Tuesday, November 27, 2007

உறவுகள்


பெரியசாமியும் சின்னசாமியும் எதிரும் புதிருமாக கையைக் கட்டியவாறே முகத்தை திருப்பிக் கொண்டு பஞ்சாயத்து முன் வந்து நின்றனர். பஞ்சாயத்து தலைவர் கணக்குபிள்ளை குடுத்த பிராதை கையில் வாங்கிக் கொண்டு மெளனம் கலைத்து பேச ஆரம்பித்தார். இந்த முறை என்னடா பிரச்சினை உங்களுக்குள்ள? ஏண்டா உங்க அண்ணன் தம்பி பிரச்சினையை தீர்க்கறதுக்கே வருசத்தில பாதி முறை பஞ்சாயத்தை கூட்ட வேண்டியிருக்கு. சொல்லுடா சின்னசாமி, நீதான் புகார் கொடுத்திருக்க, உன் புகாரை முதல்ல சொல்லு என்றார்.


ஒண்ணுமில்லைங்க, நேத்து ராத்திரி எங்க அண்ணன்... என சொல்லி முடிப்பதற்கு முன்பே அவன் மனைவி லட்சுமி, என்னய்யா இன்னும் மழுப்பற அந்த ஆளு பண்ண அட்டூழியத்த சொல்லுவியாம் அத விட்டுபுட்டு அண்ணன் நொண்ணன்னு என்று சீறினாள். ஏ புள்ள, பஞ்சாயத்துல பிரச்சினையை விசாரிக்கறமுல்ல, அதுக்குள்ள உனக்கு என்ன பெரியத்தனம், சித்த சும்மா இரு என்று தலைவர் அவளை அடக்க சின்னசாமி புகாரை தொடர்ந்தான். நேத்து ராத்திரி என் வயல்ல இருந்த பயிருக்கு தீ வச்சிப்புட்டாருங்க, நல்ல வேளை நான் சமயத்தில பார்த்து தீயை அணைச்சிப்புட்டேன், இருந்தாலும் பயிரு சேதமாயிருச்சுங்க. இவருதான் தீய வச்சாருன்னு சாட்சி கூட இருக்குதுங்கய்யா. இவரு சங்காத்தியமே இனி வேண்டாம், நான் அவருக்கு தம்பியும் இல்ல, அவரு எனக்கு அண்ணணும் இல்ல, இந்த உறவே வேண்டாம், அத்து விட்டுருங்கய்யா, அதுக்கு பிறகு அவரை வெட்டிபுட்டு ஜெயிலுக்கு போயிடறேன் என்று கோபமாக ஒரே மூச்சில் புகாரை சொல்லி முடித்தான்.


தலைவர் சாட்சிகளைப் பார்க்க அவர்களும் அதுதான் நடந்த்தது என்று தலையை ஆட்டி ஆமோத்தினர். ஏண்டா, உனக்கு என்ன புத்தி கித்தி கெட்டு போச்சா சோறு போடற பயிருக்கு போயி தீய வச்சிருக்கிய, ஏதுக்கடா இப்படி செஞ்ச என தலைவர் பெரியசாமியைப் பார்த்து கேட்டார்.


பின்ன என்னாங்க. எம் பொண்டாட்டி, அதுவும் வயித்துப் புள்ளக்காரி தண்ணி எடுத்துக்கிட்டு வரும் போது இவன் காரக் களத்து வழியா வந்திருக்கா. அதுக்கு இவனும் இவன் பொஞ்சாதியும் சேர்ந்துகிட்டு இந்த வழியா என் களத்துல போவக்கூடாது, சுத்திக்கிட்டு போன்னு சொல்லி திருப்பி அனுப்பியிருக்காங்க. அந்த கிறுக்கு புள்ளையும் வயித்துல புள்ளய வச்சிக்கிட்டு வயலை சுத்திகிட்டு வந்திருக்கா. ஒரு ஈவு இரக்கம் வேணாம், அண்ணின்னா அம்மாவுக்கு சமம், அது கூட தெரியாத மரியாத கெட்ட ஜனங்க. அதான் கோவம் வந்திருச்சு, தீய வச்சிப்புட்டேன். அவன் சொன்ன மாதிரியே உறவ அத்து வுட்டுருங்க, அதுக்கு பிறகு நானா அவனா பார்த்துக்கிறேன். நான் பார்க்க கோவணம் கட்டுண அவனுக்கு அவ்வளவு வீராப்பு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்னு நான் காட்டறேன் என்று பதிலுக்கு சீறினான் பெரியசாமி.


