இல்லீங்க, போன வருஷம் நம்ம கட்சில எல்லாரையும் பச்ச குத்திக்க சொன்னாங்க இல்லியா, அப்ப நம்ம ஊட்ல எல்லாத்துக்கும் குத்த சொன்னேன். சின்னவனுக்கு அது சேருல, காச்ச வந்து, அப்படியே அந்த கை விளங்காம போயிடுச்சு. அப்பமும் பாருங்களேன், கையில பச்சை அருமியா வந்திருக்கு. தூரம் கட்டி பார்த்தா கூட கொடி பளிச்சுன்னு தெரியும். அவனுக்கு பீச்சாங்கைதான் இப்படி, சோத்துக்கை நல்லா இருக்கு. சோறுன்னதும் ஞாபகத்து வருது. 2 மாசத்திக்கு முன்னாடி கட்சி மாநாடுன்னுன்னு சொல்லி லாரில ஏத்திகிட்டு போயி ஆட்டுக்கறி பிரியாணி பொட்டலம் குடுத்தாங்க, ரொம்ப அருமியா இருந்தது. நம்ம கட்சி நம்ம கட்சிதாங்க. கவனிக்கறதுல நம்மல யாரும் அடிச்சிக்க் முடியாது. அப்புறம் பாருங்க, என்னோட புராணத்தய சொல்லிகிட்டு இருகேன், அங்க நீங்க ரொம்ப பிசியா இருப்பீங்கன்னு நெனக்கிறேன். MLAன்னா சும்மாவா, எத்தன மீட்டிங், சட்டசபை, கம்யூட்டர்னு எம்புட்டு வேலை. பாவம் ஒத்த ஆளா நீங்க எவ்வளவு வேலையதான் பார்ப்பீங்க. எதோ வறண்ட பூமிக்கு இப்பமெல்லாம் மான்யம் குடுக்கறாங்கலாமே, நிசந்தானுங்களா. அப்படி எதுனாச்சும் இருந்தா சொல்லுங்கய்யா. ஏதாவது ஆட்டு லோன், மாட்டு லோன் இருந்தாலும் சொல்லுங்க. நான் ஒரு கிறுக்கன், உங்களுக்கு இருக்கற பல வேலையில என் சுயநலத்துக்கு உதவி கேட்கறன் பாருங்க. போன வாரம் இந்த எதுத்த கட்சி மாரிமுத்து உங்கள பத்தி தப்பா பேசிட்டான். அப்பமே அவன் கைய எடுத்திரலாம்னு பார்த்தேன் அதுக்குள்ளார நம்ம பசங்க வந்து தடுத்துட்டானுங்க. உங்க காதுக்கு இந்த விசயம் வந்தா ஒண்ணும் வருத்தபடாதீங்க, அடுத்த மாசம் திருவிழாவில அவன நான் பார்த்துக்கிறேன். உங்கள பார்த்து கூட ஒரு 4 வருசம் இருக்குங்களா? ஏதோ எலக்சன் வருதுன்னு பேசிக்கிறாங்க. அப்ப உங்கள கண்டிப்பா பார்த்திரலாம். நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க, இப்ப நம்ம 2 பசங்களுக்கும் கண்ணாலம் ஆயிருச்சு, எல்லாம் சேர்த்தி நம்ம ஊட்லய 6 ஓட்டு ஆச்சு, நம்ம சம்மந்தி ஊட்டு ஓட்டும் உங்களுக்குதான். பொண்ணு குடுத்திருக்கானுங்க இல்ல, நம்ம சொன்னா கேட்பாங்க. நீங்கதான் திரும்பி MLA எவனும் அசச்சிக்க முடியாது. ஒடம்பு நல்லா வச்சிக்கங்கய்யா, நீங்க நல்லா இருந்தாத்தான் நாங்க நல்லா இருக்க முடியும்.

- தங்கள் உண்மையுள்ள,
"கிறுக்கு" கோயிந்தன்

"மக்கள் ஆட்சி முறையில் நம்பிக்கை கொண்டு தான் சார்ந்த கட்சிக்கு விசுவாசமான விவசாய குடியானவனின் கிறுக்கல்"

Sunday, September 16, 2007

பேட்டை துள்ளி ...

