Monday, December 3, 2007

கி.பி. 2071


ரோஜர் சாமியப்பனின் காலை பிராண்டி எழுப்பினான். அதற்குள் விடிந்து விட்டதா? இப்பதான் படுத்த மாதிரி இருக்குது, ரோஜர் எழுப்புகிறான் என்றால் ஏதாவது முக்கிய செய்தி இருக்கும். அரைத் தூக்கத்தில் கண் விழித்து பார்த்தான். எதிர்பார்த்த மாதிரியே ரோஜர் அவனுடைய செல்லை கவ்விக் கொண்டு வாலாட்டிக் கொண்டிருந்தான். என்ன அவசரமோ என செல்லை வாங்கிப் பார்த்தான். அவசர வானிலை செய்தி, விவசாய கழகத்திலுருந்து அவசர செய்தி என பிளாஷ் செய்திகள் மின்னிக் கொண்டிருந்தது. பக்கத்திலுள்ள ஜாரிலிருந்து ஒரு ரொட்டித் துண்டை எடுத்துப் போட ரோஜர் வாலாட்டி நன்றி சொல்லியவாறே ஒடினான். என்ன செய்தியாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டே செல்லிலிருந்த ஒரு பட்டனை அமுக்க, தன் படுக்கை எதிரில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் லேசர் மூலம் ஒரு ஒளி சதுரம் உருவாக, முதல் செய்தியை படிக்க ஆரம்பித்தான். அடுத்த 24 மணி நேரத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பிக்கும், 3 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளது.


இது என்னடா வம்பா போச்சு, வயலில் நெற்கதிர் முதிர்ந்த தருவாயில் உள்ளது, நாளைக்குத்தானே ரோபோக்கள் மூலமா பயிரை அறுவடை செய்ய கம்யூட்டரில் புரோகிராம் பண்ணி வச்சிருக்கோம். இப்ப முதல்ல அதை மாத்தி, இன்னிக்கே வேலையை தொடங்கற மாதிரி புரோகிராம் பண்ணனும். சரி அடுத்த என்ன செய்தி இருக்கு என பார்த்தான். மோசமான வானிலையைக் காரணம் காட்டி நாளை மறுநாள் நடக்கவிருந்த விவசாய கழக மாநாட்டை இன்று காலையே நடத்த இருக்கிறார்கள். தக்காளி மற்றும் தேயிலை பறிக்கும் அதிநுட்பம் வாய்ந்த ரோபோக்களை தயாரித்து அறிமுகப்படுத்தும் அமைப்பில் இவன் பங்கு நிறைய இருந்தது. இவன் நேரில் சென்று அதை செய்முறை விளக்கம் அளிக்க ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்தான். என்னடா, ஒரே நாளில் இத்தனை சிக்கலா என நினைக்கும் போதே, அவன் அன்பு மகள் மல்லிகா அப்பா என ஓடி வந்தாள். என்னம்மா? சொல்லு என்று தன் அருகில் அழைத்தான். அப்பா, எங்க பள்ளியில போன வாரம் நடந்த தேர்வில நான்தான் முதலா வந்திருக்கேன். அதைப் பாராட்டி, இன்னிக்கு காலையில 10 மணிக்கு விருது குடுக்க போறாங்க. நீங்களும் அம்மாவும் அவசியம் வரணும்பா என்றாள். அப்பதான் எனக்கு பெருமையா இருக்கும் என்று கூறி விட்டு இவன் பதிலைக் கூட எதிர்பாராமல், 10 மணிக்கு பார்க்கலாம்பா என்றவாறே பறந்து சென்றாள்.