இதைக் கேட்ட தலைவர், என்னதான் நீ உன் கோவத்த சொன்னாலும், பயிர் சேதம் பண்ணியிருக்க கூடாது. அதுக்கு உண்டான நஷ்ட ஈட அவனுக்கு நீ குடுத்துதான் தீரணும். அது மட்டுமல்ல பஞ்சாயத்து தண்டனையும் உனக்கு உண்டு. 200 ரூவா அபராதமும் 50 தடியடியும்தான் பஞ்சாயத்து தண்டனை என தன் தீர்ப்பை சொல்லி முடித்தார். பெரியசாமியும் தலையை ஆட்டிக் கொண்டே வேறு வழியின்றி நஷ்ட ஈட்டையும் அபராதத்தையும் கணக்குப்பிள்ளையிடன் குடுத்தான். கணக்குப்பிள்ளை அபராத்தை எடுத்துக் கொண்டு நஷ்ட ஈடை சின்னசாமியின் கையில் குடுத்து விட்டு அருகிலுருந்த மாடனுக்கு கட்டளையிட்டார். டேய், அந்த உருட்டுக்கட்டையை எண்ணையில தோச்சு எடுத்துட்டு வா. மாடனும் தயாராக வச்சிருந்த கட்டையை எடுத்துக் கொண்டு சட்டையை கழட்டி தயாராக நின்றிருந்த பெரியசாமியின் அருகில் சென்று தண்டனையை நிறைவேற்ற கட்டையை ஓங்கினான்.


அது வரை நஷ்ட ஈட்டை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்த சின்னசாமி தலைவரை பார்த்து ஐய்யா ஒரு நிமிஷம், ஒரு வேண்டுகோள், அவரை அடிக்கும் போது, முதுகில அடிக்க வேணாம்னு சொல்லுங்கய்யா. சின்ன வயசில காய் பறிக்க நாங்க ரெண்டு பேரும் மரத்தில ஏறும் போது கிளை ஒடிஞ்சு நான் கீழே விழ இருந்தேன். அப்ப என்னய மேல தூக்கி விட்டுட்டு விழுந்துட்டாரு. விழுந்ததில அவருக்கு முதுகில பலமா அடிப்பட்டு பிறகு முதுகு பலகீனமாயிருச்சு. அதனால முதுகில அடி விழுந்தா அவரு தாங்க மாட்டாரு, முதுகு தவிர வேற எங்க வேணா அடிக்க சொல்லுங்கய்யா என்று நா தழு தழுக்க கூறியதைக் கேட்டு பெரிசாமியின் கண்களும் கலங்கியது.


இதைக் கேட்ட பஞ்சாயத்து தலைவர் புன்னகைத்தவாறே மாடனை திரும்பி வர சைகை காட்டி பேச ஆரம்பித்தார். ஏண்டா, அவனுக்கு அடிச்சா வழிக்கும்னு உன் மனசு வலிச்சு ஒரு சொட்டு கண்ணித் தண்ணி விட்டியே இதுதான் பாசங்கிறது. ரத்த சம்பந்தத்தில வந்த உறவை அந்த ஆண்டவன் இல்ல உங்கள பெத்த ஆத்தா வந்தா கூட அத்து வக்க முடியாது. உறவுங்கிறது நாம வேணுங்கிற போது சேர்த்துகிறதுக்கும் வேணாங்கிற போது கழட்டி விடறதுக்கும் ஒண்ணும் நம்ம கால்ல போடற செருப்பு இல்ல. அது நம்ம உடம்பு தோல் மாதிரி எப்பவுமே கூடவே ஒட்டியேதான் இருக்கும் சாகற வரைக்கும். புத்தி கெட்டு பூமிக்கும், பொருளுக்கும், வெட்டி கெளவரத்துக்கும் காட்டற வீராப்ப விட்டுபுட்டு ஒத்துமையா பொழச்சி இருக்கற வழிய பாருங்கடா என்று கூறி பஞ்சாயத்த முடித்தார்.


