Wednesday, September 12, 2007

மேஜர் - மைனர்


ன்று காலையில் அந்த தந்தி கடிதம் வந்தது முதலே கலெக்டர் ராமமூர்த்தி மிகவும் டென்ஷனாக இருந்தார். டவாலி கொண்டு வந்த காபிஆறி ஆடை கட்ட ஆரம்பித்தது. "மிக அவசரம்" என்று கொட்டை எழுத்தில் தலைப்பிட்ட அந்த தலைமை செயலக கடிதம் மின் விசிறி காற்றில் மேஜை மீது இன்னமும் படபடத்துக் கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை கடிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார். தங்கள் மாவட்டதிற்குட்பட்ட மேலபுரத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது இரு மதத்திலும் உள்ள இளைஞர் அமைப்புகள் கலவரம் ஏற்படுத்த திட்டம் தீட்டியுள்ளதாக ரகசிய புலனாய்வு அறிக்கை வந்துள்ளது. ஆகவே வழக்கத்திற்கு மாறாக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் - தலைமை செயலாளர்.

மேலபுரம் இந்து முஸ்லீம் ஏறக்குறைய சமமாக வாழும் ஊர். விநாயகர் சதுர்த்தி என்றாலே மாவட்ட நிர்வாகம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது வழக்கம். இந்த முறை மேலபுரம் இந்து மதத்தினர், சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாடுவதில் போஸ்டர் எல்லாம் அடித்து தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் இப்படி ஒரு விசயத்தை எப்படி கையாள்வது, ராமமூர்த்திக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது. போனை போட்டு போலீஸ் கண்காணிப்பாளர் ஆறுமுகத்தை அழைத்து அவசரத்தை சொல்லி உடனே வர சொன்னார். அடுத்த அரை மணியில் ஆறுமுகம் வந்தார்.

என்ன, எஸ்.பி, இரண்டு மதத்திலும் உள்ள முக்கிய தலைவர்களை அழைத்து நிலைமயை விளக்கி பேசிரலாமா? என்றார். இல்ல சார், விசயம் வெளிய தெரிஞ்சு விஷமிகள் உஷாராயிடுவாங்க, பேசாம ரெண்டு குரூப்லயும் சந்தேகப்படற ஆளுங்கள தூக்கி உள்ள வச்சிரலாம் என்றார் ஆறுமுகம். நோ, நோ, விஷேச சமயங்களில் அப்படி பண்ணா சரியா இருக்காது, அது இன்னமும் வேகத்தைதான் அதிகரிக்கும் என்றார் ராமமூர்த்தி. இதற்கிடையில் அவர் செல்போன் சிணுங்கியது, அடுத்த முனையில் அவரது 5 வயது மகள் வந்தனா. அப்பா, மேஜர்-க்கு எதிர் வார்த்தை என்னா? என்றாள். மைனர்-ம்மா, இங்க பாரு, அப்பா முக்கிய வேலயா இருக்கேன் கொஞ்ச நேரத்துக்கு கூப்பிட வேணாம் என்று செல்லமாக கடிந்து போனை வத்தார்.

போனை வத்தவுடன் அவரது முகம் பளீரென மலர்ந்தது. அதுதான் சரியான வழி, இன்டெர்காமில் தன்னுடைய பி.ஏவை அழைத்தார். அந்த மைனாரிட்டி யூத் வெல்பேர் (சிறுபாண்மை இளைஞர் நலன்) நிதி வழங்கும் விழாவை வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வச்சிரலாம். குறிப்பா, மேலபுரத்தில் வசிக்கும் எல்லா முஸ்லீம் இளைஞர்களுக்கும் பதிவு தபால் அனுப்பி வர சொல்லுங்க, நான் இன்னிக்கே அதுக்கு உண்டான நிதியை ஒதுக்கிடறேன் என்று உத்தரவிட்டார். தலை வலி விட்டது போல இருந்தது, வீட்டுக்கு போகும் போது வந்தனா குட்டிக்கு பிடிச்ச ஸ்ட்ராபெரி கேண்டி வாங்கிட்டு போகணும் என்று நினைத்துக் கொண்டே கிளம்ப தயாரானார்.

2 comments:

Lakshmi Ramesh said...

The Stories are very good. I like the supporting pictures a lot, especially for this story.

Agathiyan John Benedict said...

இந்தக் காலத்துக்கு ஏத்த கதை. மத மோதல் என்பதால், வேஷ்டியை மடிச்சுக் கட்டி, நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சேன்... டபக்குன்னு கதை முடிஞ்சுபோச்சு. IAS ஆபீசர் எடுக்கிற அதிரடி முடிவு மாதிரியே இருந்தது உங்க கதையின் முடிவும். தொய்வின்றி தொடர்ந்தது உங்கள் கதை. பாராட்டுக்கள்.