Wednesday, November 28, 2007

கதை உருவான கதை


ப்படி கதை எழுதுறீங்க? எங்க இருந்து இந்த ஐடியா எல்லாம் கிடைக்குது? ஒரு கதை எழுத எவ்வளவு நேரம் ஆகும்? இதுவெல்லாம் என்னைப் பார்த்து நண்பர்கள் கேட்ட கேள்விகள். உடனே தோன்றியது, சரி கதை உருவான கதையை எழுதலாம்னு, ஆங்கிலப் படத்தில கடைசியில் காண்பிப்பார்களே, எப்படி படத்தை எடுத்தாங்கன்னு (Making) அது போல என்னோட கதைகளின் கருமூலத்தை எழுதலாம்னு முடிவு பண்ணினேன். பொதுவாகவே, நமக்கு தெரிஞ்ச ஒரு விசயத்தை அடுத்தவங்களுக்கு நல்லா புரிஞ்சிக்கிற மாதிரி ஜனரஞ்சகத்தோட சொல்றதோ இல்ல எழுதறதுங்கிறதோ ஒரு பெரிய கலை. என்னுடைய வேலை நிமித்தமா நான் பல முறை "White Papers", "Solution Proposal" எல்லாம் எழுத வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களும், மேலாளர்களும் தெளிவா புரிஞ்சிக்கிற மாதிரி நம்ம நினைக்க கூடிய செய்தியை முறையா, தெளிவா எடுத்து சொல்ல வேண்டியது ரொம்ப அவசியமானது. ஒண்ணுமில்ல, ஒரு சிரிப்ப கூட (comedy, joke) இன்னொருத்தருக்கு நாம சொல்லணும்னா அதை நல்லா, முறையா சொல்ல வேண்டிய விதத்தில் எடுத்து சொல்லவோ அல்லது எழுதவோ செய்தாதான் அது சரியா போயி சேரும், மற்றவர்களும் கேட்டுட்டு சிரிப்பாங்க, இல்லைன்னா, ஓ அப்படியான்னு கொட்டாவிதான் விடுவாங்க. அப்படிப்பட்ட இந்த எழுத்து கலையை எனக்குள்ள வளர்த்துக்கணும் அப்படிங்கற ஒரு ஆர்வக் கோளாறுதான் நான் எழுத ஆரம்பிச்ச இந்த பதிவுகள் (Blog). கதை, கவிதை இரண்டுமே எழுதி இந்த கலையை வளர்த்துக்கணும்னு ஆசை ரொம்ப. ஆனாப் பாருங்க, இந்த கவிதை எழுதறது கொஞ்சம் கஷ்டமான வேலை. தலை வலியே வந்திரும். சில சமயம் நான் கவிதைன்னு சொல்லி நண்பர்களிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. கதை எழுதறது கவிதையைக் காட்டிலும் கொஞ்சம் சுலபமானதுங்கிறது என்னுடய கருத்து. கதை எழுத அடிப்படையா ஒரு மூலக்கருத்து வேணும். சிறுகதைகளில் பெரும்பாலும் ஒரு முடிச்சி இருக்கும், கடைசியில் முடிச்சி அவிழ்ந்து ஒரு செய்தியும் இருக்கும். நான் எழுதிய கதை எல்லாவற்றிலுமே என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களும், நான் கேள்விப்பட்ட செய்திகளும் மையக் கருத்தா இருந்ததுங்கறது ஒரு மறுக்க முடியாத உண்மை. கற்பனையும் கால் பகுதிக்கு இருக்கும். அதை உங்க எல்லோருடனும் பகிர்ந்துக்கணும் அப்படிங்கற ஆவலில் உருவானதுதான் இந்த "கதை உருவான கதை".

(முடிந்த வரை ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சி செய்கிறேன், மீறினால் பொறுத்தருள்க!, ஆங்காங்கே எழுத்துப் பிழை இருப்பினும் மன்னிக்கவும் (blame editor)).


1. உறவுகள் - அமெரிக்காவில் "Thanks Giving" சமயத்தில் எழுதியது. "Thanks Giving" ன்னா ஒரு குடுமபத்தில் உள்ள உறவுகள், அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், மற்றும் நண்பர்கள் எவ்வளவு தூரத்தில இருந்தாலும் இந்த நாள்ள ஒண்ணா கூடி விருந்த "Turkey" யோட "Special"-ஆ சாப்பிடறது ஒரு சம்பிரதாய பழக்கம். அதுவே "உறவுகள்"-ங்கிற தலைப்புக்கு காரணமாச்சு. எனக்கு ஒரு அண்ணன் இருக்கார். நான் இரண்டாவது ஆளு. சின்ன வயசில எங்களுக்குள்ள வந்த சண்டை (வடை, போண்டா-வுக்காக மல்லுகட்டினோம்) பெருசாயி, அதுல அவர நான் மாட்டி விட்டு கடைசில அவருக்கு எங்கப்பாவிடமிருந்து அடி கிடைக்கற அளவு நிலைமை மோசமாக எனக்கு ரொம்ப கஷ்டமாவும் வெட்கமாவும் இருந்தது. அப்ப எங்கப்பா நடத்தி வச்ச சமாதான பஞ்சாயத்தும், கூறிய அறிவுரைகளும், சமீபத்தில பார்த்த தமிழ் திரைப்படங்களின் பாதிப்பும்தான் இந்தக் கதையின் மையக் கருத்து.