    "நீங்க கன்னி சாமி வேற, மலைக்கு போயிட்டு வந்தவுடன் கண்டிப்பா மாற்றம் தெரியும் பாருங்களேன்" என்று சண்முகம் சொல்வதை ஊர் தலைவர் நவநீதகிருஷ்ணன் அமைதியாகக் கேட்டு கொண்டிருந்த போதே டெலிபோன் மணி ஒலிக்கத் தொடங்கியது. "நல்ல சகுணம்" என்று கூறியவாறே போனை எடுத்தவருக்கு கோயில் குருக்கள் சொன்ன செய்தி இடியாய் ஒலித்தது. உடனடியாக அப்துல்லாவைக் கூட்டி வர ஆளை அனுப்பினார். "சாமியே சரணம்" என்று மனதில் கூறி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நவநீதகிருஷ்ணன் அப்துல்லாவைப் பார்த்து கேட்டார். "உம்ம புள்ள அன்வர் பண்ண காரியத்த பார்த்தீரா?". "ஏதோ படிச்ச புள்ள, தெரியாம பண்ணிட்டான், கொஞ்சம் பொருத்துக்கோங்க" என்றார் அப்துல்லா பரிதாபமாக. "என்னய்யா படிச்ச புள்ள, என்னதான் தாயா புள்ளையா பழகினாலும் எங்களோட பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விட்டு குடுக்க முடியாது, தெரியுமா? ஆராய்ச்சி குறிப்பு எடுக்கறேன்ற பேர்ல அவன் எங்க கோயிலுக்குள்ள போனது பெரிய தப்பு, இதுக்கு உண்டான தண்டனையை கொடுத்தே ஆகணும். நான் இன்னிக்கு மலைக்கு போறேன், வந்து இந்த பஞ்சாயத்தை வச்சிக்கிறேன்" என்றவாறே விருட்டெனக் கிளம்பி போனார்.

  இது அவருக்கு முதல்மலை, அன்று இரவு அன்னதானம் எல்லாம் தடல்புடலாக முடிந்து, நவநீதகிருஷ்ணன் தன் குழுவுடன் பயணப்படும் போது நள்ளிரவைத் தாண்டி விட்டது. ஆனால் அவர் மனது இன்னமும் அன்வருக்கு என்ன தண்டனைக் கொடுப்பது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. "மலையிலிருந்து வந்ததும் முதல்ல கோயிலுக்கு வெள்ளை அடிச்சு குருக்களிடம் சொல்லி கும்ப அபிஷேகம் பண்ணிடனும், இதுக்கு உண்டான எல்லா செலவையும் அன்வரையே குடுக்க சொல்லணும், அதுதான் சரியான தண்டனை" என்று முடிவு செய்து அப்படியேத் தூங்கிப் போனார்.

    காலையில் அனைவரும் எருமேலி வந்து அடைந்தனர். இவர் கன்னி சாமி என்பதால், கண்டிப்பாக பேட்டை துள்ள வேண்டும் என குருசாமி சொல்லியிருந்தார். இவரும், "சாமியே அய்யப்பா" என பேட்டைத்துள்ளி ஆடிக்கொண்டே தன் குழுவினரைத் தொடர்ந்து சென்றார். ஒரு இடத்தில் எல்லா சாமிகளும் வரிசையாக உள்ளே சென்று வந்து கொண்டிருந்தனர். பக்கத்திலிருந்தவரிடம் மெல்ல கேட்டார், "என்ன சாமி இது, மசூதி மாதிரி இருக்கு, இங்க எல்லாம் போகணுமா?". "அட, நீங்க கன்னி சாமி இல்லயா, அதுதான் விவரம் தெரியல, இதுதான் வாவர் சன்னதி, வாவரும் அய்யப்பனும் தோழர்கள், எல்லா அய்யப்ப பக்தர்களும் வாவர் சன்னதிக்கு போயிட்டுதான் மலையே ஏறுவாங்க" என விளக்கம் அளித்தார். நவநீதகிருஷ்ணனுக்கு யாரோ பொறியில் அடித்த மாதிரி இருந்தது, அந்த சாமி சொன்னதைக் கேட்டுக் கொண்டே உள்ளே சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்தார். வெளியே வரும் போது முஸ்லீம் பெரியவர் ஒருவர் எல்லா சாமிகளுக்கும் விபூதிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்துல்லாவே அங்கு நின்று, "என்ன சாமி நல்லா இருக்கீங்களா?" என்று கேட்பது போல இருந்தது. "மலைக்குப் போனால் மாற்றம் தெரியும்" என சண்முகம் கூறியது சரிதான் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். ஊருக்குப் போனவுடன் தன் முழு செலவில் கோயிலுக்கு வெள்ளை அடிச்சு குருக்களிடம் சொல்லி "அய்யப்பன்-வாவர்" பூஜை ஏற்பாடு செய்து அப்துல்லா சமூகத்தையும் அழைத்து அமர்க்களப்படுத்த வேண்டும் என முடிவு செய்து குழுவினரைத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