அதே 10 மணிக்குதான் டெல்லியில் புது ரோபோவின் செய்முறையை குடுக்க வேண்டும். இன்னிக்கு யார் முகத்திலடா முழித்தோம்? ரோஜர் .... என்னடா இப்படி சிக்கல்ல மாட்டி விட்டுட்டியே? என முணகிக் கொண்டே தன் காலை விருப்ப பானமான ஸ்காட்ச்சை எடுத்து கிளாசில் ஊற்றிக் கொண்டே மணி பார்த்தான். அதற்குள் 8.00 ஆயிடுச்சா? ஒரே முடக்கில் கிளாசில் இருந்ததை வாயில் ஊற்றிக் கொண்டு, தன் செல்லில் இருந்த இன்னொரு பட்டனை அமுக்க, தன் மாஸ்டர் கம்யூட்டரின் புரோகிராம் விண்டோ தெரிய வந்தது. எதோதோ பட்டன்களை அமுக்கி நெல் அறுவடை ரோபோக்களை இன்று காலை 9.00 மணியிலிருந்து வேலை துவங்குகிற மாதிரி புரோகிராமை மாற்றி அமைத்தான். மல்லிகாவின் பள்ளிக்கு கட்டாயம் போகணும், இல்லையென்றால் பாவம் பிள்ளை ஏமாந்து விடுவாள். பள்ளிக்கு போனால், எப்படி டெல்லியில் 10 மணிக்கு செய்முறை விளக்கம் கொடுப்பது. பலமாக யோசித்தான். சரி, அதுதான் நல்ல ஐடியா. விடுவிடுவென எழுந்து மொட்டை மாடிக்கு சென்று தன் கிளைடரை கிளப்பினான். அடுத்த 3வது நிமிடத்தில் தனது பரிசோதனை வயலில் இருந்தான். அங்குள்ள காமிராக்களை ஆன் செய்து அந்த புது ரோபோவை இயக்கி தக்காளி பறிப்பதை விளக்கம் சொல்லிக் கொண்டே வயலில் இயக்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், அனைத்து செயல் முறைகளையும் விளக்கி காமிராவில் பதிவு செய்து தனது செல்போனில் காபி செய்து கொண்டு உடனே கிளைடரை கிளப்பி வீட்டுக்கு வந்து சேர மணி ஏற்கனவே 9:15. வீட்டின் முற்றத்தில் உள்ள மானிட்டரில் ரோபோக்கள் நெல் அறுவடை செய்து கொண்டிருப்பது ஒடிக் கொண்டிருந்தது. அதை பார்த்து கொண்டே குளித்து பள்ளிக்கு கிளம்ப தயாரானான். ஐந்தே நிமிடத்தில் கிளம்பி தயாராகி வந்து தன் மனைவி செண்பகத்திற்காக காத்திருந்தான்.

எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்து வேகமானாலும் இவ மட்டும் சீக்கிரம் கிளம்ப மாட்டாளே என மனதில் நினைத்துக் கொண்டிருந்த போதே, நான் கிளம்பிட்டங்க என செண்பகம் வந்தாள். இருவரும், மீண்டும் கிளைடர் பயணம், 5 வது நிமிடத்தில் பள்ளியில் இருந்தனர். 10 மணி, விழா ஆரம்பமாயிற்று. அதே சமயத்தில், இவன் செல் போனின் ஒரு பட்டனை அமுக்க, இவன் ஏற்கனவே பதிவு செய்த ரோபோ விளக்கமுறையும் டெல்லி அரங்கத்தில் ஒளிபரப்ப ஆரம்பித்தது. தலைமை ஆசிரியர் பேச ஆரம்பித்தார். "எல்லோருக்கும் வணக்கம் .... அதே சமயத்தில், சாமியப்பனின் குரல் டெல்லி அரங்கத்தில் ஒலிக்க ஆரம்பித்தது. "எல்லோருக்கும் வணக்கம், பொதுவா செய்முறைன்னா நேரிலதான் இருக்கும், ஆனா நான் முதல்ல வயல்ல இதை எப்படி பயன்படுத்தறதுன்னு காண்பிச்சுட்டு பிறகு உங்க முன்னால வந்து நிற்க போறேன்" எனக் கூறி செய்முறை படம் ஓட ஆரம்பித்தது. தலைமை ஆசிரியர் மல்லிகாவுக்கு விருது வழங்கும் போது மாணவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தது இவனுக்கு பெருமையாக இருந்தது. பள்ளி விழா ஒருவழியாக 10:30க்கு முடிய, தன்னுடைய ஜெட்டில் தாவி அடுத்த 20வது நிமிடம் டெல்லி அரங்கத்தில் நுழைய அனைவரும் இவனை கை தட்டி வரவேற்றனர். மீதமுள்ள செய்முறையும் முடித்து விட்டு, விருந்தில் கலந்து கொண்டு வீடு வந்து சேர்ந்த போது இரவு மணி 9.00. கருமேகம் வானில் எங்கும் படர்ந்து மின்னலுடம் மிரட்டிக் கொண்டிருந்தது. முற்றத்திலிருந்த மானிட்டர், நெற்கதிர் அறுவடை முடிந்தது என பிளாஷ் செய்து கொண்டிருந்தது. அப்பாடா என படுக்கைக்கு சென்றவன் ரோஜரை தடவிக் குடுத்து விட்டு தனது விருப்ப பானமான ஸ்காட்ச்சை எடுத்து கிளாசில் ஊற்றிக் கொண்டே செல் போனிலுள்ள சினிமா என்ற பட்டனை அமுக்க லேசர் திரையில் சிவாஜி ரஜினி "அதிருதுல்ல" என்று சொல்லிக் கொண்டிருந்தார். படம் வந்து எத்தனை வருசமாச்சு, ஆனா தலைவர் தலைவர்தான் என்று உளறிக் கொண்டே படுக்கையில் மல்லாக்க சாய்ந்தான்.


