Sunday, November 4, 2007

மூலதனம்


ன்னை இறக்கி விட்ட அரசு விரைவு பேருந்து புழுதி பறக்க போவதை கனத்த மனதுடன் பார்த்தவாறே சேகர் பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். எத்தனை கசப்பான அனுபவங்கள், நினைக்கையில் நடையே தள்ளாடியது, எல்லாம் போச்சு, இனி இந்த கிராமம்தான் நமக்கு கதி. என்னடா போன மச்சான் திரும்பி வந்த கதையா பொட்டி படுக்கையோட வந்துட்டே, வாசலில் கிழவியின் வரவேற்பு. இதுக்குதான் நான் அப்பமே சொன்னேன், வயலைப் பார்துக்கிட்டு எனக்கு ஒத்தாசையா சித்த இருடான்னு கேட்டாதானே எல்லாம் பட்டாதான் புரியும் இது அப்பாவின் பங்கு. அவன வந்ததும் வாராம வாய்க்கு வந்தத பேசாதீங்க, சேகரு நீ போயி கை கால் கழுவிட்டு வாடா, உனக்காக இட்டலி பண்ணியிருக்கேன், சூடா சாப்பிடு என அம்மா மட்டும் அன்புடன் இவன் பங்குக்கு நின்றாள்.

சேகர் துணி மாற்றி கை கால் கழுவிக் கொண்டு அம்மா வைத்த இட்லியை சாப்பிட்டு விட்டு கையித்து கட்டிலில் படுத்து கண் மூடினான். எத்தனை கனவுகளுடன் சென்னை பயணம். ஒரு வருசமாச்சு. ஏறி இறங்காத கம்பெனி வாசலே இல்லை. அனுபவம் இல்லை, இந்த வேலைக்கு உன் படிப்பு கொஞ்சம் அதிகம், இந்த வேலைக்கு நீ அந்த டிரையினிங் முடிச்சிருக்கணுமே என எல்லா இடங்களிலும் பல விதமான பதில்கள். பயோ டேட்டாவை திருவிழா நோட்டீஸ் மாதிரி போட்டோ காபி எடுத்து எத்தனை இடத்தில் குடுத்திருப்பான். ஒவ்வொரு கம்பெனிக்கும் அதற்கேற்ற மாதிரி சிரமம் எடுத்து தனியாக தயார் செய்வான். ஒன்றும் பயனில்லை. யாரோ சொன்னார்கள் என்று தன் தொகுதி எம்.எல்.ஏ-வின் பி.ஏ-விடம் கூட ஒரு 5 காபி குடுத்து வைத்தான். வேலை கிடைத்தால் தனியாக கவனிப்பதாக கூட சொல்லி வைத்தான். ஒன்றும் பயனில்லை. அரும்பாக்கம், அம்பத்தூர் என எல்லா தொழிற்பேட்டை கம்பெனிகளில் இவன் கால் படாத இடமே இல்லை. பேப்பரில் பார்த்த உடனே கட் செய்து செல்வான். ஆனால் அதே புளித்துப் போன பதில்கள். எத்தனை நாளைக்குதான் அப்பன் ஆத்தா காசில காலம் தள்ளறது. இனியும் முடியாது என முடிவு செய்து ஊருக்கே திரும்யிருந்தான்.

டேய், என்னடா பகல் கனவா, எந்திருடா என்றார் அப்பா. வா, இந்த மேற்கு பாறை முனிசாமிய போயி பாத்துட்டு வரலாம், கொஞ்சம் சைக்கிளை மிதி என்று அழைத்தார். இவனும் மறு பேச்சு பேசாமல் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். ஒரு அரை மணி நேரத்தில் முனிசாமியின் வீட்டை அடைந்தனர். இவன் வாசலிலேயே நிற்க, அப்பா உள்ளே சென்றார். ஒரு 15 நிமிடம் இருக்கும் திரும்பி வந்து சரி போலாம்பா என்றார். இவனும் சைக்கிளை மிதித்துக் கொண்டே கேட்டான். இவரை பார்க்க எதுக்கப்பா இவ்வளவு தூரம் வந்தீங்க, ஏதும் கொடுக்கல் வாங்கலா என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லையடா, இந்த முனிசாமி இருக்கானே நல்லா புத்திசாலி. பல இடத்தில கூலி வேலை செய்வான். எந்த பருவத்தில எந்த மண்ணுக்கு என்ன பயிர் போடணும்னு தான் அனுபத்திலய சொல்லிருவானா பார்த்துக்கோயேன். பல இடம் அனுபவம் இருக்கறதுனால அவன் கணிப்பும் ஆலோசனையும் சரியா இருக்கும். நம்ம தோட்டத்தில கூட இப்ப கடலை போட சொல்லி சொல்றான். நீ நாளைக்கே வண்டி கட்டிட்டு போயி நம்ம சொசயிட்டில ஒரு 2 மூட்டை விதை கடலை வாங்கியாந்துரு என்றார். இவனும் தலையை ஆட்டியவாறே ஒரு யோசனையுடனே சைக்கிளை மிதித்தான்.