2. சரவெடி - தீபாவளி சமயத்தில எழுதப்பட்ட கதை. நண்பர் கரண் தலைப்பை குடுத்து கதை எழுத சொன்னார். சின்ன வயசில பட்டாசு வாங்க நான் போடற கணக்கும், எங்க குடும்பத்தில காட்டுற கண்டிப்பும், நம்மலால முடியாததை, அடுத்தவங்க வெடிக்கறத பார்த்து பண்டிகையை ஓட்டறதுங்கிற சொந்த அனுபவம்தான் கதையோட மையக் களம். கொஞ்சம் சமுதாய முன்னேற்ற சிந்தனையோட குண்டு வெடிப்பு ட்விஸ்டு வச்சி நான் விட்ட புஸ்வானம்தான் இந்த வெடி.

3. மூலதனம் - என் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக பல இடங்களில் அலைந்து திரிந்தேன், மந்திரியின் பி.ஏ-விடம் எல்லாம் என்னுடைய "Resume" குடுத்து வைத்தேன், கடைசியில் ஊருக்கு வந்தேன். எங்க தோட்டம் உள்ள கிராமத்துக்கு போகணும்னா ஒரு நாளைக்கு ரெண்டே பஸ்தான், மற்ற வேலைகளில் நடராஜா சர்வீஸ், அப்படி இல்லைன்னா வாடகை சைக்கிளோ அல்லது அந்த வழியாக போகும் டிராக்டர் சவாரி. இந்த கிராமத்து சூழலே கதைக்கு களமாச்சு. எங்கப்பா என் அண்ணன் கூடப் படிச்சு கம்பனி நடத்தறவரோட விலாசத்தை குடுத்து, போயி பார்த்துட்டு வரச் சொன்னார். அங்க போயி, அவரு தொழில் நடத்தற விதத்தைப் பார்த்தேன், அதே போல நாம் ஏன் சுயமா பண்ணக்கூடாதுன்னு நினைச்சு, பின்னால "Software Consultancy" ஆரம்பித்து கிட்டத்தட்ட 70 Clients, 5-6 Employees மேல நிர்வகிக்கற அளவுக்கு வளர்ந்தேன். அந்த சுய அனுபவமும், கொஞ்சம் கற்பனையும்தான் இந்த கதைக்கு மூலதனமாச்சு. காசு சுண்டி விடற படம், ஐடியா வேற ஒண்ணுமில்ல, சிவாஜி இன்டெர்வல்தான்.

4. ஆயிரத்தில் ஒருவன் - ஆயுத பூஜைக்காக எழுதிய கதை. எங்க ஊர்ல பூஜையின் போது, நண்பர் ஒருவரின் லேத் பட்டறைக்கு சென்று பொரி விநியோகிப்பது வழக்கம். அது முடிந்து அடுத்து அச்சாபீஸ் நண்பர் அங்க போயிடுவோம். அது மட்டுமல்ல, ஒவ்வொரு பூஜைக்கும் ஒவ்வொரு மாதிரி அயிட்டம் இருக்கும். இந்த வருசம் பொரி குடுத்தா, அடுத்த வருஷம் சுண்டல்னு ஒரு வித்தியாசம் காட்டுவோம். அப்படி விநியோகிக்கும் போது, ரொம்ப முடியாதவங்க, ஏழைங்க, சின்ன பசங்க எல்லாம் பெரிய சாக்கு பையை எடுத்துகிட்டு வந்து வாங்கிட்டு போவாங்க. அப்ப தோணும், இவ்வளவு வாங்கி என்னடா பண்ணுவாங்கன்னு. எல்லாத்தையும் இவங்களே சாப்பிடுவாங்களா இல்ல யாருக்காவது குடுப்பாங்களா இல்ல வித்துருவாங்களான்னு. அப்படி சின்ன வயசில பார்த்து கிடைத்த அனுபவமும், கொஞ்சம் செண்டிமென்டையும் அள்ளித் தெளிச்சு உருவானவந்தான் இவன்.

5. பேட்டை துள்ளி - இது வித்தியாசமான ஒரு அனுபவம். 3 ஆண்டுகளுக்கு முன் ரம்ஜான் சமயத்தில் ஊருக்கு சென்ற போது என் நெருக்கமான நண்பர் முகமது ரபி தனது பகல் ரம்ஜான் விரதத்தை கலைத்து அவர் வீட்டில் விருந்து குடுத்தார். அப்போது நான் அவரிடம் கேட்டேன், ஏன் இன்னிக்கு விரதத்தை சீக்கிரம் முடிச்சிட்டேன்னு, அதுக்கு அவர் சொன்னார், அல்லாவே சொல்லியிருக்காரு தேடி வந்த விருந்தினரை மகிழ்ச்சியா உபசரிச்சிட்டு உன் குடும்ப கடமை எல்லாம் முடிச்சிட்டு எங்கிட்ட வான்னு. அதனால உன்னை முதல்ல கவனிக்கிறேன்னு என்னிடம் விளக்கம் சொன்னார். இந்த நெகிழ்ச்சியான அனுபவமும், என்னுடைய சபரி மலை பயண அனுபவமும், ஜாதி மத பேதமற்ற சமுதாயம் காண நான் கொண்ட பேராவலிலும் துள்ளி வந்ததுதான் இந்த கதை.

