ஸ்ருதி 2
மார்கழி மாதக் குளிருக்கு தூபம் போடுவது போல நேற்று பெய்த மழையின் ஈரம் தன் விசுவாசத்தைக் குளிர்காற்றோடு கலந்து காண்பித்ததை வராண்டாவில் அமர்ந்து அம்புஜத்தின் காஃபியை சுவைக்க இருந்த ராமஜெயத்தால் நன்கு உணரமுடிந்தது.
மார்கழி பஜனைக் கோஷ்டி ஒன்று அப்போதுதான் வீதியில் பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டே வீட்டைக் கடந்தார்கள். இவருக்கு என்னவோ அது ஒரு புதிய தினுசாக இருந்தது. இத்தனை வருடங்கள் இதைப் பார்த்திருந்தாலும் காதிலே கேட்டிருந்தாலும் மனம் அதிலெல்லாம் லயிக்காமல் எப்போதும் ஏதாவதொரு கேஸைப் பற்றித்தான் அலசிக்கொண்டிருக்கும். ஆனால் இன்று, ஏனோ அவர் ஓய்வு பெற்றவராகி நிற்பதாலோ, மனது வேறு எங்கும் அலையாததாலோ, அந்த கோஷ்டி கானத்தை அவர் மனம் ஆற அமர நின்று லயித்து ரசித்தது. "ஆஹா, மனுசாளோட மனசுக் கூட ஆடி ஓடி அடங்கினாதான் லோகத்தோட அருமை புரியறது" என வாயில் முணுமுணுத்துக்கொண்டே ஒரு குழந்தையைப் போல அந்தக் கூட்டம் அவர் வீட்டைக் கடந்து போகும் வரை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த கோஷ்டியில் சென்ற சிலர் பதிலுக்கு இவரைப் பார்த்து ஒரு சினேகித புன்முறுவலை உதிர்த்துவிட்டு கடந்து சென்றனர்.
பள்ளியில் படிக்கும்போது அக்ரஹாரத்தில் அக்கம்பக்கதாத்து பஜனை கோஷ்டி மாமாக்களுடன் பாடிக்கொண்டே கோயில் வரைக்கும் போவார். அதுவும் லட்சுமி மாமி வீட்டு பிரசாத முறை நாள் என்றால் தவறாமல் போய்விடுவார். மாமியின் சர்க்கரைப் பொங்கலை நினைத்தால் எப்பவுமே வாயில் எச்சில் ஊறும். அவ்வளவு நன்றாக இருக்கும். அதற்காகவே வருடம் முழுவதும் மார்கழி பஜனை இருக்காதா என அவர் மனம் ஏங்கியதும் உண்டு. பிறகு பள்ளிப்படிப்பு முடிந்து காலேஜ் போக ஆரம்பித்தவுடன் ஏனோ ஒரு சங்கோஜம் வந்துவிட்டது. எல்லாமுமே மாறிவிட்டது. ஸ்டெப் கிராப்பு, பெல் பாட்டம், எக்ஸ்ட்ரா கேன்வாஸ் காலர், பட்டை பெல்ட்டு, தெரு முனையில் வெறுமெனே நின்று நோட்டம் விடுவது, இரவுக் காட்சி, தாமதமாக எழுவது என ஆளையே மாற்றிவிட்டது. அன்று அப்படி விலகிவந்ததுதான், இப்போது மீண்டும் அதிலே லயிக்கத் துடிக்குது.
"சர்க்கிள் ஆஃப் லைஃப் என சும்மாவா சொன்னா", என மனதில் நினைத்தவரை ஒரு இதமான காற்று முகத்தில் அடித்து நிகழ்காலத்துக்கு கொண்டுவர அம்புஜத்தின் காஃபியை சுவைக்கத் தயாரானார்.
"ஏண்டி அம்புஜம் உன் புள்ள வாசங்கிட்ட சொல்லி உன் காப்பிக்கு உடனே ஒரு பேடண்டு போடணுமடி! கையில அப்படி என்னதான் சிதம்பர ரகசிய ரெசிப்பிய ஒளிச்சு வச்சுருக்கறியோ, உன் காப்பியிலேயே என்னைக் கட்டிப் போடுற போ! உன் கைக்கு மாத்தரம் நம்ம சுந்தரத்துகிட்ட சொல்லி இன்சூரன்சு எடுக்கணுமடி!" எனக் காலைக் காஃபிக்கு ஒரு பாசுரத்தைப் பாடிவிட்டு அன்றைய நாளிதழில் உள்ள ஹெட்லைன்சை வேகமாக ஸ்கேன் செய்ய ஆரம்பித்தார்.
"பாத்து! நேக்கு ஜலதோஷம் புடிச்சிக்க போவுது, நீங்க தெனமும் வைக்கிற ஐஸை கொஞ்சம் நிறுத்துங்கோ" என அம்புஜம் ஒரு எதிர்பாட்டைப் படித்தபடியே அவளுடைய காஃபியையும் எடுத்துக் கொண்டுவந்து அவரருகே நாற்காலியில் அமர்ந்தாள்.