செண்பகம் கத்திக் கொண்டிருந்தாள். யோவ் என்னய்யா ரோஜா ரோஜான்னு பெனாத்திக்கிட்டு இருக்க. மணி 8-ஆவுது, இன்னும் என்னய்யா தூக்கம்? நாய் காலை நக்கறதைக் கூட தெரியாம மனுசனுக்கு என்ன தூக்கமோ தெரில. எந்திரிய்யா? நாளைக்கு மழை வருதாம், பண்ணையக்காரர் வூட்டுல இன்னிக்கே நெல் அறுவடை வச்சிருக்காங்க. சீக்கிரம் வர சொல்லி ஆள் வந்திருச்சு. அப்புறம் உம் புள்ள மல்லிகாவுக்கு ஒண்ணும் படிப்பு ஏறலயாம். உங்கிட்ட வாத்தியார் பேசணுமாம். அப்படியே பள்ளிக்கூடத்தில போயி என்னானு ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துரு. கந்தன் காலையில உன் பங்கு கள்ளை வேற இறக்கி வச்சிட்டு போயிருக்கான், மூஞ்சிய கழுவிட்டு வந்து குடிச்சுட்டு வேலைக்கு போய்யா. இன்னிக்காவது இந்த கருமாந்தரம் இரண்டாவது ஆட்டம் இங்கிலீசு படம் அது இதுன்னா பார்க்காமா நேரமா வந்து சேரு. நீ எங்க திருந்த போறீயோ என்று ஒரே மூச்சில் கூறிவிட்டு சாணியைத் தட்ட ஆரம்பித்தாள்.

5 comments:

Unknown said...

சாமியப்பனின் High Tech கனவுக்கு ஓர் சபாஷ். இன்றைய சாமியப்பனை கி.பி 2071-க்கு அழைத்துச் சென்ற உங்கள் கற்பனைக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

Anonymous said...

2071 ..... my goodness .... enakku oru nimisham irobot padam paatha effect vara aarambichadhu ;-)

oru vivasaayin viruppam ;-) miga azhagaaaga sitharikka patta vadivam - kanavenbadhai kadaisi varai kaapatriya ezhuthukku oru O podanum :)

Rgds
Vasant

dotnetsekar said...

Chance-a illainga... super story....

thamarai kaliannan said...

Tamil nadu la oru vivasaye English padam paarka porar athuve periya visayam anna.. nalla erukku. Niraiya ezhuthunga namma vairamuthu va thookoduvom.

ராணி said...

அன்புள்ள ரவி...

உங்களுடைய க(வி)தைப் பாத்திரம் ரொம்ப அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக ஒரு மனதுக்கு நெருக்கமான ஒரு வலை பதிவினை படிக்க நேர்ந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி!

புத்தக வாசிப்பு, கவிதை மற்றும் எழுத்தின் மீது சமீபத்தில் ஆர்வம் கொண்டு ஒரு சில எழுத்தாளர்களின் வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்தேன்.அவை மிகவும் ஏதோ ஒரு வகையில் ஈர்த்தாலும், அவற்றுடன் ஒன்றிச் செல்ல இயலவில்லை. ஆனால் உங்களுடைய படைப்புகளை படித்த பொழுது அனைத்தையும் ஒன்றி படிக்க முடிந்தது.

8 கதைகளும் அற்புத அனுபவ பதிவு. கிராமத்து பின்னணி கொண்ட அனைத்தும் கண் முன்னே காட்சிகளாக விரிகின்றன. கதையின் முடிவுகள் அனைத்தும் எதிர்பாராத திருப்பம் கொண்டவை. "தவிப்பு" என்ற கதை முதல் கதையென தோன்றா வண்ணம் நேர்த்தியான படைப்பு.சிறு நிராசை இருந்தாலும் பேரானந்தத்துடன் கொண்டாடிய பண்டிகைகளின் பதிவு மிக அருமை.அரசியல் களம் மற்றும் சமூக நடப்புகள் பற்றி கேளிக்கை கலந்து விமர்சனம் செய்த விதம் மிகவும் நன்று. கி.பி.2071 கதை வேளாண்மையில் மாற்றத்தை விரும்பும் வித்தியாச சிந்தனை.

கவிதை மூன்றும் ஆத்மார்த்தமான படைப்பு.ஆம்!கதை எழுதுவதை விட கவிதை எழுதுவது மண்டையை குடைச்சல் தரும் விஷயம்.
ஆனால் எழுதிய ஒவ்வொன்றும் நம் கைகளில் ஒரு குழந்தையாக தவழ்ந்து பேரானந்தத்தை தரும்.

படைப்புகளுக்கான புகைப்படங்கள் அனைத்தும் மிக பொருத்தமானவை.

கதை உருவான கதை ஒரு அழகிய முன்னோட்டம்.

கவிதை பாத்திரம் உங்களது படைப்புகளால் நிரம்பி வழியட்டும்!அதனை அள்ளிப் பருக காத்திருக்கும் அன்புத் தோழி..

ராணி