Wednesday, September 12, 2007

மேஜர் - மைனர்


ன்று காலையில் அந்த தந்தி கடிதம் வந்தது முதலே கலெக்டர் ராமமூர்த்தி மிகவும் டென்ஷனாக இருந்தார். டவாலி கொண்டு வந்த காபிஆறி ஆடை கட்ட ஆரம்பித்தது. "மிக அவசரம்" என்று கொட்டை எழுத்தில் தலைப்பிட்ட அந்த தலைமை செயலக கடிதம் மின் விசிறி காற்றில் மேஜை மீது இன்னமும் படபடத்துக் கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை கடிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார். தங்கள் மாவட்டதிற்குட்பட்ட மேலபுரத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது இரு மதத்திலும் உள்ள இளைஞர் அமைப்புகள் கலவரம் ஏற்படுத்த திட்டம் தீட்டியுள்ளதாக ரகசிய புலனாய்வு அறிக்கை வந்துள்ளது. ஆகவே வழக்கத்திற்கு மாறாக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் - தலைமை செயலாளர்.

மேலபுரம் இந்து முஸ்லீம் ஏறக்குறைய சமமாக வாழும் ஊர். விநாயகர் சதுர்த்தி என்றாலே மாவட்ட நிர்வாகம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது வழக்கம். இந்த முறை மேலபுரம் இந்து மதத்தினர், சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாடுவதில் போஸ்டர் எல்லாம் அடித்து தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் இப்படி ஒரு விசயத்தை எப்படி கையாள்வது, ராமமூர்த்திக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது. போனை போட்டு போலீஸ் கண்காணிப்பாளர் ஆறுமுகத்தை அழைத்து அவசரத்தை சொல்லி உடனே வர சொன்னார். அடுத்த அரை மணியில் ஆறுமுகம் வந்தார்.

என்ன, எஸ்.பி, இரண்டு மதத்திலும் உள்ள முக்கிய தலைவர்களை அழைத்து நிலைமயை விளக்கி பேசிரலாமா? என்றார். இல்ல சார், விசயம் வெளிய தெரிஞ்சு விஷமிகள் உஷாராயிடுவாங்க, பேசாம ரெண்டு குரூப்லயும் சந்தேகப்படற ஆளுங்கள தூக்கி உள்ள வச்சிரலாம் என்றார் ஆறுமுகம். நோ, நோ, விஷேச சமயங்களில் அப்படி பண்ணா சரியா இருக்காது, அது இன்னமும் வேகத்தைதான் அதிகரிக்கும் என்றார் ராமமூர்த்தி. இதற்கிடையில் அவர் செல்போன் சிணுங்கியது, அடுத்த முனையில் அவரது 5 வயது மகள் வந்தனா. அப்பா, மேஜர்-க்கு எதிர் வார்த்தை என்னா? என்றாள். மைனர்-ம்மா, இங்க பாரு, அப்பா முக்கிய வேலயா இருக்கேன் கொஞ்ச நேரத்துக்கு கூப்பிட வேணாம் என்று செல்லமாக கடிந்து போனை வத்தார்.

போனை வத்தவுடன் அவரது முகம் பளீரென மலர்ந்தது. அதுதான் சரியான வழி, இன்டெர்காமில் தன்னுடைய பி.ஏவை அழைத்தார். அந்த மைனாரிட்டி யூத் வெல்பேர் (சிறுபாண்மை இளைஞர் நலன்) நிதி வழங்கும் விழாவை வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வச்சிரலாம். குறிப்பா, மேலபுரத்தில் வசிக்கும் எல்லா முஸ்லீம் இளைஞர்களுக்கும் பதிவு தபால் அனுப்பி வர சொல்லுங்க, நான் இன்னிக்கே அதுக்கு உண்டான நிதியை ஒதுக்கிடறேன் என்று உத்தரவிட்டார். தலை வலி விட்டது போல இருந்தது, வீட்டுக்கு போகும் போது வந்தனா குட்டிக்கு பிடிச்ச ஸ்ட்ராபெரி கேண்டி வாங்கிட்டு போகணும் என்று நினைத்துக் கொண்டே கிளம்ப தயாரானார்.

