Monday, December 30, 2024

ஒழுங்கு

ரைடு - 4

    ஃப்ளாரென்ஸ் டீச்சர் பெயருக்கேற்பவே மென்மையான குணம் கொண்டவர். அவருடைய கருணைப் பார்வையும் அன்பான புன்முறுவலும் எவரையும் வசீகரிக்கும். அடிக்கமாட்டார், கடிந்து பேச மாட்டார், அன்பாலேயே கட்டிப்போடும் ஆற்றல் கொண்டவர். அவர் அறிவியல் பாடம் எடுக்கின்றார் என்றாலே பாடத்தில் விருப்பமில்லாதவருக்குக் கூட ஏதாவது கற்றுக்கொள்ளலாமென ஒரு ஆவல் தானாக வரும். அந்த டீச்சருக்கென ஒரு ரசிகப்பட்டாளமே உண்டு.

    அவனுக்கும் அவர்தான் ஆசிரியர். அதுவும் டீச்சருடைய அப்பாவும் அவனுடைய தாத்தாவும் ஒரே பள்ளியில் ஆசிரியர்களாக வேலைபார்த்தவர்கள். அவரும் அவனுடைய அம்மாவும் சிறுபிராயத்தில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என இவனுக்கும் டீச்சர் குடும்பத்துக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. அதனால் சொல்லவே தேவையில்லை, அவனுக்கு எப்போதும் சிறப்பு கவனிப்பு, கண்காணிப்பு உண்டு. இவன் சரியாகப் படிக்காமலோ அல்லது மார்க்குக் குறைந்தாலோ டீச்சர் அவனை அழைத்து கருணைப் பார்வையிலேயே அழவைத்து விடுவார். இவனும் வெட்கத்தில் நகத்தைக் கடித்துக்கொண்டே நீட்டி நெளிந்து ஏதாவது சொல்லிச் சமாளிப்பான்.

    அவனுக்கு ஒரு கெட்டப் பழக்கம் உண்டு. பாட சம்பந்த வேலைகளில் ஆழ்ந்து யோசித்தாலும் சரி இல்லை பரீட்சை டென்சனானாலுன் சரி இல்லை சும்மாவே நேரத்தைக் கழிப்பதானாலும் சரி உடனே தன்னுடைய நகத்தை நறுக் நறுக் எனக் கடிக்க ஆரம்பிப்பான். அதுவும் அந்த நகத்தை ஒட்டியுள்ள சதையை வேறு கடித்துத் தின்பான். அதிலென்ன அவன் ருசி கண்டானோ தெரியவில்லை. அப்போது, விரலை வளைத்து முகத்தை வளைத்து அவன் வாய் மற்றும் விரலுக்கு நடுவில் ஒரு போரே நடக்கும். டீச்சரும், “டேய், நகம் கடிப்பது சதையை உட்கொள்வது எல்லாம் சுகாதாரமான செயல் இல்லை”, எனப் பலமுறை சொல்லி பார்த்தார்கள். அவனும் அதைக் கேட்பதாக இல்லை. “உனக்கு விரலில் பெரியக் கட்டுப்போடுவேன்”, எனப் பொய்யாக மிரட்டியும் பார்த்தார்கள். வீட்டில் சொல்வதாகவும் சொன்னார்கள். ஆனால் அவன் அதற்கெல்லாம் அசரவில்லை. அவன் தனது “கடி” வேலையைத் தவறானதாக இருந்தாலும் மிகச் சரியாகச் செய்யத் தவறியதேயில்லை.

    டீச்சருக்கும் இவனை எப்படி ஒழுங்கு செய்வது என்பது ஒரு சவாலாக இருந்தது. இதற்கு எப்படியாவது ஒரு முடிவு கட்டவேண்டுமெனத் தீவிரமாக யோசித்து கடைசியில் அவருக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது.