இரண்டு நாள் இருக்கும், தன் துணி மணிகளை அவசர அவசரமாக அள்ளி எடுத்து பெட்டியில் வைத்தான். அம்மா, நான் சென்னைக்கு போறேன் வேலை விசயமா என்று அப்பா இல்லாத நேரமாக பார்த்து பணத்தை வாங்கி கொண்டு கிளம்பினான். 3 மாதமிருக்கும், மீண்டும் வீடு திரும்பினான். ஆனால் இந்த முறை ஒரு உற்சாகத்துடன் காணப்பட்டான். என்னடா இந்த முறையாவது வேலை கிடைச்சதா என்று அப்பா கேட்டார். வேலை மட்டுமில்லப்பா, 2-3 பேருக்கும் வேலையும் குடுத்திருகேன் என்றவாறே தன் விசிட்டிங் கார்டை காண்பித்தான். வெஸ்ட் ராக் வேலை வாய்ப்பு ஆலோசனை மையம் என்றிருந்தது. ஆமாம்பா, சென்னையில இருந்த ஒரு வருச காலத்தில எனக்கு எல்லா கம்பெனியும் அத்துப்படி, எங்க எந்த மாதிரி வேலைக்கு ஆள் எடுக்கிறாங்க, எப்படி பயோ-டேட்டா எழுதறதுன்னு எல்லாம் தெரியும். இந்த ஒரு வருச அனுபவத்தயே மூலதனமாக்கி நானே இப்ப கம்பெனி ஆரம்பிச்சிட்டேன். நிறைய பசங்க படிச்சி முடிச்ச உடனே எங்களை தேடி வராங்க. நாங்களும் அவங்களுக்கு எப்படி எந்த மாதிரி வேலை தேடறதுன்னு ஆலோசனை குடுக்கறோம், நல்ல வருமானமும் கூட என்றான். நீ நல்லா இருந்தா சந்தோசமடா, சரி, இந்த சைக்கிளை கொஞ்சம் மிதி இந்த மேற்கு பாறை முனிசாமிய போயி பாத்துட்டு வரலாம், கடலைக்கு அப்புறம் என்ன பயிரிடலாம்னு கேட்டுட்டு வந்திரலாம் என்றார். இவனும் சந்தோசமாக சைக்கிளை மேற்கு பாறையை நோக்கி மிதிக்க ஆரம்பித்தான். அவன் சட்டை பையில் வெஸ்ட் ராக் விசிட்டிக் கார்டும் ஆடிக் கொண்டிருந்தது.

3 comments:

Agathiyan John Benedict said...

பெங்களூருவில் நான் படி படியா ஏறி பயோ டேட்டா குடுத்த ஞாபகம் வந்திடுச்சி எனக்கு; என்னமோ அவனவன் அவனவது மூலதனத்தை உணர்ந்துகொண்டால் சரிதான்; நன்றாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்.

Ravikumar Veerasamy said...

ஜான் - படித்தவுடன் சூட்டோடு சூடாக விமர்சனம் எழுதுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

cheena (சீனா) said...

தன் பலம் தனக்குத் தெரியாமல் வேலை தேடி அலைந்து, ஒரு அனனுபவ சாலியின் ஆலோசனை சொல்லும் முறையைக் கண்டவுடன் தனக்குத் தெரிந்த தன் அனுபவங்களை ஆலோசனைகளாக மாற்றும் மையம் தொடங்கி லாபம் ஈட்டுவது நல்ல முறையில் விளக்கப் பட்டிருக்கிறது. சிறந்த கதை.