6. மேஜர் மைனர் - இது விநாயகர் சதுர்த்திக்காக எழுதப்பட்டது. செய்திதாளில் வந்த செய்தி, எந்த மாவட்ட கலெக்டர் என நினைவில்லை, ஈரோடு என நினைக்கிறேன் (என் கல்லூரியில் படித்த எனக்கு நன்கு அறிமுகமான எனக்கு ஒரு வருட ஜூனியர்தான் இப்போது ஈரோடு கலெக்டர்). அவர் விநாயகர் சதுர்த்தியை அமைதியாக எந்த கலவரம் இன்றி கொண்டாடவும், சிலை கரைப்பு பணிகளை எப்படி, எங்கு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி செய்தி வெளியிட்டிருந்தார். அந்த செய்தியும், கொஞ்சம் சிறுகதைக்கே உண்டான டிவிஸ்டும் கலந்து மேஜரானவந்தான் இந்த மைனர் (கதை).


7. ஊருக்குதான் உபதேசம் - இது சுவாரசியமான விசயம். பா.ம.க தலைவர் ராமதாஸ் அவர்கள் தன்னுடைய பசுமை டி.வி யின் ஆண்டு விழாவில் தமிழ் எப்படி எல்லாம் உபயோகிக்க வேண்டுமென வலியிறுத்தி பேசிய பேச்சு. சோறுன்னுதான் சொல்லணும் சாதம்னு சொல்லக் கூடாது, சாதம் வட மொழிச்சொல் என்று. படித்தவுடன் சிரிப்பு வந்தது. இவர் பேரிலேயே "தாஸ்" என்ற வடமொழி சொல் உள்ளதே அதற்கு அவர் என்ன பண்ணுவார் என்று. பல அரசியல்வாதிகள் தன் சுயநலத்திற்காக ஊருக்கு ஒரு விதியும் தனக்கு ஒரு விதியும் வைத்து பொதுமக்களை சுரண்டுகிறார்களே என்ற ஆதங்கத்தில் வந்த உபதேசம்தான் இது.

8. தவிப்பு - இது எனது முதல் கதை. யோசித்து யோசித்து கதை களம் பிடித்தேன். ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் வைக்க வேண்டுமென ரொம்பவே முயற்சி செய்தேன். கல்லூரியில் படிக்கும் போது ஆண்டு விழா மலர் வெளியிடுவார்கள். அதற்கு விளம்பரம் பிடிக்க நாங்கள் செல்வது வழக்கம். அப்படி போன இடத்தில் ஒரு பெண் காரியதரிசியிடம் நடையாய் நடந்து, அவர் இன்னிக்கி தரேன், நாளைக்கு தரேன்னு என என்னை அலைய விட்டு, நானும் ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து கடைசில் நண்பன் சொன்ன ஐடியாவுடன் (ரெண்டு பெரிய விளம்பர கட்டம் வாங்கினா ஒரு சின்ன விளம்பர கட்டம் இலவசம்) சென்று ஒரு வழியாக விளம்பரம் பிடித்து முடித்தேன். அந்த தவிப்பின் பிரதிபலிப்புதான் இந்த தவிப்பு.


கதையைப் படித்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Tuesday, November 27, 2007

உறவுகள்


பெரியசாமியும் சின்னசாமியும் எதிரும் புதிருமாக கையைக் கட்டியவாறே முகத்தை திருப்பிக் கொண்டு பஞ்சாயத்து முன் வந்து நின்றனர். பஞ்சாயத்து தலைவர் கணக்குபிள்ளை குடுத்த பிராதை கையில் வாங்கிக் கொண்டு மெளனம் கலைத்து பேச ஆரம்பித்தார். இந்த முறை என்னடா பிரச்சினை உங்களுக்குள்ள? ஏண்டா உங்க அண்ணன் தம்பி பிரச்சினையை தீர்க்கறதுக்கே வருசத்தில பாதி முறை பஞ்சாயத்தை கூட்ட வேண்டியிருக்கு. சொல்லுடா சின்னசாமி, நீதான் புகார் கொடுத்திருக்க, உன் புகாரை முதல்ல சொல்லு என்றார்.


ஒண்ணுமில்லைங்க, நேத்து ராத்திரி எங்க அண்ணன்... என சொல்லி முடிப்பதற்கு முன்பே அவன் மனைவி லட்சுமி, என்னய்யா இன்னும் மழுப்பற அந்த ஆளு பண்ண அட்டூழியத்த சொல்லுவியாம் அத விட்டுபுட்டு அண்ணன் நொண்ணன்னு என்று சீறினாள். ஏ புள்ள, பஞ்சாயத்துல பிரச்சினையை விசாரிக்கறமுல்ல, அதுக்குள்ள உனக்கு என்ன பெரியத்தனம், சித்த சும்மா இரு என்று தலைவர் அவளை அடக்க சின்னசாமி புகாரை தொடர்ந்தான். நேத்து ராத்திரி என் வயல்ல இருந்த பயிருக்கு தீ வச்சிப்புட்டாருங்க, நல்ல வேளை நான் சமயத்தில பார்த்து தீயை அணைச்சிப்புட்டேன், இருந்தாலும் பயிரு சேதமாயிருச்சுங்க. இவருதான் தீய வச்சாருன்னு சாட்சி கூட இருக்குதுங்கய்யா. இவரு சங்காத்தியமே இனி வேண்டாம், நான் அவருக்கு தம்பியும் இல்ல, அவரு எனக்கு அண்ணணும் இல்ல, இந்த உறவே வேண்டாம், அத்து விட்டுருங்கய்யா, அதுக்கு பிறகு அவரை வெட்டிபுட்டு ஜெயிலுக்கு போயிடறேன் என்று கோபமாக ஒரே மூச்சில் புகாரை சொல்லி முடித்தான்.


