அவன் வகுப்பில் நன்கு படிக்கக்கூடியவனாகவும் பணிவானவனாகவும் இருந்தபடியால் அவரின் கனிவான கவனிப்புக்குரியவனாக இருந்தான். அவர் கவிதை மற்றும் பாட்டு எழுதுவதில் ஆர்வமும் ஆற்றலும் உடையவராக இருந்தார். அவர் தன் பெயரை செந்தமிழ் மாறன் என மாற்றிக் கொண்டதற்கு அவர் கலை மேல் வைத்திருந்த ஆர்வக்கோளாறுதான் காரணம். வகுப்பு நேரங்களில் தன் படைப்புகளை மாணவர்களுடன் பெருமையாகப் பகிர்ந்தும் கொள்வார். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அதன் அருமை பெருமை புரிகிறதோ இல்லையோ அவர் சொல்வதை அவர் மீசைக்கு பயந்தாலாவது கேட்டு ரசிப்பார்கள்.
அந்த வருடமும் அவர்களுடைய பள்ளி சார்ந்திருந்த ஒன்றியப் பள்ளிகளிடையே நடக்கும் கலை நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது . அவருக்கும் இந்த வருடம் எப்படியாவது தன் படைப்புகளை தன் மாணவர்கள் மூலமாக வெளிக்கொணருவது என்று எண்ணியபோதுதான் அவன் அவருடைய நினைவுக்கு வந்தான்.
உடனே அவனை அழைத்து அவனிடம் அவர் எழுதிய பாட்டு ஒன்றைக் கொடுத்து பயிற்சி செய்யச் சொல்லி அவன் பெயரையும் பாட்டுப் போட்டிக்குப் பதிவு செய்து வைத்தார். அவன் அதுவரை எந்த மேடையும் ஏறியதும் இல்லை, பாடியதும் இல்லை. இந்த லட்சணத்தில் அவன் குரல் வேறு சற்று தடித்தும் பலமானதுவாகவும் இருக்கும். அதனால் அவனை அவன் குடும்பத்தில் பெருங்குரல்காரன் எனக் கிண்டலும் செய்வார்கள். அவனை நம்பி அந்த ஆசிரியர் போட்டிக்குத் தயாராகச் சொன்னதால் அவனுக்குப் பயம் இன்னும் அதிகமானது. இருந்தாலும் அவர் மீசைக்குப் பயந்து தீவிர பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டான். மற்ற மாணவர்களுக்கு வகுப்பு நேரம் என்றாலும் இவனை மட்டும் ஆசிரியர் தனியாக ஒரு அறையில் பாட்டை படித்துப் பாடும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்வார். அவனும், அனுதினமும்…
‘அப்பாவைப் போல் சிப்பாயாகி
காவல் புரிகுவேன்
நம் அன்னை பாரதத்தையும்
காத்து அருளுவேன்’
என்று தன் உச்ச குரலில் பயிற்சித்து மனப்பாடம் செய்தான். போட்டி நாளும் வந்துவிட்டது. ஆசிரியருக்கு அவன் நன்றாகப் பாடுகிறானோ இல்லையோ அவர் எழுதிய படைப்பைச் சரியாக அவன் வழியாகச் சொல்லவைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. அதனால் அவனைவிட அவருக்குத்தான் அழுத்தம் அதிகரித்தது.
போட்டி அருகிலுள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிறைய மாணவர்கள் பங்கு பெற்றிருந்தனர். அவனும் அவனுடைய முறைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆசிரியரும் அவனும் கிட்டத்தட்டப் பிரசவத்துக்குத் தயாராக இருந்த பெண்ணைப் போலத் தவித்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக இவர்கள் முறையும் வரவே, அவன் நடுவர்கள் முன்பு தான் பயிற்சி செய்ததை முடிந்த வரையில் சரியாகப் பாடிக் காட்டினான். படித்துக் காட்டினான் என்றே சொல்லலாம். சினிமா பாடல்கள், பாரதியார், கண்ணதாசன் போன்ற பாடல்கள் மத்தியில் இவன் பாடிய புதிய பாடலைக் கண்டு நடுவர்கள் ஆர்வத்துடன் யார் எழுதியது எனக்கேட்க அவனும் மீசைக்கார வாத்தியாரை நோக்கி கையைக் காட்டியதைக் கண்ட ஆசிரியரின் மீசையிலும் ஒரு வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
அவன் பாடிய, இல்லை படித்த பாட்டுக்குப் பரிசு எதிர்பார்ப்பது அளவுக்கு மீறி ஆசைப்படுவது என்பது அவருக்கும் தெரியும். ஆனால் நடுவர்கள் அந்தப்பாடலைப் பற்றி விசாரித்தது அவருக்கு ஒரு பெரிய பரிசு வாங்கியது போல இருந்தது. அவனைப் பாராட்டி மகிழ்ந்து தள்ளினார். போட்டிகள் முடிவும் அறிவிக்கப்பட, எதிர்பாராத விதமாக அவன் பெயரை ஆறுதல் பரிசாக அறிவிக்கப்பட்டு ஒரு சோப்பு டப்பாவை வழங்கியபோது அவனுக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. பரிசாகக் கிடைத்த அந்த புதிய பிளாஸ்டிக் சோப்பு டப்பாவின் நறுமணத்தில் அவன் புளங்காகிதம் அடைந்தான்.
அவருக்கும்தான்.
சில வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் அவர் அவனுடைய வீட்டுக்கு வேகவேகமாக சைக்கிளில் வந்தார். அவர் கையில் ஒரு புத்தகம் வேறு இருந்தது.
“டேய் , இங்கப் பாருடா , நீ பாடிய பாட்டு, நான் எழுதிய பாட்டு பத்திரிக்கையில் பிரசுரமாயிருக்கு",
என அவனிடம் அந்தப் பக்கத்தைக் காட்டி பாராட்டி மகிழ்ந்தார். அதைப் பார்க்கும் போது அவனுக்கு மீண்டும் அந்த சோப்பு டப்பா மணம் நினைவுக்கு வந்தது. அவரிடம் இருந்த அந்த புத்தகத்தைக் கையில் வாங்கி ஒருமுறை முகர்ந்து கொண்டான்.
No comments:
Post a Comment