    ஒரு நாள் சுவாரசியமாக வகுப்பில் நகம் கடித்துக்கொண்டிருந்த அவனை அவர் தன்னிடம் அழைத்தார். அவனும் அவர் முன்பு கையைக் கடித்துக்கொண்டே வந்து நின்றான். அவரும் அவனிடம், 

    வாங்க சார் வாங்க, நல்லா கடியுங்க, அப்படியே கடிச்சிட்டே இருங்க”, 

    என்றவாறே திடீரென தன் கைப்பையில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அவன் எதிரில் வைத்து, 

    இப்ப கடி, நல்லா கடி, உன் முகம் போகிற அஷ்டக்கோணலை நீயேப் பாருரசிச்சுப் பாரு. நீ விரலைக் கடிக்கும் போது இப்படிதான் இருக்கும் உன்னைப் பார்க்கிறதுக்கு- திருஷ்டி பொம்மை மாதிரி”, 

    என அவர் சொன்னபிறகுதான் சந்திரமுகியாக இருந்த அவன் முகத்தை அவனே கொஞ்சம் கூர்ந்துப் பார்த்தான். அத்தனை கோணல் மாணலாக அவன் முகத்தை அவன் இதுவரை கண்டதேயில்லை. அவனாலேயே அதைக் காண சகிக்கமுடியவில்லை. விரலைக் கடிக்கும் போது அவன் தாடை மேலும் கீழும் போகப் பற்கள் அசிங்கமாகத் தெரிய, அதற்கேற்ப அவன் மூக்கு விகாரமான ஒரு வடிவுக்கு மாறுவதைப் பார்க்கும் போது அவனுக்கே அவனைப் பார்க்க மிக அசிங்கமாகவும் பயமாகவும் இருந்தது.

    “எவ்வளவு அழகான உன்னுடைய முகத்தை இப்படியா பண்றது, இனி நகத்தைக் கடிக்கலாமா இல்லை வேணாமான்னு நீயே முடிவு பண்ணிக்க”, 

    என டீச்சர் ஒரு தீர்மானமாகச் சொல்லிவிட்டு, 

    “நீ இப்ப போகலாம்” 

    என அவனை அனுப்பி வைத்தார். அவனுக்கு ஏதோ பிரமையில் இருந்து மீண்டு வந்தது போல இருந்தது. அன்று முதல், டீச்சரால் எப்போதும் அவனுடைய அழகான ஒழுங்கு முகத்தை மட்டுமே காண முடிந்தது.

    ரைடு தொடரும் …

படைப்பாளி

ரைடு - 5

    செந்தமிழ் மாறன், அது ஒரு அழகான தமிழ்ப் பெயர். அது அவருடைய புனை பெயர்தான் ஆனால் அவருடைய மாணவர்கள் அவரை மீசைக்கார வாத்தியார் என அன்புடன் அழைப்பார்கள். அவருடைய நிஜப் பெயர் என்னவென்று அவனுக்கும் தெரியாது வேறு யாருக்கும் தெரியாது. நான்காம் வகுப்பாசிரியராக அவர் அவனுக்கு அறிமுகமானார். பிரம்பைக் கையில் எடுக்காமலேயே தனது முறுக்கிய மீசையால் மாணவர்களை அடக்கியாளுவதில் அவருக்கு நிகர் அவரே. 

    அவன் வகுப்பில் நன்கு படிக்கக்கூடியவனாகவும் பணிவானவனாகவும் இருந்தபடியால் அவரின் கனிவான கவனிப்புக்குரியவனாக இருந்தான். அவர் கவிதை மற்றும் பாட்டு எழுதுவதில் ஆர்வமும் ஆற்றலும் உடையவராக இருந்தார். அவர் தன் பெயரை செந்தமிழ் மாறன் என மாற்றிக் கொண்டதற்கு அவர் கலை மேல் வைத்திருந்த ஆர்வக்கோளாறுதான் காரணம். வகுப்பு நேரங்களில் தன் படைப்புகளை மாணவர்களுடன் பெருமையாகப் பகிர்ந்தும் கொள்வார். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அதன் அருமை பெருமை புரிகிறதோ இல்லையோ அவர் சொல்வதை அவர் மீசைக்கு பயந்தாலாவது கேட்டு ரசிப்பார்கள். 