தலைவர் சாட்சிகளைப் பார்க்க அவர்களும் அதுதான் நடந்த்தது என்று தலையை ஆட்டி ஆமோத்தினர். ஏண்டா, உனக்கு என்ன புத்தி கித்தி கெட்டு போச்சா சோறு போடற பயிருக்கு போயி தீய வச்சிருக்கிய, ஏதுக்கடா இப்படி செஞ்ச என தலைவர் பெரியசாமியைப் பார்த்து கேட்டார்.


பின்ன என்னாங்க. எம் பொண்டாட்டி, அதுவும் வயித்துப் புள்ளக்காரி தண்ணி எடுத்துக்கிட்டு வரும் போது இவன் காரக் களத்து வழியா வந்திருக்கா. அதுக்கு இவனும் இவன் பொஞ்சாதியும் சேர்ந்துகிட்டு இந்த வழியா என் களத்துல போவக்கூடாது, சுத்திக்கிட்டு போன்னு சொல்லி திருப்பி அனுப்பியிருக்காங்க. அந்த கிறுக்கு புள்ளையும் வயித்துல புள்ளய வச்சிக்கிட்டு வயலை சுத்திகிட்டு வந்திருக்கா. ஒரு ஈவு இரக்கம் வேணாம், அண்ணின்னா அம்மாவுக்கு சமம், அது கூட தெரியாத மரியாத கெட்ட ஜனங்க. அதான் கோவம் வந்திருச்சு, தீய வச்சிப்புட்டேன். அவன் சொன்ன மாதிரியே உறவ அத்து வுட்டுருங்க, அதுக்கு பிறகு நானா அவனா பார்த்துக்கிறேன். நான் பார்க்க கோவணம் கட்டுண அவனுக்கு அவ்வளவு வீராப்பு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்னு நான் காட்டறேன் என்று பதிலுக்கு சீறினான் பெரியசாமி.


இதைக் கேட்ட தலைவர், என்னதான் நீ உன் கோவத்த சொன்னாலும், பயிர் சேதம் பண்ணியிருக்க கூடாது. அதுக்கு உண்டான நஷ்ட ஈட அவனுக்கு நீ குடுத்துதான் தீரணும். அது மட்டுமல்ல பஞ்சாயத்து தண்டனையும் உனக்கு உண்டு. 200 ரூவா அபராதமும் 50 தடியடியும்தான் பஞ்சாயத்து தண்டனை என தன் தீர்ப்பை சொல்லி முடித்தார். பெரியசாமியும் தலையை ஆட்டிக் கொண்டே வேறு வழியின்றி நஷ்ட ஈட்டையும் அபராதத்தையும் கணக்குப்பிள்ளையிடன் குடுத்தான். கணக்குப்பிள்ளை அபராத்தை எடுத்துக் கொண்டு நஷ்ட ஈடை சின்னசாமியின் கையில் குடுத்து விட்டு அருகிலுருந்த மாடனுக்கு கட்டளையிட்டார். டேய், அந்த உருட்டுக்கட்டையை எண்ணையில தோச்சு எடுத்துட்டு வா. மாடனும் தயாராக வச்சிருந்த கட்டையை எடுத்துக் கொண்டு சட்டையை கழட்டி தயாராக நின்றிருந்த பெரியசாமியின் அருகில் சென்று தண்டனையை நிறைவேற்ற கட்டையை ஓங்கினான்.


அது வரை நஷ்ட ஈட்டை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்த சின்னசாமி தலைவரை பார்த்து ஐய்யா ஒரு நிமிஷம், ஒரு வேண்டுகோள், அவரை அடிக்கும் போது, முதுகில அடிக்க வேணாம்னு சொல்லுங்கய்யா. சின்ன வயசில காய் பறிக்க நாங்க ரெண்டு பேரும் மரத்தில ஏறும் போது கிளை ஒடிஞ்சு நான் கீழே விழ இருந்தேன். அப்ப என்னய மேல தூக்கி விட்டுட்டு விழுந்துட்டாரு. விழுந்ததில அவருக்கு முதுகில பலமா அடிப்பட்டு பிறகு முதுகு பலகீனமாயிருச்சு. அதனால முதுகில அடி விழுந்தா அவரு தாங்க மாட்டாரு, முதுகு தவிர வேற எங்க வேணா அடிக்க சொல்லுங்கய்யா என்று நா தழு தழுக்க கூறியதைக் கேட்டு பெரிசாமியின் கண்களும் கலங்கியது.