Tuesday, September 11, 2007

தமிழ் மொழியும் அரசியல்வாதியும்


மிழ் மொழி எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமான விசயம் தெரியுங்களா? நம்மாளு மொழி, இனம் அப்படின்னா அப்படியே உணர்ச்சி வசப்பட்டுருவான். அதுக்காக எதையும் தியாகம் பண்ண தயார் ஆயிருவான். இந்த ஒரு விசயத்த நம்மூர் அரசியல்வாதிங்க அவங்க சுயநலனுக்காக உபயோகப்படுத்த எந்த காலகட்டத்திலும் தவறியதே இல்லை. பழுத்த கட்சியிலிருந்து இருந்து இன்னிக்கி புசுசா முளைத்த கட்சிகள் வரை நம்ம பொதுஜனத்த இந்த விசயத்தில எந்த அளவுக்கு சுரண்டியிருக்காங்கன்னு நான் ஒண்ணும் புசுசா சொல்ல தேவையில்லை. ஒரு விசயமும் இல்லன்னா தமிழ் மொழிய கையில எடுத்திருவாங்க. மொழி வளர்க்கிறோம், பிற மொழி இருக்கக் கூடாது அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு போராட்டம். ஒரு வடக்கத்தி லாரி டிரைவர் வழக்கமா இங்கே மதுரைக்கு பக்கத்தில சவாரி வருவார். ஒரு முறை அப்படி வரும் போது கவனிச்சி இருக்காரு, நெடுஞ்சாலைகளில் இருந்த மைல்கல்ல இருந்த இந்தி பேரு தார் பூசி அழிச்சிருங்காங்க. அதப் பார்த்துட்டு கேட்டாரு, வெள்ளக்காரன் கொண்டு வந்த ஆங்கிலத்த வச்சிருக்கீங்க, நம்ம பாரத பொது மொழி இந்திய அழிச்சியிருக்கீங்களேன்னு, இப்படியே போனா ரூபாய் நோட்டுல இருக்கறதயும் அழிப்பீங்களா, இல்ல உபயோகப்படுத்தாம போயிருவீங்களான்னு கேட்டாரு. நம்ம அரசியல்வாதியோட திருவிளையாடல அவருக்கு விளக்கி சொன்னா புரியவா போகுது. அத விடுங்க, சமீபத்தில நம்ம தமிழக அரசு தமிழ் மொழிய பாதுகாக்கணுங்கற ஆர்வத்தில ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதாவது, தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று. இன்னிக்கி வரி ஏய்ப்பு செய்றவன் பட்டியல் போட்டா முக்கால்வசிக்கு மேல திரைப்படத்துறையில் இருக்கறவங்கதான் இருப்பாங்க, அவங்களுக்கு மேலும் ஒரு சலுகை. ஏன்யா? இதுல யாருக்கு நஷ்டம், பொதுஜனத்துக்குத்தானே, இந்த வரி சலுகையினால நம்ம கஜானா மேலும் காலி, அதை சரிகட்ட பொதுஜனத்து மேல வேறவிதமா வரி பாயும். ஒரு நண்பர் சொன்னாரு, தமிழ்-ல பேர் வச்சா பாராட்டுங்க, வரி சலுகை வேண்டாம், தமிழ் மொழி அல்லாத பேர் வச்சா இரட்டை வரி போடுங்க. பேர் வைக்கவும் பயப்படுவாங்க, அரசாங்கத்துக்கு வருமானமும் கிடைக்கும். அதுல தமாசு பார்த்தீங்கனா, பொறுக்கி, கெட்டவன் அப்படீனு எல்லாம் பேர் வச்சி வரி சலுகை வாங்கறாங்க, கேட்டா இதுவெல்லாம் தமிழ் பெயர். இந்த அரசியல்வாதிங்க இத எல்லாம் விட்டுட்டு சிவாஜிங்கற பேர் தமிழா இல்லையா? வரி சலுகை குடுக்கலாமா வேண்டாமான்னு விவாதம் பண்ணிக்கிட்டு நேரத்த வீணாக்கிட்டு இருக்காங்க. பாரத பிரதமர் தொலைகாட்சியில பேசறாரு, எங்க ஊரு பெருசுக்கு ஒண்ணும் புரியல. ஆனா, பிரதமர் பக்கத்தில இருக்கற நம்ம உள்ளூரு அரசியல்வாதியோட புள்ளய பார்த்துட்டு என்னமா சந்தோசப்படறாரு தெரியுமா? வாரிசு, குடும்பம்னு வாழையடி வாழையா இவங்களே குத்தகை எடுத்துகிறாங்க. அவங்க புள்ளங்க எல்லாம் வட மொழியில சர்வ சாதாரணமா பேசுவாங்க, அப்பதான டெல்லியில பொழப்பு நடத்த முடியும். நம்ம பொதுஜனம் ரயில் ஏறி கும்மிடிபூண்டி எல்லைய தாண்டினா, பெப்பே நமக்கு ஊமை பேச்சுதான். அரசியல்வாதிகளுக்கு எங்க எப்படி உணர்ச்சிபூர்வமா தாக்கணும்னு தெரியும், சரியா அடிக்கிறான், சாதிக்கிறான். இந்த நிலைமை மாற வேணும். இந்த விச காய்ச்சல் எல்லாருக்கும் பரவாம நம்மல நாமே தடுத்துக்கணும். சிந்தியுங்க, சரின்னு பட்டா, நமக்கு தெரிஞ்ச நாலு பொதுஜனத்துக்கு சொல்லுங்க ...