    அந்த வருடமும் அவர்களுடைய பள்ளி சார்ந்திருந்த ஒன்றியப் பள்ளிகளிடையே நடக்கும் கலை நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. அவருக்கும் இந்த வருடம் எப்படியாவது தன் படைப்புகளை தன் மாணவர்கள் மூலமாக வெளிக்கொணருவது என்று எண்ணியபோதுதான் அவன் அவருடைய நினைவுக்கு வந்தான்.

    உடனே அவனை அழைத்து அவனிடம் அவர் எழுதிய பாட்டு ஒன்றைக் கொடுத்து பயிற்சி செய்யச் சொல்லி அவன் பெயரையும் பாட்டுப் போட்டிக்குப் பதிவு செய்து வைத்தார். அவன் அதுவரை எந்த மேடையும் ஏறியதும் இல்லை, பாடியதும் இல்லை. இந்த லட்சணத்தில் அவன் குரல் வேறு சற்று தடித்தும் பலமானதுவாகவும் இருக்கும். அதனால் அவனை அவன் குடும்பத்தில் பெருங்குரல்காரன் எனக் கிண்டலும் செய்வார்கள். அவனை நம்பி அந்த ஆசிரியர் போட்டிக்குத் தயாராகச் சொன்னதால் அவனுக்குப் பயம் இன்னும் அதிகமானது. இருந்தாலும் அவர் மீசைக்குப் பயந்து தீவிர பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டான். மற்ற மாணவர்களுக்கு வகுப்பு நேரம் என்றாலும் இவனை மட்டும் ஆசிரியர் தனியாக ஒரு அறையில் பாட்டை படித்துப் பாடும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்வார். அவனும், அனுதினமும்…

    ‘அப்பாவைப் போல் சிப்பாயாகி 
    காவல் புரிகுவேன்
    நம் அன்னை பாரதத்தையும் 
    காத்து அருளுவேன்’

    என்று தன் உச்ச குரலில் பயிற்சித்து மனப்பாடம் செய்தான். போட்டி நாளும் வந்துவிட்டது. ஆசிரியருக்கு அவன் நன்றாகப் பாடுகிறானோ இல்லையோ அவர் எழுதிய படைப்பைச் சரியாக அவன் வழியாகச் சொல்லவைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. அதனால் அவனைவிட அவருக்குத்தான் அழுத்தம் அதிகரித்தது. 

    போட்டி அருகிலுள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிறைய மாணவர்கள் பங்கு பெற்றிருந்தனர். அவனும் அவனுடைய முறைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆசிரியரும் அவனும் கிட்டத்தட்டப் பிரசவத்துக்குத் தயாராக இருந்த பெண்ணைப் போலத் தவித்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக இவர்கள் முறையும் வரவே, அவன் நடுவர்கள் முன்பு தான் பயிற்சி செய்ததை முடிந்த வரையில் சரியாகப் பாடிக் காட்டினான். படித்துக் காட்டினான் என்றே சொல்லலாம். சினிமா பாடல்கள், பாரதியார், கண்ணதாசன் போன்ற பாடல்கள் மத்தியில் இவன் பாடிய புதிய பாடலைக் கண்டு நடுவர்கள் ஆர்வத்துடன் யார் எழுதியது எனக்கேட்க அவனும் மீசைக்கார வாத்தியாரை நோக்கி கையைக் காட்டியதைக் கண்ட ஆசிரியரின் மீசையிலும் ஒரு வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது. 

    அவன் பாடிய, இல்லை படித்த பாட்டுக்குப் பரிசு எதிர்பார்ப்பது அளவுக்கு மீறி ஆசைப்படுவது என்பது அவருக்கும் தெரியும். ஆனால் நடுவர்கள் அந்தப்பாடலைப் பற்றி விசாரித்தது அவருக்கு ஒரு பெரிய பரிசு வாங்கியது போல இருந்தது. அவனைப் பாராட்டி மகிழ்ந்து தள்ளினார். போட்டிகள் முடிவும் அறிவிக்கப்பட, எதிர்பாராத விதமாக அவன் பெயரை ஆறுதல் பரிசாக அறிவிக்கப்பட்டு ஒரு சோப்பு டப்பாவை வழங்கியபோது அவனுக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. பரிசாகக் கிடைத்த அந்த புதிய பிளாஸ்டிக் சோப்பு டப்பாவின் நறுமணத்தில் அவன் புளங்காகிதம் அடைந்தான். 