இதைக் கேட்ட பஞ்சாயத்து தலைவர் புன்னகைத்தவாறே மாடனை திரும்பி வர சைகை காட்டி பேச ஆரம்பித்தார். ஏண்டா, அவனுக்கு அடிச்சா வழிக்கும்னு உன் மனசு வலிச்சு ஒரு சொட்டு கண்ணித் தண்ணி விட்டியே இதுதான் பாசங்கிறது. ரத்த சம்பந்தத்தில வந்த உறவை அந்த ஆண்டவன் இல்ல உங்கள பெத்த ஆத்தா வந்தா கூட அத்து வக்க முடியாது. உறவுங்கிறது நாம வேணுங்கிற போது சேர்த்துகிறதுக்கும் வேணாங்கிற போது கழட்டி விடறதுக்கும் ஒண்ணும் நம்ம கால்ல போடற செருப்பு இல்ல. அது நம்ம உடம்பு தோல் மாதிரி எப்பவுமே கூடவே ஒட்டியேதான் இருக்கும் சாகற வரைக்கும். புத்தி கெட்டு பூமிக்கும், பொருளுக்கும், வெட்டி கெளவரத்துக்கும் காட்டற வீராப்ப விட்டுபுட்டு ஒத்துமையா பொழச்சி இருக்கற வழிய பாருங்கடா என்று கூறி பஞ்சாயத்த முடித்தார்.


பெரியசாமிக்கும் சின்னசாமிக்கும் கூட ஏதோ உறைத்தது போல இருந்தது.

Thursday, November 8, 2007

சரவெடி


என் நண்பர் கரண் "சரவெடி" என்ற தலைப்பைக் கொடுத்து கதை எழுத சொன்னார். கதை எழுத காரணமாக இருந்த நண்பர் கரணுக்கும், மற்ற ஏனைய வாசக நண்பர்களுக்கும் என் குடும்பத்தார் மற்றும் என் சார்பாக "தீபாவளி நல்வாழ்த்துக்கள்".


கையில் இருந்த நூறு ரூபாயை திரும்ப திரும்ப எண்ணிக் கொண்டிருந்த பாலு அப்பாவின் குரல் கேட்டு நிமிர்ந்தான். எலே நூறு முறை இல்ல ஆயிரம் முறை எண்ணுனாலும் நூறு ரூவாதான் இருக்கும், திருப்பி திருப்பி எண்ணுனா நோட்டு என்ன குட்டியா போடும். சீக்கிரம் கடைத்தெருவுக்கு போயி பட்டாசு வாங்கியா. இப்பமே சொல்லிப்புட்டேன், தம்பி தங்கச்சி எல்லாரும் வெடிக்கற மாதிரி கம்பி மத்தாப்பூ, சங்கு சக்கரம்னு வாங்கு. ஆன வெடி பூன வெடின்னு வாங்கிட்டு வந்து நின்ன, அப்புறம் தீவாளி உனக்குதான். நான் இந்த டைய்லர் கடைக்கு போயி துணி வாங்கிட்டு வரதுக்குல்ல வந்துறணும். அங்கிட்டு இங்கிட்டு பராக்கு பார்க்காம சீக்கிரம் வா என்று கூறியவாறே கிளம்பினார். குடுத்தது நூறு ரூவா, இதுல ஆயிரத்தெட்டு கண்டிஷன் வேற, முணகிக் கொண்டே இவனும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். பட்டாசு விக்கிற விலையில மத்தாப்பூ சங்கு சக்கரம் வாங்குனாலே நூறு ரூவா பத்தாது, இதுல எப்படி நாம சரமெல்லாம் வாங்கறது. இந்த வருசமும் எதுத்த வூட்டு நாகராஜு வெடிக்கறத வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் என்று மனதுக்குள் எண்ணியவாறே கடைதெருவை வந்தடைந்தான்.

