Sunday, January 5, 2025

ஸ்வரங்கள் - ஸ்ருதி 1


ஸ்ருதி - 1   

    வெளியே நல்ல மழை. அடம் பிடித்து அழும் குழந்தையைப் போல சிணுங்கிக் கொண்டும் சமயங்களில் பலமாக இரைந்து கொண்டும் பெய்துகொண்டிருந்தது. வானிலிருந்து கீழேவிழும் மழைத்துளிகள் நான்தான் பர்ஸ்ட்டு என பள்ளியிலிருந்து ஓடும் சிறார்கள் போல ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக் கொண்டு பாய்ந்து வாசலில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. 

    மழையின் ஆரவாரத்தைத் துளியும் பொருட்படுத்தாமல் அம்புஜம்மாள் டிவியில் ஏதோ ஒரு சீரியலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

    “ஏண்டி கஸ்மாலம், துன்றதுக்கு நாஷ்டா எதுனா கீதா” என்று காட்டுத்தனமாகக் கத்தியனை, “யோவ், வேலக்கு போவாம சும்மா பெஞ்சி தேய்ச்சிகினு ரீல்ஸ் பாத்துகினு கீற உனுக்கு நாக்குக்கு சோக்கா நாஷ்டா கேக்குதா! சோறு இன்னும் ஆவல. சித்தப் பொறு” என அக்கம்பக்கம் எல்லாம் கேட்கும் அளவுக்கு அவளும் குரலை உயர்த்தி அவனுக்கு அவள் ஒன்றும் சளைத்தவள் அல்ல எனக் காட்டினாள். 

    “ஏண்டி அம்புஜம் இதெல்லாம் ஒரு பொழப்பாடி! என்னடி சீரியல் இது. வேற நன்ன புரோகிராமே ஒனக்கு பார்க்க இல்லையா! அபிஸ்து, என்ன பாஷைடி அவன் பேசுறான். எல்லாம் அபஸ்வரமாவே இருக்கு. அதையும் நடு ஆத்துல ஒக்காந்துண்டு ஆன்னு பாத்துண்டு இருக்கே! நேக்கு கொஞ்சம் குடிக்க ஜலம் கொண்டுவாடி நான் படுக்கப் போறேன்”என டிவி சீரியலில் மூழ்கியிருந்த அம்புஜத்திற்கு ஒரு ஆர்டரைப் போட்டுவிட்டுத் தன் பெட்ரூமை நோக்கிப் போனார்.  


    ராமஜெயம் ஒரு பெரிய லாயராக இருந்து ஓய்வு பெற்று இன்றோடு மூன்று மாதங்கள் ஆகிறது. எப்போதும் கோர்ட்டு, கேஸு, கிளையண்ட்டு என சட்ட வட்டத்துக்குள் பிசியாக இருந்த மனிதரை இப்போது கால நேரம் வீட்டுக்காவலில் வைத்து வாய்தா வாங்கிக் கொண்டிருந்தது. ஆமாம், தினமும் அவருக்கு நேரத்தைக் கடத்துவதென்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது. 


    விடியற்காலை பால்காரன் வரும்முன்பே மனிதர் எப்போதும் எழுந்து விடுவார். “கோர்ட்டுக்கா போகப் போறீங்க, ஆத்துல சும்மாதானே இருக்கப் போறேள்! இன்னும் சித்த நாழித் தூங்கினா என்ன கொறஞ்சா போயிடும்” என அம்புஜம் சொல்வதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு பாத்ரூமிற்கு பல் தேய்க்கப் போய்விடுவார். அம்புஜத்திற்கு அந்த இடைவெளியில் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கலாம் என்றால் அதுவும் முடியாது. உள்ளே மனிதர் ஒரு கிங்காங் ரேஞ்சிற்கு சத்தம் எழுப்புவார். “ஏண்ணா இப்படி வாந்தி எடுக்கற மாதிரி உறுமிறேள்” எனக் கேட்டால் உடனே பதிலுக்கு, “பல்லு தேய்க்கறதுன்னா வெறும் பல்லுக்கு பாலீஷ் போடற சமாச்சாரமில்லைடி. வாய், நாக்கு, பல்லு, தொண்டை எல்லாத்தையும் நன்னா விளக்கி கழுவணும்” என பல்புராணம்தான் பதிலாக வரும். 