    அவருக்கும்தான்.

    சில வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் அவர் அவனுடைய வீட்டுக்கு வேகவேகமாக சைக்கிளில் வந்தார். அவர் கையில் ஒரு புத்தகம் வேறு இருந்தது. 

    டேய், இங்கப் பாருடா, நீ பாடிய பாட்டு, நான் எழுதிய பாட்டு பத்திரிக்கையில் பிரசுரமாயிருக்கு",

    என அவனிடம் அந்தப் பக்கத்தைக் காட்டி பாராட்டி மகிழ்ந்தார். அதைப் பார்க்கும் போது அவனுக்கு மீண்டும் அந்த சோப்பு டப்பா மணம் நினைவுக்கு வந்தது. அவரிடம் இருந்த அந்த புத்தகத்தைக் கையில் வாங்கி ஒருமுறை முகர்ந்து கொண்டான். 

    ரைடு தொடரும் ….

அப்புராணி

    ரைடு - 6

    ஶ்ரீதர் சாரைப் பார்க்க அவனுடைய நண்பர்களுடன் காலையிலேயே பாண்டிச்சேரியை நோக்கிக் கிளம்பிவிட்டான். பாண்டிக்கு அவன் போவது இதுதான் முதல்முறை. இளைஞர்கள் பாண்டி போவது என்றாலே அவர்கள் மனதில் வேறு மாதிரியான ஒரு குதூகலம் இருக்கும். மாறாக அன்றைய தினம் அவன் மனம் முழுவதும் ஶ்ரீதர் சாரைப் பற்றியே நிறைந்திருந்தது.

     என்ன ஒரு அருமையான மனிதர் அவர். சாது, அப்பிராணி என்ற சொற்களுக்கெல்லாம் ஒரே அர்த்தம் என்னவென்றால் அது அவர்தான். ஐஐடியில் படித்துவிட்டு அவன் படித்த கல்லூரியில் லெக்சரராக சேர்ந்திருந்தார். சிறுத்த உருவம். திருமணமாகதவர். யாரிடமும் அவ்வளவாகப் பேச மாட்டார். தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பார். நேரில் யாரையேனும் பார்த்தால் முகத்தை உடனே வேறுபக்கம் திருப்பிக் கொள்வார். பொதுவாக மாணவர்கள்தான் வாத்தியாரைக் கண்டு ஒதுங்கிப் போவார்கள். ஆனால் அவர் அப்படியே அதற்கு எதிர்மாறாக இருப்பார். இப்படி இருப்பவர் எப்படி பாடம் எடுப்பார் என அனைவருக்கும் சந்தேகம்தான் எழும். ஆனால் அவர் டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ், மற்றும் அதன் சம்பந்தப்பட்ட அல்காரிதம் போன்ற கடினமான பாடங்களைக் கூட மாணவர்க்ள் மிக எளிதாகப் புரிந்துகொள்ளும் விதமாக வகுப்பில் சொல்லித் தரும்போதுதான் அவருடைய முழுத்திறனும் மற்றவருக்குப் புரியும். டெக்னிக்கல் பாடங்களில் அவர் படு கில்லாடி எனவே சொல்லலாம். மனிதர் அவ்வளவு பிரில்லியண்ட். அவனுடன் படித்த மாணவிகள் சிலர் அவரை விளையாட்டுக்காக வம்பிழுக்க வேண்டுமெனவே ஏதேனும் கேள்விகளைக் கேட்பார்கள். அவரும் அதற்குண்டான பதிலை மட்டும் விருட்டென ஒரு வெட்கத்துடன் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்வார்.

    பாடம் எடுக்கும் வரைதான் அந்த குணம் எல்லாம் இருக்கும். வகுப்பை விட்டு வெளியே வந்தவுடன் மனிதர் வேறு ஒரு தனி உலகத்தில் வசிப்பார். பார்ப்பவர்களுக்கு இவருக்கு வேறு எதுவும் பிரச்சினை உள்ளதா எனக் கூடத் தோன்றும். தலைக்கு ஏதோ ஒரு வகையான எண்ணெய் வேறு பூசியிருப்பார். அது லேசாக வழிந்து காதோரம் வருவதைக் கூட கண்டு கொள்ளாமல் இருப்பார். வகுப்பு, லைப்ரரி இல்லையெனில் மெஸ்ஸில் சாப்பிடும் போது மட்டுமே அவரைக் காணலாம். எப்போதும் தனியாகவே போவார் வருவார். ஆனால் ஏதோ சித்த வைத்தியம் அல்லது நாட்டு மருத்துவம் செய்துகொள்கிறார் என்று மட்டும் நன்கு தெரியும். அவருக்கு உடலில் என்ன குறைபாடு என யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் உடலுக்கு ஏதோ மருந்து தேவை என்பது மட்டும் அவரைக் கண்டாலே சொல்லிவிடலாம்.

    அவனுக்கு மட்டும் அவர் சிறிது நெருக்கமாகி, கொஞ்சம் பழக்கமாயிருந்தார். ஆமாம், அவன் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர். ஆனார். அவன் மூன்றாமாண்டு படிக்கும்போது கல்லூரிக்கு வெளியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தான். அவரும் அவன் பக்கத்து வீட்டில்தான் தங்கியிருந்தார். பார்க்கும்போது ஹலோ சொன்னால் கூட ஒரு புன்முறுவல் மட்டுமே அவரிடமிருந்து பதிலாக வரும். மற்றபடி அதிகப் பேச்சுவார்த்தை எதுவும் இருக்காது. வார இறுதி நாட்களிலோ அல்லது மாலை நேரங்களில் அரிதாக சில வார்த்தைப் பரிமாற்றங்கள் இருக்கும். அவரின் நடவடிக்கைகளைப் பார்க்கக் கொஞ்சம் வினோதமாகவும் இருக்கும்.

    அவர்கள் வசித்து வந்த வீட்டுப் பகுதியில் சிற்றெறும்பு தொல்லை மிகவும் அதிகம். அதனால் அவன் எறும்புக்கொல்லி மருந்தை வாங்கி அவனுடைய அறை முழுக்க தெளித்து வைத்திருந்தான். அவனும் அவரிடம், 

    “சார் நீங்களும், இந்த பொடியை தெளிச்சு வைங்க

    எனச் சொல்ல அவரும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்ற மனிதர் ஒரு சின்ன கிண்ணத்தில் சர்க்கரையைக் கொண்டு வந்து வாசல் படி மற்றும் சுவர் ஓரங்களில் கொட்ட ஆரம்பித்தார். என்ன செய்கிறார் என்று ஆச்சரியத்துடன் பார்த்த அவனிடம்,

    பாவம்பா அதை ஏன் கொல்லணும், இந்த சர்க்கரையை போட்டா அதுக்கு தேவையனது சாப்பிட்டுட்டு அதுபாட்டுல போகப் போகுது நம்மகிட்ட வராது” 

    என எறும்பை எப்படி டெக்னிக்கலாக எப்படி டைவர்ட் செய்வது என அவர் விளக்கியதும் அவரது வேறுபட்ட பார்வையும் அவனை வியப்படையச் செய்தது.

    இப்படி அவரின் நினைவுகளிலேயே மூழ்கி பாண்டி வரை சென்றடைந்தான். அவர் வீட்டின் முன் நல்ல கூட்டம் கூடி இருந்தது. அவரைப் பார்க்கத்தான் வந்திருப்பர் என்பததை அவனும் அறிவான். அவருடன் படித்தவர்கள் எல்லாம் கூடியிருந்தார்கள். கூடத்திலிருந்த சில புகைப்படங்களில் அவர் நிஜமாகவே சிரித்துக் கொண்டிருந்தார். கூடத்து நடுவில் அவரை அவன் கண்டான். ஆனால் கண்களை மூடி நிரந்த ஓய்விலிருந்தார். ஆண்டவன் அவர் படும் அவஸ்தைகளைப் பொறுக்காமல் சீக்கிரம் அழைத்துக் கொண்டான் போல என அவன் மனதில் நினைத்துக்கொண்டே அவரை வணங்கிவிட்டு திரும்பினான். அங்கே ஒரு பெரிய எறும்பு கூட்டம் அவர் மேல் கிடத்தியுள்ள மாலைகளை நோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்தன. 