கடைத்தெருவே களை கட்டியிருந்தது. நடக்கவே வழியில்லை. மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. டேய் பாலு, கூடப் படிக்கும் சேகரின் குரல் கேட்டது. எலே பட்டாசு வாங்க கிளம்பிட்டியாலே. இங்க எல்லாம் வாங்காதே, ஊருப்பட்ட விலை சொல்லுவாங்க பழைய பட்டாச கட்டிருவாங்க. நம்ம பாளையம் அண்னாச்சி பெரிய கடை போட்டிருக்காரு, அங்கிட்டு போ, விலையும் கம்மி, பட்டாசும் புதுசா இருக்கும். சொல்லிக் கொண்டே காற்றாய் மறைந்தான். பாலுவுக்கும் அதுவே சரியெனப்பட்டது. கூட்டத்தில் ஊர்ந்து அண்ணாச்சி கடையை வந்தடைந்தான். ஆளுயரத்துக்கு பலகை கட்டி மேடை போல கடையை போட்டிருந்தார்கள். பட்டாசு எடுத்து குடுத்து பில் போட பல ஆட்கள் மேடை மேல் இருந்தனர். இவனும் அப்பா சொன்ன மாதிரியே மத்தாப்பூ சங்கு சக்கரம் எல்லாம் எடுத்து கூடவே ஒரு ஹண்ட்ரட் வாலா சரத்தையும் எடுத்து குடுக்க சொல்லி கேட்டான். நூத்தி பதினேழு ரூவா ஆச்சு என்றார் பில் போடுபவர். இவன் நூறு ரூபாயை மட்டும் தயங்கிபடியே நீட்டினான். அப்ப இந்த சரம் எல்லாம் வராது, வேணும்னா இந்த ஊசி வெடி ஒரு பாக்கெட் போடறேன் என்று சொல்லி பையில் போட்டு மீதிக் காசை கொடுத்தார். சரி, நமக்கு அவ்வளவுதான் என்று திரும்புகையில் பின்னால் இருந்தவரின் கை பட்டு இவன் கையிலிருந்த பை நழுவி பட்டாசு எல்லாம் கீழே விழுந்து மேடைக்கருகில் ஆங்காங்கே சிதறியது. இவனும் சிதறிய பட்டாசுகளை ஒவ்வொன்றாக எடுத்து பையில் போடும் போதுதான் கவனித்தான் மேடைக்கடியிலும் சில சிதறியிருந்தது. உடனே மேடைக்கடியில் நுழைந்து சிதறிய பட்டாசை எடுத்து பையில் போடும் போதுதான் அவன் கண்ணில் பளபளவென அந்த சரக்கட்டு பட்டது. இது நம்ம வாங்கலியே, தவுசண்ட் வாலா மாதிரி இருக்கே. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து விட்டு அதையும் எடுத்து பையில் போட்டுக் கொண்டு விடுவிடுவென அந்த இடத்தை காலி செய்தான்.

வழியெல்லாம் ஒரே யோசனை. ஒருவேளை அண்ணாச்சி வேற யாருக்கோ போடறத தவறா நம்ம பையில போட்டுட்டாங்களோ. இல்ல நம்மல மாதிரி யாரோ தவற விட்டிருப்பாங்களோ. அப்பா கேட்டா என்ன சொல்றது. இத எப்படி எங்க ஒளிச்சி வைக்கிறது. ஊருக்கு வெளியில் உள்ள பாழடைந்த புளியமர பங்களா உடனே ஞாபகத்துக்கு வந்தது. நண்பர்களுடன் அவ்வப்போது விடுமுறையில் புளி அடிக்க செல்வது வழக்கம். அங்கு யாரும் வசிப்பதில்லை. அதுதான் சரியான இடம். இப்ப வச்சிட்டு நாளைக்கு வந்து எடுத்து அங்கய கூட வெடிக்கலாம். அதுவே நல்ல யோசனையாக பட, வேக வேகமாக நடந்து புளியமர பங்களாவை வந்து அடைந்தான். அங்குள்ள இடிந்த திண்ணை ஒன்றின் அடியில் மறைவாக வைத்து விட்டு திரும்பியவனை ஒரு அதட்டல் குரல் தடுத்தது. யாருலே அது, இங்க என்னலே பண்றே? இல்லண்ணே, புளியங்கா பொறுக்க வந்தேன் என்று கூறிவிட்டு வேகமாக நிற்காமல் ஓட்டமெடுத்தான்.

எலே பழனி, யாருடா அது, பின்னால் தள்ளி வந்து கொண்டிருந்த மணி கேட்டான். யாரோ பொடிப் பையன் புளியங்கா பொறுக்க வந்திருப்பான் போலிருக்கு என்றான் பழனி பதிலுக்கு. சரி அத விடு நீ போன வேலை கச்சிதமா முடிஞ்சுதா? இது மட்டும் சக்சஸ் ஆயிடுச்சுன்னா, அப்புறம் இன்டெர்நேஷனல் லெவல்ல நாம பெரிய ஆளுக ஆயிரலாம் என்றான் மணி. அதெல்லாம் கச்சிதமா முடிச்சுட்டேன், யாரும் பார்க்காத மாதிரி இடத்தில சீக்ரெட்டா வச்சிட்டு வந்திருக்கேன் என்றான் பதிலுக்கு பழனியும். சரி வா, ஒரு ரவுண்ட் போடலாம் என்றவாறே மடியிலிருந்து பாட்டிலை எடுத்து இரண்டு கிளாஸில் ஊற்றினான். கூடவே முனியாண்டி விலாஸ் பிரியாணி பொட்டலத்தையும் பிரித்து வைத்தான். இருவரும் இப்பவே ஒரு லெவலுக்கு போக ஆரம்பித்தார்கள்.

"டமால்" "டமால்" "டமால்". தீவாளி வந்தா இது பெரிய இம்சடா, தூங்கக் கூட முடியாது, டேய் பாலு போய் படுரா என்றார் அப்பா. பாலுவும் அடுத்த நாள் காலை அந்த சரவெடியை எப்படி வெடிப்பது என்று எண்ணிக்கொண்டே தூங்க ஆரம்பித்தான்.