"ஐஸ் வச்சா நல்லதுதானடி, இளமை சிலுப்பி நிக்குமாம், இங்கிலீஷ்காரன் சொல்லிருக்கான்", என அவர் ரொமாண்டிக்காக சொல்ல பதிலுக்கு அவளும், "பேரன் எடுத்தவா மாதிரியா பேசறேள்! வெளியதான் பெரிய மனுசா! உள்ளுக்குள்ள இன்னும் ஐயாவுக்கு மன்மதனு நெனப்பு" என அவரை அடக்கினாள்.
ஆஸ்திக்கு ஒரு பிள்ளை ஆசைக்கு ஒரு பிள்ளை என சொல்வார்கள். அது ராமஜெயத்துக்கும் அம்புஜத்துக்கும் நன்கு பொருந்தும். ஒரு மகன் ஒரு மகள். மூத்தவன் வாசன் லண்டனில் போய் செட்டிலாகிவிட்டிருந்தான். மகளும் அவனையே தொடர்ந்து ஆனால் ஆஸ்திரேலியாவில் போய் செட்டிலாகிவிட்டாள். இருவருக்கும் தன் பணிக்காலம் முடியும் முன்பே நல்லபடியாக செட்டில் செய்ததில் அவருக்கு எப்பொழுதும் ஒரு திருப்தி, பெருமையும் கூட. அவருடன் ப்ராக்டிஸ் செய்யும் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு இன்னமும் வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். "உனக்கென்னடா சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணிட்டு லட்டு மாதிரி புள்ளைகளைப் பெத்து போட்டுட்ட, என்னைய மாதிரி ஒனக்கென்ன லேட் மேரேஜா?"என தன் பால்ய நண்பன் வரதராஜன் இவரை அடிக்கடி கிண்டல் செய்வதுமுண்டு. அவருடைய ஒரே மகளுக்கு இன்னும் சரியான வரன் கிடைக்காமல் இருப்பது கண்டு ராமஜெயத்துக்கு இன்னமும் வருத்தம்தான்.
ஆனால், பிள்ளைகள் வெளிநாடு சென்று செட்டிலானாலும் இவருக்கு தன்னுடைய பிராக்டிஸ், கிளையண்டுதான் முக்கியம் என பிசியாக இருந்தார். வாசனும் எத்தனையோ முறை அழைத்துப் பார்த்தான் ஆனால் அவர், "இப்ப முடியாதுபா, நான் பிசி" என்று மறுத்து வந்தார். ஆனால் இனி அப்படி மறுக்க முடியாது. அம்புஜத்திற்கும் லண்டன் போய் பேரனுடன் இருந்து வர ஆசைதான் ஆனால் இவரை எப்படிக் கிளப்புவது என அவளும் தன் ஆசையை அடக்கியே வைத்திருந்தாள்.
ராமஜெயம், அவரின் பெயருக்கேற்பவே அவருக்கு எல்லாமுமே ஜெயம்தான் அவர் ஒரு கேஸில் ஆஜராகிறார் என்றால் அந்த ஜட்ஜுக்கும் கோர்ட்டுக்கும் வேலை குறைந்துவிடும். இவரே எல்லா பாயிண்டையும் சரியாக எடுத்து வைத்து அனைவரின் வேலையையும் மிக எளிதாக்கி விடுவார். பொதுவாக அவர் டீல் செய்வதெல்லாம் கம்பெனி சம்பந்தபட்ட சிவில் கேஸ்கள்தான். தொழிலாளர் பிரச்சனைகள், சம்பளம் போனஸ் தகராறு, கம்பெனி லா சூட் போன்ற விவகாரங்கள்தான். அதனால் ராமஜெயம் என்றாலே தொழிலதிபர்கள் மத்தியில் எப்போதும் ஒரு மதிப்பும் மரியாதையும் அதிகம் இருக்கும்.
அப்படி பிசியாக இருந்த மனிதர் இப்போது ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதல் இரண்டு மாதங்கள் வெறிப்பிடித்தாற் போல அம்புஜத்தை அழைத்துக் கொண்டு தெற்கிலுள்ள எல்லா கோவில் குளத்துக்கும் போய்வந்தாகி விட்டது. வாசனும் லண்டன் வந்து ஒரு நாலு மாசம் இருக்க சொல்கிறான். ஆனால் குளிர்காலம் முடிந்து வாருங்கள் என அந்த ஏற்பாட்டைத் தள்ளிப் போட்டுவிட்டான். மகள் எங்கேயோ சம்மர் வெக்கேசன் போகிறாளாம். அவள் இன்னும் புதுக்கல்யாண மோகத்தில்தான் இருந்தாள். தானே பிறகு நேரம் கிடைக்கும்போது வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டாள். அதனால் இப்போதைக்கு எங்கேயும் போக முடியாது. இங்கேயே உட்கார்ந்து திண்ணையைத் தேய்க்க வேண்டியதுதான்.
- இசை தொடரும் ...
[எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருளவும், சுட்டிக்காட்டவும்]

2 comments:
ஆஹா, என்ன ஓய், நம்ம பிராமணா பாஷைல வெளுத்து வாங்கறேள்!!அம்புஜம் மாமி, ராமானுஜ மாமா ஏதோ பக்கத்தாத்துல தெனம் பாக்கறவா மாதிரி இருக்கு.
பேஷ்,பேஷ்.ஜமாயும்👍
Thank you 😂
Post a Comment