    “அப்புராணி"

    என மனதில் சொல்லிக்கொண்டே அவனும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

    ரைடு தொடரும் …

19ஆம் பக்கம்

ரைடு - 7

    ரஸ்வதி டீச்சர் ஆசிரியராக இருக்கும் வகுப்பில் ஒரு ஆண்டாவது படித்துவிட வேண்டும் என்பது கண்டிப்பாக அந்தப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரின் கனவாக இருக்கும். அவன் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்குக் காரணம் அந்த டீச்சர் சொல்லிக் கொடுக்கும் விதம்தான். அவர் அனைத்து மாணவர்களையும் தன் சொந்த குழந்தைகள் போலப் பாவித்து அன்பாக பார்த்துக் கொள்வார். யாராவது சரியாகப் படிக்கவில்லை என்றாலும், 

    “படிக்க முடியலையா, என்னப்பா ஆச்சு, சரி விடு பிறகு கத்துக்கலாம்”, 

    என்பார். அடிக்க மாட்டார் கடும் சொற்களை உதிர்க்க மாட்டார். அவ்வளவு அன்பான இரக்க குணம் கொண்டவர் அவர்.

        ஏழாம் வகுப்புப் படிக்கும்போது அவனுக்கும் அவர் வகுப்பில் படிக்கும் கொடுப்பினை கிடைத்தது. அவன் கையெழுத்து வேறு நன்றாக முத்துமுத்தாக பளிச்சென அச்சடித்தது போலவே இருக்கும். டீச்சருக்கும் அவனை ரொம்பவே பிடித்துப்போய் வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் தினமும் தேதி மற்றும் மாணவர் வருகை விவரங்களை எழுதும் பணியை அவனுக்கு வழங்கினார். கொடுத்த பணிகளை செவ்வெனசெய்து அவனும் விரைவிலேயே ஆசிரியரின் செல்லப் பிள்ளையாகவும் ஆகிவிட்டான்.

        அந்த ஆண்டின் காலாண்டு தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் இடும் பணியும் முடிந்திருந்தது. ஆசிரியர் தன் வகுப்பிலுள்ள மாணவர்களின் மதிப்பெண்களைப் பட்டியலாக ஒரு ரெஜிஸ்டரில் எழுதிப் பதிவிட வேண்டும். பள்ளியில் உள்ள எல்லா ஆசிரியர்களுக்கும் நிர்வாகம் அதற்கென தனியாக ஒரு ரெஜிஸ்டரை ஒதுக்கித் தருவார்கள். ஆசிரியர்களும் தமது வகுப்பிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு அந்த நோட்டைப் பல செக்சன்களாகப் பிரித்து வகுப்புவாரியாக மாணவர்கள் பெயரைப் பதிவிடுவர். அந்த செக்சன்களைப் பிரிக்கும் போது கவனமாகக் கணக்கிட்டுப் பிரிக்கவேண்டும். அப்போதுதான் அந்த நோட்டை எல்லா வகுப்புகளுக்கும் பயன்படுத்த முடியும்.

        டீச்சரும் அலுவலகம் சென்று அவருக்குரிய நோட்டை வாங்கிவந்து அதைக் கவனமாகப் பிரித்துக் கணக்கிட்டு அவர் வகுப்புக்குரிய அந்தப் பக்கத்தை எடுத்துவைத்தார். அடுத்ததாக மாணவர் பெயர்களை எழுதவேண்டும். அதுவும் மாணவிகள் பெயர்களை முதலில் சிகப்பு இங்க்கிலும் மாணவர்கள் பெயர்களை நீல நிற மையிலும் எழுத வேண்டும். அவனுக்கு நீண்ட நாட்களாக அத்தகைய உதவி செய்யவேண்டும் என ஆவல். அன்று அந்த ஆசையும் நிறைவேறியது. ஆமாம், டீச்சர் அவனை அழைத்து அந்த வகுப்புக்குண்டான பக்கத்தை அவனிடம் காட்டி, 