அடுத்த நாள் காலை, ஊரே பரபரப்பாக இருந்தது. லோக்கல் பேப்பரில் தலைப்பு செய்தி கொட்டை எழுத்துகளில் வெளியாயிருந்தது. நகரின் முக்கிய இடங்களில் குண்டு வைத்து தகர்க்க சதி. பழனி, மணி என்ற 2 சமூக விரோதிகள் புளியமர பங்களாவில் நாட்டு குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது, குண்டு தவறி வெடித்து இறந்தனர். குண்டை தவுசண்ட் வாலா பட்டாசு பேக்கில் வைத்து வெடிக்க திட்டம் போட்டுள்ளதாகவும் புலன் விசாரணையில் தெரிகிறது. இவர்கள் பிண்ணனியில் யார் என போலீஸார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள். இதைப் படித்த பாலுவுக்கு மட்டும் தெளிவாக புரிந்தது தான் எடுத்து வந்தது என்னவென்று. அமைதியாக தான் வாங்கி வந்த கம்பி மத்தாப்பை தம்பிக்கு பிடித்துக் காட்ட ஆரம்பித்தான்.

Tuesday, November 6, 2007

குடியானவ ராசா




கிழக்கால கம்மாக்கரை
தண்ணியில்ல வறண்டு போயி
ஆகிப்போச்சு சும்மாக்கரை
மழை பேய்ஞ்சு பல வருசமாச்சு
ஆடு மாடு மேய்ச்சி திரியும் இளவட்டம்
கில்லியாட இடமுமிங்கே தோதாச்சு

மேற்கால மாரியாக் கோயில்
வருசம் கண்டா திருவிழா
அதுக்கொண்ணும் குறைச்சலில்லை
இங்க அரிசி சோத்துக்கே வழியில்லை
ஆனா எம் பொஞ்சாதி
மாவிளக்கு போட மட்டும் தப்பவில்லை

குறுக்கால அரை கிலோ மீட்டர்
கூரை வீடு மச்சி வீடுன்னு
ஊரு ஜனமும் பெருகிப் போச்சு
அப்பன் வழி என் சொத்து
அரை ஏக்கர் மேட்டாங்காடாச்சு
பேருக்குதான் விவசாயி
பயிருக்கே வழியில்லாம போச்சு

காத்தால குடிக்கத்தான்
குளுகுளுன்னு கம்பங்கூழு
பகலெல்லாம் வேர்வை சிந்த
கிழங்கு மில்லு கூலி வேலை
ராவுக்கு உடம்பு நோவு
இருக்குதய்யா
கிளுகிளுன்னு நாட்டு சரக்கு

சாயங்கால வேளையில
பஞ்சாயத்து டிவிதான்
அப்பப்ப கீத்து கொட்டாய்
தரை டிக்கட்டுல சினிமாதான்
எம்.ஜி.ஆர் சிவாஜி போயி
ரஜினி கமலும் வந்தாச்சு
ரேடியோல கேட்ட காலம் போயி
டிவி சீரியலும் வந்தாச்சு

த்தனைதான் மாறினாலும்
எம் பொழப்பு மாறாது
எதிர்பார்ப்பும் ஒண்ணுமில்லை
ஏமாற்றமும் காணவில்லை
ஏன்னா நான் எப்பவுமே
மனசார குடியானவ ராசாதான்

Sunday, November 4, 2007

மூலதனம்


ன்னை இறக்கி விட்ட அரசு விரைவு பேருந்து புழுதி பறக்க போவதை கனத்த மனதுடன் பார்த்தவாறே சேகர் பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். எத்தனை கசப்பான அனுபவங்கள், நினைக்கையில் நடையே தள்ளாடியது, எல்லாம் போச்சு, இனி இந்த கிராமம்தான் நமக்கு கதி. என்னடா போன மச்சான் திரும்பி வந்த கதையா பொட்டி படுக்கையோட வந்துட்டே, வாசலில் கிழவியின் வரவேற்பு. இதுக்குதான் நான் அப்பமே சொன்னேன், வயலைப் பார்துக்கிட்டு எனக்கு ஒத்தாசையா சித்த இருடான்னு கேட்டாதானே எல்லாம் பட்டாதான் புரியும் இது அப்பாவின் பங்கு. அவன வந்ததும் வாராம வாய்க்கு வந்தத பேசாதீங்க, சேகரு நீ போயி கை கால் கழுவிட்டு வாடா, உனக்காக இட்டலி பண்ணியிருக்கேன், சூடா சாப்பிடு என அம்மா மட்டும் அன்புடன் இவன் பங்குக்கு நின்றாள்.

சேகர் துணி மாற்றி கை கால் கழுவிக் கொண்டு அம்மா வைத்த இட்லியை சாப்பிட்டு விட்டு கையித்து கட்டிலில் படுத்து கண் மூடினான். எத்தனை கனவுகளுடன் சென்னை பயணம். ஒரு வருசமாச்சு. ஏறி இறங்காத கம்பெனி வாசலே இல்லை. அனுபவம் இல்லை, இந்த வேலைக்கு உன் படிப்பு கொஞ்சம் அதிகம், இந்த வேலைக்கு நீ அந்த டிரையினிங் முடிச்சிருக்கணுமே என எல்லா இடங்களிலும் பல விதமான பதில்கள். பயோ டேட்டாவை திருவிழா நோட்டீஸ் மாதிரி போட்டோ காபி எடுத்து எத்தனை இடத்தில் குடுத்திருப்பான். ஒவ்வொரு கம்பெனிக்கும் அதற்கேற்ற மாதிரி சிரமம் எடுத்து தனியாக தயார் செய்வான். ஒன்றும் பயனில்லை. யாரோ சொன்னார்கள் என்று தன் தொகுதி எம்.எல்.ஏ-வின் பி.ஏ-விடம் கூட ஒரு 5 காபி குடுத்து வைத்தான். வேலை கிடைத்தால் தனியாக கவனிப்பதாக கூட சொல்லி வைத்தான். ஒன்றும் பயனில்லை. அரும்பாக்கம், அம்பத்தூர் என எல்லா தொழிற்பேட்டை கம்பெனிகளில் இவன் கால் படாத இடமே இல்லை. பேப்பரில் பார்த்த உடனே கட் செய்து செல்வான். ஆனால் அதே புளித்துப் போன பதில்கள். எத்தனை நாளைக்குதான் அப்பன் ஆத்தா காசில காலம் தள்ளறது. இனியும் முடியாது என முடிவு செய்து ஊருக்கே திரும்யிருந்தான்.

