ரைடு - 7
சரஸ்வதி டீச்சர் ஆசிரியராக இருக்கும் வகுப்பில் ஒரு ஆண்டாவது படித்துவிட வேண்டும் என்பது கண்டிப்பாக அந்தப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரின் கனவாக இருக்கும். அவன் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்குக் காரணம் அந்த டீச்சர் சொல்லிக் கொடுக்கும் விதம்தான். அவர் அனைத்து மாணவர்களையும் தன் சொந்த குழந்தைகள் போலப் பாவித்து அன்பாக பார்த்துக் கொள்வார். யாராவது சரியாகப் படிக்கவில்லை என்றாலும்,
“படிக்க முடியலையா, என்னப்பா ஆச்சு, சரி விடு பிறகு கத்துக்கலாம்”,
என்பார். அடிக்க மாட்டார் கடும் சொற்களை உதிர்க்க மாட்டார். அவ்வளவு அன்பான இரக்க குணம் கொண்டவர் அவர்.
ஏழாம் வகுப்புப் படிக்கும்போது அவனுக்கும் அவர் வகுப்பில் படிக்கும் கொடுப்பினை கிடைத்தது. அவன் கையெழுத்து வேறு நன்றாக முத்துமுத்தாக பளிச்சென அச்சடித்தது போலவே இருக்கும். டீச்சருக்கும் அவனை ரொம்பவே பிடித்துப்போய் வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் தினமும் தேதி மற்றும் மாணவர் வருகை விவரங்களை எழுதும் பணியை அவனுக்கு வழங்கினார். கொடுத்த பணிகளை செவ்வெனசெய்து அவனும் விரைவிலேயே ஆசிரியரின் செல்லப் பிள்ளையாகவும் ஆகிவிட்டான்.
அந்த ஆண்டின் காலாண்டு தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் இடும் பணியும் முடிந்திருந்தது. ஆசிரியர் தன் வகுப்பிலுள்ள மாணவர்களின் மதிப்பெண்களைப் பட்டியலாக ஒரு ரெஜிஸ்டரில் எழுதிப் பதிவிட வேண்டும். பள்ளியில் உள்ள எல்லா ஆசிரியர்களுக்கும் நிர்வாகம் அதற்கென தனியாக ஒரு ரெஜிஸ்டரை ஒதுக்கித் தருவார்கள். ஆசிரியர்களும் தமது வகுப்பிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு அந்த நோட்டைப் பல செக்சன்களாகப் பிரித்து வகுப்புவாரியாக மாணவர்கள் பெயரைப் பதிவிடுவர். அந்த செக்சன்களைப் பிரிக்கும் போது கவனமாகக் கணக்கிட்டுப் பிரிக்கவேண்டும். அப்போதுதான் அந்த நோட்டை எல்லா வகுப்புகளுக்கும் பயன்படுத்த முடியும்.
டீச்சரும் அலுவலகம் சென்று அவருக்குரிய நோட்டை வாங்கிவந்து அதைக் கவனமாகப் பிரித்துக் கணக்கிட்டு அவர் வகுப்புக்குரிய அந்தப் பக்கத்தை எடுத்துவைத்தார். அடுத்ததாக மாணவர் பெயர்களை எழுதவேண்டும். அதுவும் மாணவிகள் பெயர்களை முதலில் சிகப்பு
“கவனாம தப்பில்லாம இந்தப் பக்கத்திலிருந்து எழுது, சரியா”
எனக்கூறி இரண்டு கலர் பேனாவையும் கொடுக்க அவனுக்கு சந்தோசம் தாங்கவில்லை. அவனும் கவனமாக அந்த பகுதிக்குண்டான பக்க எண்ணை சாமார்த்தியமாகப் பார்த்து, டீச்சரிடம்,
“சரிங்க டீச்சர் , 19ம் பக்கத்திலிருந்து நம்ம கிளாஸ் பசங்கள் பெயரை எல்லாம் எழுதிடறேன் ”,
“வெரி குட் , 19ம் பக்கத்துலருந்தே எழுது”,
என்று நோட்டை அவன் கையில் கொடுத்தார்.
அவனும் அன்று மாலை வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக நோட்டை எடுத்துப் பிரித்து 19ம் பக்கத்தில் ஆரம்பித்து கிடுகிடுவென முத்து முத்தாக எல்லோருடைய பெயர்களையும் எழுதிவிட்டு இரவுத் தூங்கப்போனான்.
அடுத்த நாள், டீச்சரிடம் சென்று,
“டீச்சர் நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன் ”,
என்று நோட்டைத் திருப்பிக் கொடுக்க, டீச்சரும் இரண்டு மூன்று முறை அவன் எழுதியதையே திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஏதாவது நாம் தப்பாக எழுதிட்டோமா , ஏன் டீச்சர் கவலையாக அதையே திருப்பி திருப்பிப் பார்க்கறாங்க ”,
என இவனுக்கு மனதில் கேள்வியெழ ஆரம்பித்தது. டீச்சருடைய முகமும் கோபமும் சங்கடமும் கலந்து மாறிக்கொண்டே இருந்தது. அவர் அவனைப் பார்த்து,
“ஏண்டா நான் இந்தப் பக்கத்துலயா எழுத சொன்னேன்? நான் ஒரு பகுதியை எடுத்துக் கொடுத்தா நீ பாட்டுக்கு இன்னொரு பகுதியிலே எழுதியிருக்கே ! ஆபிஸ் ரூம்ல வேற நோட்டு தரமாட்டங்கடா இப்ப என்ன பண்றது , நோட்டே வேஸ்டுதான் ”,
எனக் கவலையுடன் கேட்க இவனும்,
“இல்லை டீச்சர் நீங்க சொன்ன மாதிரியே 19ம் பக்கத்துலதான் எழுதியிருக்கேன் , பாருங்க ”,
என எடுத்துக் காட்டினான். அப்போதுதான் டீச்சரும் இவனும் முக்கியமான ஒரு விசயத்தைக் கவனித்தார்கள். நோட்டுடைய எல்லா பக்கங்களும் 19 என இருந்தது. அவர்கள் இருவரும் தங்கள் தவறை உணர ஆரம்பித்தார்கள். அந்த நோட்டின் எல்லா பக்கத்தின் மூலைகளிலும் ஆயிரத்துத் தொள்ளாயிரம், அதாவது 19 என அச்சிட்டு கடைசி இரண்டு இலக்கத்தை வருடம் குறிக்க வசதியாக காலியாக விட்டிருந்தார்கள். டீச்சர் உடனே அவனிடம்,
“சரி போ, நாந்தான் முட்டாளாட்டம் அதைக் கவனிக்கலை நீயாவது கண்டிருக்கலாமே, சொல்லிருக்கலாமே”,
No comments:
Post a Comment