கடைசி வாய் காஃபியை ஒருதுளிக் கூட விட்டுவைக்க அவருக்கு மனமில்லை. அப்படியே டம்பளரை செங்குத்தாக நிமிர்த்தி ஒரு உலுக்கு உலுக்கி தீர்த்தம் போல அந்தக் கடைசித் துளியை நாக்கில்விட்டு உச்ச்சுக் கொட்டினார். காலியான டம்பளரை கீழே வைத்து விட்டு அம்புஜத்திடம், "ஏண்டி நான் ஆத்துல சும்மாத்தானே ஒக்காந்திண்டுருக்கேன். நானும் சித்த அவாளோட கோயில் வரைக்கும் ஒரு நடை காலார போயிட்டு வரட்டுமா?" எனக் கேட்டதுதான் தாமதம், உடனே அம்புஜம் மாமி பதிலுக்கு.
"இதென்னா புதுசா இருக்கு. ஒமக்கு கிறுக்கு ஏதாவது புடிச்சிருக்கா. அதெல்லாம் ஒங்களுக்கு ஒத்து வராது. அவாளெல்லாம் யாரோ? தெரியாதவளோட எப்படிப் போவேள்? காலம் கெட்டுக் கிடக்குது. புதுசுபுதுசா தொத்து வேற பரவுதாம். கூட்டம் அது இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது. அந்த வேலையெல்லாம் ஒன்னும் வேணாம். வேடிக்கை பார்த்தேளில்லையோ அது போறும். கோயிலுக்கு போறராம். அதுவும் தனியா. எங்கேருந்து இந்த ஐடியாவெல்லாம் வருதோ. வைகுண்ட ஏகாதசி வரப்போகுதில்லையா அப்போ நானே கூட்டிண்டு போறேன். பக்கதாத்து மாமியும் வரேன்னா. அப்பப் போயிக்கலாம். சும்மா திண்ணையில ஒக்காந்து பராக்கு பாருங்க. இந்த பேப்பரைப் படியுங்க. டிஃபன் ரெடியானதும் சொல்றேன். ஸ்நானம் பண்ணிண்டு வந்து சாப்பிடலாம். பிறகு பேங்கு வரைக்கும் போவணும். கொஞ்சம் வேலை இருக்கு" என மாமி ஒரு தவுசண்டுவாலா அளவுக்குப் படபடத்துவிட்டு, கிட்டத்தட்ட 144 தடை உத்தரவையும் மீறிய ஒரு தடையைப் போட்டுவிட்டு, அவருடைய பதிலுக்குக் காத்திராமல், காலி டம்பளரை எடுத்துக் கொண்டு, அடுப்படியை நோக்கி நடையைக் கட்டினாள்.
அப்படி என்னதான் அவர் கேட்டுவிட்டார். பக்கத்தில் உள்ள கோயிலுக்குத்தானே போகிறேன் என்றார். அவர் குழந்தையா என்ன? மூன்று மாதத்துக்கு முன்பு வரை கோர்ட்டு, ஆபிஸ் என தனியாகத்தானே சுற்றிக் கொண்டிருந்தார். இப்போது மட்டும் ஏன் திடீரென இந்தக் கட்டுபாடு. வேலைக்கு மட்டும்தான் செல்வதில்லை. அதைத் தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லையே. ஒரு மனுசன் ரிட்டயர்ட்டு ஆகிவிட்டால் இதுதான் நிலைமையா. எல்லோருக்கும் இப்படித்தானா இல்லை இவருக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா என அவர் மனதிற்குள்ளே ஒரு பெரிய வாக்குவாதமே நடந்து கொண்டிருந்தது.
எது எப்படியென்றாலும், மாமி சொன்னால் சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜே சொன்னது மாதிரி. அங்கு மறு அப்பீலே கிடையாது. கருணை மனுக்கள் சமயத்தில் ஏற்கப்படும். ஆனால் பதில் சாதகமாக வராது என அவருக்கும் நன்றாகவேத் தெரியும். ஆனால், ஒன்று, அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். மாமி ஒன்றும் இவருக்கு சளைத்தவளில்லை. பதினெட்டு வயதில் கல்யாணம் செய்துகொண்ட பிறகு நான் படித்தே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் அடம் பிடித்து அப்போதே பி.ஏ வரை தபால் முறையில் படித்து முடித்தவள். அவருக்கு இணையாகத் தானும் வேலைக்குப் போகவேண்டுமென காரியதரிசியாக தாசில்தார் ஆபிசில் வேலைக்கும் சேர்ந்தாள்.
வாசனும் வாசவியும் குழந்தைகளாக இருக்கும் போது ஏதோ ரெவின்யூ கேம்ப் என்று ஒரு நாள் மாமி வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்தாள். அவள் வருவதற்குள் குழந்தைகளை சமாளிக்க இவர் பட்ட கஷ்டத்தின் பிரதிபலிப்பு அடுத்த நாளே மாமி வேலைக்கு ராஜினாமா போட்டுவிட்டாள். அதற்கு பிறகு மாமியின் ராஜாங்கம் செல்வாக்கு எல்லாமே நாலு சுவற்றுக்குள்தான். ஆனால் அவள் வார்த்தைக்கு மறு பேச்சே இருக்காது. அவருக்கு கம்பெனி சட்டம் மட்டும்தான் தெரியும். ஆனால் மாமிக்கோ அதைத் தவிர மற்ற எல்லாமே அத்துப்படி. மளிகை, காய்கறி, பால், வேலைக்காரி, வீட்டு வேலை செய்பவர்கள், பேங்க் அக்கவுண்டு, மாதத் தவணைகள், பிள்ளைகள் படிப்பு, ஊரிலுள்ள நில பராமரிப்பு என எல்லாமே மாமியின் மேனேஜ்மெண்டுதான். ராமஜெயத்திற்குண்டான ஒரே ஒரு வெளிவேலை என்றால் தேர்தலில் ஓட்டு போடுவார் அவ்வளவுதான். அதுகூட சமயத்தில் மாமி சொல்லிவிடுவாள் யாருக்கு ஓட்டு போடவேண்டுமென.
"ஐயா சாமி, நல்லா இருக்கீங்களாய்யா!" என்ற பரிட்சையமான ஒரு குரல் அவரை யோசனையில் இருந்து மீட்டது. ஐயா எனக் கும்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் மாடசாமி. அவன்தான் ஊரில் உள்ள இவர்கள் நிலத்தை பராமரித்து வந்தான். பூர்விக சொத்தான பத்து ஏக்கரில் எட்டு ஏக்கரை வருசக் குத்தகைக்கு விட்டுவிட்டு இரண்டு ஏக்கரை மட்டும் மாமியே மாடனை வைத்து பராமரித்து வந்தாள். "பொங்கல் வரும் பின்னே மாடன் வருவான் முன்னே", என அவருக்கு நன்றாகத் தெரியும். "வாடா வா. என்ன காலம்பரயே வந்துருக்கே. பிரயாணம் எல்லாம் சுகமா. ஒக்காரு அப்படி. அம்புஜம், இங்கே வாடி, யாரு வந்துருக்கா பாரு!" என அடுப்படியை நோக்கி ஒரு சப்தம் கொடுத்தார்.
[எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருளவும், சுட்டிக்காட்டவும்]