பெரியசாமிக்கும் சின்னசாமிக்கும் கூட ஏதோ உறைத்தது போல இருந்தது.

7 comments:

துளசி கோபால் said...

நல்லா இருக்கு.

Agathiyan John Benedict said...

// உறவுங்கிறது நாம வேணுங்கிற போது சேர்த்துகிறதுக்கும் வேணாங்கிற போது கழட்டி விடறதுக்கும் ஒண்ணும் நம்ம கால்ல போடற செருப்பு இல்ல. அது நம்ம உடம்பு தோல் மாதிரி எப்பவுமே கூடவே ஒட்டியேதான் இருக்கும் சாகற வரைக்கும். //

"கதை" என்ற பெயரில் ஒரு பெரிய "கருத்தை" சொல்லியிருக்கிறீர்கள். அருமைய்யா... அருமைய்யா (சாலமோன் பாப்பையா ஸ்டைலில் படிக்கவும்)

எதோ சரத்குமார் நடிச்ச சினிமா பார்த்தமாதிரி இருக்குது.

// அண்ணின்னா அம்மாவுக்கு சமம் //
எங்க ஊருல இந்தப் பழமொழியை வேற மாதிரி சொல்லுவாங்கே... அதாவது "அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி"ன்னு -:)

Karan said...

Ravi'in Kal pondra ithayathirkullum Poo pondra memmayana manasu. Excellent story with a great sentimental twist and that makes this story the best of yours so far. Continue your good work please...

Ravikumar Veerasamy said...

துளசி கோபால், ஜான், கரண் - பாராட்டுக்கு நன்றி.

ஜான் - நல்ல ஐடியா. சரத்த தலைவரா பொட்டு விக்ரமன் டைரக்ட் செய்து சூப்பர் குட் தயாரிப்பில வந்தா கதை நல்லா இருக்கும்.

நல்ல ஜோக், எங்க ஊர்லயும் அதே பழமொழிதான், என்ன இன்னும் கொஞ்சம் நீளம். அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தான் பொண்டாட்டி, மொத்தட்தில எனக்கு இரண்டரை பொண்டாட்டி.
(இது நகைச்சுவைதான், வாசகர் எவரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் :-})

Unknown said...

நல்ல அருமையான கதை. நீர் அடித்து நீர் விலகாது என்பது சொல் வழக்கு. அதை உங்கள் கதையின் மூலம் நன்றாக சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.

அண்ணன் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி பழமொழி நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும் உண்மையான அர்த்தம் வேறு.

ஒரு மகனாக அல்லது மகளாக அம்மா, அப்பாவிடம் சிலவற்றை நாம் உரிமையாக கேட்டுப் பெற்றுக்கொள்வோம் அல்லது செய்து தரும்படி சொல்வோம். அதைப்போல, கணவனுக்கு மனைவியிடம் உள்ள உரிமையின் காரணமாக சில வேலைகளை செய்து கொடுக்கும்படி சொல்வது இயல்பு. மனைவியிடம் எந்த அளவு உரிமையுள்ளதோ அதில் பாதி உரிமையுடன் அண்ணியிடமும், முழு உரிமையுடன் தம்பி பொண்டாட்டியிடமும் நடந்து கொள்ளலாம் என்பதுதான் இதன் அர்த்தம்.

Ravikumar Veerasamy said...

பாலா,

பழமொழிக்கு அருமையாக விளக்கம் குடுத்தமைக்கு மிக்க நன்றி.

dotnetsekar said...

ரவி - உங்களுக்கு என் முதல் நன்றி. அருமையான ஒரு கதை கொடுததிர்க்கு.,

பாலா - உங்களுக்கு என் இரண்டாவது நன்றி.. அருமையான விளக்கத்திற்கு..