டேய், என்னடா பகல் கனவா, எந்திருடா என்றார் அப்பா. வா, இந்த மேற்கு பாறை முனிசாமிய போயி பாத்துட்டு வரலாம், கொஞ்சம் சைக்கிளை மிதி என்று அழைத்தார். இவனும் மறு பேச்சு பேசாமல் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். ஒரு அரை மணி நேரத்தில் முனிசாமியின் வீட்டை அடைந்தனர். இவன் வாசலிலேயே நிற்க, அப்பா உள்ளே சென்றார். ஒரு 15 நிமிடம் இருக்கும் திரும்பி வந்து சரி போலாம்பா என்றார். இவனும் சைக்கிளை மிதித்துக் கொண்டே கேட்டான். இவரை பார்க்க எதுக்கப்பா இவ்வளவு தூரம் வந்தீங்க, ஏதும் கொடுக்கல் வாங்கலா என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லையடா, இந்த முனிசாமி இருக்கானே நல்லா புத்திசாலி. பல இடத்தில கூலி வேலை செய்வான். எந்த பருவத்தில எந்த மண்ணுக்கு என்ன பயிர் போடணும்னு தான் அனுபத்திலய சொல்லிருவானா பார்த்துக்கோயேன். பல இடம் அனுபவம் இருக்கறதுனால அவன் கணிப்பும் ஆலோசனையும் சரியா இருக்கும். நம்ம தோட்டத்தில கூட இப்ப கடலை போட சொல்லி சொல்றான். நீ நாளைக்கே வண்டி கட்டிட்டு போயி நம்ம சொசயிட்டில ஒரு 2 மூட்டை விதை கடலை வாங்கியாந்துரு என்றார். இவனும் தலையை ஆட்டியவாறே ஒரு யோசனையுடனே சைக்கிளை மிதித்தான்.

இரண்டு நாள் இருக்கும், தன் துணி மணிகளை அவசர அவசரமாக அள்ளி எடுத்து பெட்டியில் வைத்தான். அம்மா, நான் சென்னைக்கு போறேன் வேலை விசயமா என்று அப்பா இல்லாத நேரமாக பார்த்து பணத்தை வாங்கி கொண்டு கிளம்பினான். 3 மாதமிருக்கும், மீண்டும் வீடு திரும்பினான். ஆனால் இந்த முறை ஒரு உற்சாகத்துடன் காணப்பட்டான். என்னடா இந்த முறையாவது வேலை கிடைச்சதா என்று அப்பா கேட்டார். வேலை மட்டுமில்லப்பா, 2-3 பேருக்கும் வேலையும் குடுத்திருகேன் என்றவாறே தன் விசிட்டிங் கார்டை காண்பித்தான். வெஸ்ட் ராக் வேலை வாய்ப்பு ஆலோசனை மையம் என்றிருந்தது. ஆமாம்பா, சென்னையில இருந்த ஒரு வருச காலத்தில எனக்கு எல்லா கம்பெனியும் அத்துப்படி, எங்க எந்த மாதிரி வேலைக்கு ஆள் எடுக்கிறாங்க, எப்படி பயோ-டேட்டா எழுதறதுன்னு எல்லாம் தெரியும். இந்த ஒரு வருச அனுபவத்தயே மூலதனமாக்கி நானே இப்ப கம்பெனி ஆரம்பிச்சிட்டேன். நிறைய பசங்க படிச்சி முடிச்ச உடனே எங்களை தேடி வராங்க. நாங்களும் அவங்களுக்கு எப்படி எந்த மாதிரி வேலை தேடறதுன்னு ஆலோசனை குடுக்கறோம், நல்ல வருமானமும் கூட என்றான். நீ நல்லா இருந்தா சந்தோசமடா, சரி, இந்த சைக்கிளை கொஞ்சம் மிதி இந்த மேற்கு பாறை முனிசாமிய போயி பாத்துட்டு வரலாம், கடலைக்கு அப்புறம் என்ன பயிரிடலாம்னு கேட்டுட்டு வந்திரலாம் என்றார். இவனும் சந்தோசமாக சைக்கிளை மேற்கு பாறையை நோக்கி மிதிக்க ஆரம்பித்தான். அவன் சட்டை பையில் வெஸ்ட் ராக் விசிட்டிக் கார்டும் ஆடிக் கொண்டிருந்தது.