Sunday, September 9, 2007

ஊருக்குதான் உபதேசம் ...


ங்கும் தமிழ், எதிலும் தமிழ், எல்லாரும் தமிழில்தான் பேச வேண்டும், இனி சோறு போடுன்னுதான் கேட்கணும், சாதம் போடுன்னு யாரும் சொல்லகூடாது என காரசாரமாக பேசி முடித்தார் அழகுதாசன். கூட்டம் பலமாக கை தட்டி ஆர்ப்பரித்தது. அடுத்து கட்சித் தலைவர் தமிழ்மாறன் பேச வந்தார். அழகுதாசனை எனக்கு இளம்பிராயம் முதல் தெரியும். அவங்க அம்மா வச்ச சுந்தரதாஸ் என்ற பெயரையே தன் தமிழ் ஆர்வத்திற்காக அழகுதாசன் என மாற்றிக் கொண்டவர். அவர் முன்னிருத்தி நடத்தும் இந்த பிற மொழி அழிப்பு போராட்டத்திற்கு ஊரார் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் என கூறி அமர்ந்தார். கூட்டம் முடிந்து வட்டம், ஒன்றியம் என அந்த பகுதி கட்சி நிர்வாகிகள் தலைவரிடம் பேச காத்திருந்தனர். அழகுதாசன் முறை வந்தது. என்னய்யா அழகு? பேச்செல்லாம் அசத்தலா இருந்தது, உனக்கு கட்சியில பெரிய எதிர்காலம் இருக்கு, கடுமையா உழைக்கணும், அப்புறம் சொல்லு, குடும்பம் எல்லாம் எப்படி இருக்கு என்றார். உங்க ஆசியில எல்லாரும் நல்லா இருக்காங்கய்யா, பையன் என்ஜினிரியிங் முடிச்சிட்டு வீட்டுலதான் இருக்கான், இப்ப கூட டெல்லியில நம்ம தம்பி மந்திரியா இருக்கற துறையில இருந்து இன்டர்வியூ வந்திருக்கு, நீங்க பார்த்து சொன்னீங்கன்னா கொஞ்சம் சவுரியமா இருக்கும் என விண்ணப்பித்தார். உனக்கு இல்லாமயா, நான் இப்பவே போன் போட்டு சொல்லிடரேன் அவன நாளைக்கே டெல்லி போக தயாராக சொல்லு என தலைவர் சொல்ல கேட்டு, அழகுதாசன் அப்படியே தலைவரின் காலில் விழுந்தார். எல்லாம் முடிந்து வீட்டுக்கு போகும் போது, சக உடன்பிறப்பு ஒருவன், அய்யா, தம்பி டெல்லிக்கு எல்லாம் போனா ஹிந்தி தெரியணுமே, எப்படி சமாளிக்கும் என கேட்டான். அட நீ வேற, நான் என்ன அவ்வளவு விவரம் இல்லாதவனா? பையன சின்ன வயசில இருந்தே ஹிந்தி டியூசன் எல்லாம் போட்டு தயார்படுத்தி வச்சிருக்கேன், இந்தியாவுல எந்த மூலைக்கு போனாலும் பொழச்சிக்குவான் என்றார். உடன்பிறப்பும், அதான பார்த்தேன், அய்யா விவரம் இல்லாம இருப்பீங்களா என வழிந்தான். சரி, சரி, விடியறதுக்குள்ள ரயில்வே ஸ்டேசன், போஸ்ட் ஆபிஸ், மைல் கல்லுன்னு ஒரு இடம் விடாம சுத்தமா தார் பூசிரணும், வேலையெல்லாம் முடிஞ்சி காலையில வந்து பாரு என உடன்பிறப்பின் கையில் நூறு ரூபாயை குடுக்க அவனும் சந்தோசமாக கிளம்பினான்.