    அடுத்து ஒரு பதினைந்து நிமிடத்திற்கு ஹாலில் ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு ஆகாயவெளியைப் பார்த்துக் கொண்டே சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்துவிடுவார். அவர் விடும் மூச்சு சத்தம் மட்டும்தான் அப்போது கேட்கும். கால்களின் அசைவு அவர் நிற்கும் அந்த தரைக்குக்கூடக் கேட்காது. அவரது அசைவுகள் அவ்வளவு சிரத்தையாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். இவரது நமஸ்கார களியாட்டத்தைப் பார்த்தபிறகுதான் கதிரவனே தன் கரங்களை விரித்து மெட்டிமுறித்து அந்த மேகப்போர்வையை மெல்ல விலக்கிக் கொண்டு ஹாய் என வெளிவருவான். 


    இப்படி அவர் தனது பயிற்சியை முடிப்பதற்கும் வாசல் கேட்டில் டிங் என மணி அடித்து அன்றைய நாளிதழை ராக்கெட் போல பேப்பர்பையன் வீசிவிட்டுப் போகவும் சரியாக இருக்கும். அவர் போய் அந்தப் பேப்பரை எடுத்துத் திரும்புவதற்குள் அடுத்த ஒரு டிங் பால்காரனிடம் இருந்து வரும். “குட் மார்னிங் சார்” என தன் டூவீலரை மெதுவாக நிறுத்தி ஸ்டைலாக ஸ்டாண்டு போடுவான். “இருப்பா அம்மாவை வரச்சொல்றேன்” என அவனிடம் சொல்லிவிட்டு, “அம்புஜம் பால் வந்துடுத்து” எனச் சொல்லி வாயை மூடும் முன்பே, வாசுகி வள்ளுவனிடம் சொன்னது போல, “இதோ வந்துட்டேண்ணா, காஃபி டேபிள் மேல வச்சிருக்கேன். ஆறிடப் போகுது. சீக்கிரம் போய் குடிங்கோ” என தினமும் தான் சொல்லும் டயலாக்கை தேய்ந்த ரெக்கார்டு போல சற்று ஏற்றஇறக்கம் கூடக்குறையச் சொல்லிவிட்டு கேட்டை நோக்கிப் போவாள். 

 

    அவருக்கு காலையில் நமஸ்காரம் செய்து முடித்தவுடனே காஃபி ரெடியாக ஹாலில் இருக்கவேண்டும். அம்புஜத்தின் அக்மார்க் காஃபிக்கு அவர் ஒரு ஆஸ்தான அடிமை என்றே சொல்லலாம். “கையை காலை நல்லா அசைச்சுட்டு ஒரு வாய் சூடா காப்பி குடிச்சாத்தான் வயிறு முக்காம நல்லாப்போவும்” என்பார். அதற்காகவே அம்புஜம் தினமும் கொஞ்சம் பாலைத் தனியாக எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்திருப்பாள். அதில்தான் முதல் காஃபியைப் போடுவாள். புதுப்பால் காஃபி பிறகு காலை டிஃபன் எல்லாம் முடிந்துதான் கிடைக்கும். முப்பத்தைந்து வருட தாம்பத்தியத்தில் இந்த ரொடீனீல் எந்த மாற்றம் இல்லை. 


    பணிக்கு ஓய்வானாலும் இன்றும் அந்த வழக்கம் மாறாமல் தொடர்ந்து அன்றையக் காலையும் விடிந்தது.


    
- இசை தொடரும் ...


[எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருளவும், சுட்டிக்காட்டவும்]

No comments: