என்ன ஒரு அருமையான மனிதர் அவர். சாது, அப்பிராணி என்ற சொற்களுக்கெல்லாம் ஒரே அர்த்தம் என்னவென்றால் அது அவர்தான். ஐஐடியில் படித்துவிட்டு அவன் படித்த கல்லூரியில் லெக்சரராக சேர்ந்திருந்தார். சிறுத்த உருவம். திருமணமாகதவர். யாரிடமும் அவ்வளவாகப் பேச மாட்டார். தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பார். நேரில் யாரையேனும் பார்த்தால் முகத்தை உடனே வேறுபக்கம் திருப்பிக் கொள்வார். பொதுவாக மாணவர்கள்தான் வாத்தியாரைக் கண்டு ஒதுங்கிப் போவார்கள். ஆனால் அவர் அப்படியே அதற்கு எதிர்மாறாக இருப்பார். இப்படி இருப்பவர் எப்படி பாடம் எடுப்பார் என அனைவருக்கும் சந்தேகம்தான் எழும். ஆனால் அவர் டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் , மற்றும் அதன் சம்பந்தப்பட்ட அல்காரிதம் போன்ற கடினமான பாடங்களைக் கூட மாணவர்க்ள் மிக எளிதாகப் புரிந்துகொள்ளும் விதமாக வகுப்பில் சொல்லித் தரும்போதுதான் அவருடைய முழுத்திறனும் மற்றவருக்குப் புரியும். டெக்னிக்கல் பாடங்களில் அவர் படு கில்லாடி எனவே சொல்லலாம். மனிதர் அவ்வளவு பிரில்லியண்ட். அவனுடன் படித்த மாணவிகள் சிலர் அவரை விளையாட்டுக்காக வம்பிழுக்க வேண்டுமெனவே ஏதேனும் கேள்விகளைக் கேட்பார்கள். அவரும் அதற்குண்டான பதிலை மட்டும் விருட்டென ஒரு வெட்கத்துடன் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்வார்.
பாடம் எடுக்கும் வரைதான் அந்த குணம் எல்லாம் இருக்கும். வகுப்பை விட்டு வெளியே வந்தவுடன் மனிதர் வேறு ஒரு தனி உலகத்தில் வசிப்பார். பார்ப்பவர்களுக்கு இவருக்கு வேறு எதுவும் பிரச்சினை உள்ளதா எனக் கூடத் தோன்றும். தலைக்கு ஏதோ ஒரு வகையான எண்ணெய் வேறு பூசியிருப்பார். அது லேசாக வழிந்து காதோரம் வருவதைக் கூட கண்டு கொள்ளாமல் இருப்பார். வகுப்பு, லைப்ரரி இல்லையெனில் மெஸ்ஸில் சாப்பிடும் போது மட்டுமே அவரைக் காணலாம். எப்போதும் தனியாகவே போவார் வருவார். ஆனால் ஏதோ சித்த வைத்தியம் அல்லது நாட்டு மருத்துவம் செய்துகொள்கிறார் என்று மட்டும் நன்கு தெரியும். அவருக்கு உடலில் என்ன குறைபாடு என யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் உடலுக்கு ஏதோ மருந்து தேவை என்பது மட்டும் அவரைக் கண்டாலே சொல்லிவிடலாம்.
அவனுக்கு மட்டும் அவர் சிறிது நெருக்கமாகி, கொஞ்சம் பழக்கமாயிருந்தார். ஆமாம், அவன் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர். ஆனார். அவன் மூன்றாமாண்டு படிக்கும்போது கல்லூரிக்கு வெளியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தான். அவரும் அவன் பக்கத்து வீட்டில்தான் தங்கியிருந்தார். பார்க்கும்போது ஹலோ சொன்னால் கூட ஒரு புன்முறுவல் மட்டுமே அவரிடமிருந்து பதிலாக வரும். மற்றபடி அதிகப் பேச்சுவார்த்தை எதுவும் இருக்காது. வார இறுதி நாட்களிலோ அல்லது மாலை நேரங்களில் அரிதாக சில வார்த்தைப் பரிமாற்றங்கள் இருக்கும். அவரின் நடவடிக்கைகளைப் பார்க்கக் கொஞ்சம் வினோதமாகவும் இருக்கும்.
அவர்கள் வசித்து வந்த வீட்டுப் பகுதியில் சிற்றெறும்பு தொல்லை மிகவும் அதிகம். அதனால் அவன் எறும்புக்கொல்லி மருந்தை வாங்கி அவனுடைய அறை முழுக்க தெளித்து வைத்திருந்தான். அவனும் அவரிடம்,
“சார் நீங்களும், இந்த பொடியை தெளிச்சு வைங்க ”
“பாவம்பா அதை ஏன் கொல்லணும் , இந்த சர்க்கரையை போட்டா அதுக்கு தேவையனது சாப்பிட்டுட்டு அதுபாட்டுல போகப் போகுது நம்மகிட்ட வராது”
என எறும்பை எப்படி டெக்னிக்கலாக எப்படி டைவர்ட் செய்வது என அவர் விளக்கியதும் அவரது வேறுபட்ட பார்வையும் அவனை வியப்படையச் செய்தது.
இப்படி அவரின் நினைவுகளிலேயே மூழ்கி பாண்டி வரை சென்றடைந்தான். அவர் வீட்டின் முன் நல்ல கூட்டம் கூடி இருந்தது. அவரைப் பார்க்கத்தான் வந்திருப்பர் என்பததை அவனும் அறிவான். அவருடன் படித்தவர்கள் எல்லாம் கூடியிருந்தார்கள். கூடத்திலிருந்த சில புகைப்படங்களில் அவர் நிஜமாகவே சிரித்துக் கொண்டிருந்தார். கூடத்து நடுவில் அவரை அவன் கண்டான். ஆனால் கண்களை மூடி நிரந்த ஓய்விலிருந்தார் . ஆண்டவன் அவர் படும் அவஸ்தைகளைப் பொறுக்காமல் சீக்கிரம் அழைத்துக் கொண்டான் போல என அவன் மனதில் நினைத்துக்கொண்டே அவரை வணங்கிவிட்டு திரும்பினான். அங்கே ஒரு பெரிய எறும்பு கூட்டம் அவர் மேல் கிடத்தியுள்ள மாலைகளை நோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்தன.
“அப்புராணி"
என மனதில் சொல்லிக்கொண்டே அவனும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.
No comments:
Post a Comment