    கவனாம தப்பில்லாம இந்தப் பக்கத்திலிருந்து எழுது, சரியா” 

    எனக்கூறி இரண்டு கலர் பேனாவையும் கொடுக்க அவனுக்கு சந்தோசம் தாங்கவில்லை. அவனும் கவனமாக அந்த பகுதிக்குண்டான பக்க எண்ணை சாமார்த்தியமாகப் பார்த்து, டீச்சரிடம்,
    
    சரிங்க டீச்சர், 19ம் பக்கத்திலிருந்து நம்ம கிளாஸ் பசங்கள் பெயரை எல்லாம் எழுதிடறேன்”, 

    எனச் சொல்ல, டீச்சரும்

    வெரி குட், 19ம் பக்கத்துலருந்தே எழுது”,

     என்று நோட்டை அவன் கையில் கொடுத்தார்.

    அவனும் அன்று மாலை வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக நோட்டை எடுத்துப் பிரித்து 19ம் பக்கத்தில் ஆரம்பித்து கிடுகிடுவென முத்து முத்தாக எல்லோருடைய பெயர்களையும் எழுதிவிட்டு இரவுத் தூங்கப்போனான்.

    அடுத்த நாள், டீச்சரிடம் சென்று, 

    டீச்சர் நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன்”, 

    என்று நோட்டைத் திருப்பிக் கொடுக்க, டீச்சரும் இரண்டு மூன்று முறை அவன் எழுதியதையே திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தார். 

    “ஏதாவது நாம் தப்பாக எழுதிட்டோமா, ஏன் டீச்சர் கவலையாக அதையே திருப்பி திருப்பிப் பார்க்கறாங்க”, 

    என இவனுக்கு மனதில் கேள்வியெழ ஆரம்பித்தது. டீச்சருடைய முகமும் கோபமும் சங்கடமும் கலந்து மாறிக்கொண்டே இருந்தது. அவர் அவனைப் பார்த்து, 

    ஏண்டா நான் இந்தப் பக்கத்துலயா எழுத சொன்னேன்? நான் ஒரு பகுதியை எடுத்துக் கொடுத்தா நீ பாட்டுக்கு இன்னொரு பகுதியிலே எழுதியிருக்கேஆபிஸ் ரூம்ல வேற நோட்டு தரமாட்டங்கடா இப்ப என்ன பண்றது, நோட்டே வேஸ்டுதான்”, 

    எனக் கவலையுடன் கேட்க இவனும், 

    “இல்லை டீச்சர் நீங்க சொன்ன மாதிரியே 19ம் பக்கத்துலதான் எழுதியிருக்கேன்பாருங்க”, 

    என எடுத்துக் காட்டினான். அப்போதுதான் டீச்சரும் இவனும் முக்கியமான ஒரு விசயத்தைக் கவனித்தார்கள். நோட்டுடைய எல்லா பக்கங்களும் 19 என இருந்தது. அவர்கள் இருவரும் தங்கள் தவறை உணர ஆரம்பித்தார்கள். அந்த நோட்டின் எல்லா பக்கத்தின் மூலைகளிலும் ஆயிரத்துத் தொள்ளாயிரம், அதாவது 19 என அச்சிட்டு கடைசி இரண்டு இலக்கத்தை வருடம் குறிக்க வசதியாக காலியாக விட்டிருந்தார்கள். டீச்சர் உடனே அவனிடம், 

    “சரி போ, நாந்தான் முட்டாளாட்டம் அதைக் கவனிக்கலை நீயாவது கண்டிருக்கலாமே, சொல்லிருக்கலாமே”, 

    எனச் சொல்லிவிட்டு  நோட்டை எப்படி மாற்றுவது என புலம்பிக்கொண்டே வகுப்பைவிட்டுக் கிளம்பினார்.


ரைடு தொடரும் ….