Monday, June 9, 2025

குஸ்கா ஸ்பெசல்


காலேஜில் படிக்கும்போது வாரத்தில் செவ்வாய்கிழமை அல்லது வியாழக்கிழமை வந்தாலே போதும். நமக்கு ஒருவிதமான குதூகலம் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும். அதுவும் என்னைப்போல் ஊர் பக்கம் இருந்து வந்தவனுக்கு பட்டை கிராம்பு போட்டு தாளிச்சு தம்மு வைத்த தக்காளி சோறே பிரியாணியென இருந்த 90களின் காலத்தில் காலேஜுக்கு வந்தபிறகுதான் இந்த குஸ்கா என்ற பெயரும் அப்படி ஒரு சாப்பிடும் ஐயிட்டம் இருப்பதும் அறிமுகம் ஆனது. இதிலே கரி மட்டும் இருக்காது. மற்றபடி அப்படியே பிரியாணி சோறுதான். அதுவும் அன்லிமிடெடாகக் கிடைக்கும். அந்த குஸ்காவுக்குனே எங்க ஹாஸ்டலில் என்னைப்போல ஒரு வெறித்தனமான ஆர்மியும் இருக்கத்தான் செய்தது.  


மெஸ்ஸில் குஸ்கா போடும்போது கூடவே சைடிஷ் ஆக முட்டை மசாலாவும் உண்டு. அவித்த முட்டையை தக்களித் தொக்கு போன்ற மசாலா கிரேவியில் மூழ்கடித்து தனியாக ஒரு கப்பில் வைத்து கொடுப்பார்கள். பொதுவாக நான்வெஜ் சாப்பிட வேண்டுமெனில்— முட்டையும் அசைவம்தான் அப்போது— அதற்கென தனியாக முன்னமே டோக்கன் வாங்கிவைத்துக் கொள்ளவேண்டும். பின்னாட்களில் ஆம்லெட், ஆஃப்பாயில் போன்றவையும் கொடுத்தார்கள். ஆனால் முட்டை மசாலா கிரேவிதான் பெரும்பாலும் பிரபலமாகக் கிடைக்கும். அத்துடன் சிறப்பான வெங்காயப் பச்சடியும் உண்டு. 


குஸ்கா போடும் நாட்களில் வழக்கத்துக்கு மாறாக மெஸ் திறந்தவுடனே முதல் ஆளாக ஆஜராகி விடுவோம். அப்போதுதான் ஃப்ரெஷாக ஒரு புடி புடிக்கலாம். உள்ளே நுழையும் போதே மசாலா வாசனை ஆளைத் தூக்கும். டேபிள்களில் குஸ்கா நிரப்பிய பேசின்கள் நடுனாயகமாக வீற்றியிருக்கும். ஒரு டேபிளுக்கு இரண்டு பேசின்களும் அதனுடன் சிறிய பக்கெட்டுகளில் வெங்காய பச்சடியும் வைத்திருப்பார்கள். ஒரு டேபிளுக்கு எப்படியும் பனிரெண்டு பேர் வரை சுற்றி அமர்ந்து சாப்பிடலாம். அதற்கேற்ப டேபிளின் ஓரங்களில் சாப்பிடும் தட்டுகள் வைக்கப்பட்டு தட்டின் நடுவில் சுடுநீர் நிரம்பிய டம்பளரை டபரா கப் காஃபி போல கவிழ்த்து வைத்திருப்பார்கள். அதை மெதுவாகத் தொட்டுத் தூக்கினால் அந்த இளஞ்சூட்டு வென்னீர் தட்டில் பரவும். அதை வைத்து நம் திருப்திக்காக தட்டை துடைத்து அலசிய பிறகு அந்த நீரை வடிக்க மெஸ்பாய் ஒரு பக்கெட்டை கொண்டு வருவான். அதிலே அந்த தண்ணீரை வடித்து விடவேண்டும். 


அவன் பின்னாடியே இன்னொருவன்  ஒரு பெரிய தாம்பாளதட்டில் முட்டை மசாலா கிரேவி உள்ள கப்புகளை அடுக்கி எடுத்துக்கொண்டு டேபிள் டேபிளாக போய் நம்மிடமுள்ள டோக்கனை வாங்கிக்கொண்டு வினியோகிப்பான். நாமும் அதை வாங்கி தட்டில் ஒரு ஓரம் வைத்துவிட்டு பேசினிலிருக்கும் குஸ்காவை அள்ளி தட்டில் போடுவோம். தட்டில் குஸ்காவைப் போட்ட பிறகு முட்டை கிரேவியை ஒரு ஓரத்தில் உற்றினால் அது தன்னால் பரவி குஸ்காவை இடித்து உரசி நிற்கும். 

பிறகு வெங்காய பச்சடியை எடுத்து இன்னொரு பக்கம் ஊற்றிய பிறகு நமக்கு நைவேத்தியம்தான். 


குஸ்கா சிறிது வெண்மை கலந்த நிறமாக பொளபொளவென இருக்கும். கரண்டியில் அள்ளும் போது பூக்குவியலை அள்ளுவது போல லேசாக இருககும். பட்டை கிராம்பு ஏலக்காய் என மசாலா வாசனை ஆளையே மயக்கும் அளவுக்கு இருக்கும். அதற்கெல்லாம் ராஜா போல நெய்வாசம் தூக்கலாய் இருக்கும்.  தட்டில் உள்ள வெறும் குஸ்காவை முதலில் சின்னதாக ஒரு ஸ்பூன் அளவுக்கு கையில் எடுத்து ஒரு முதல் வாயாக ஒரு டேஸ்ட் விடவேண்டும். அது நாக்கில் பட்டவுடனே ஒரு புத்துணர்வு வருவது போல இருக்கும். அந்த மயக்கும் மசாலா வாசனை, நெய் பளபளப்பு, பச்சை மிளகாய் கிராம்பு கலந்து ஒரு காரம். அந்த உணர்வை எழுதவெல்லாம் முடியாது. அப்படியொரு சுவை. அதுல கொஞ்சம் இனிப்பும் இருக்கும். அதிலுள்ள தேங்காய் பாலும் வறுபட்டு கரைந்த வெங்காயமும்தான் அதற்கு காரணம். இதுவெல்லாம் கூடி இப்படி ஒரு அமுதக்குவியலாக நம் கண்முன்னே இருக்கும் குஸ்காவை அப்படியே இரண்டாவது வாயாக மசாலா கிரேவியுடன் சாப்பிடும் போது இன்னொரு சுவை கலந்து வந்துசேரும். மூன்றாவது வாயாக அதேபோல ஆனால் இந்த முறை வெங்காயப் பச்சடியோடு ஒரு புடி. இப்ப அவித்த முட்டையையும் ஒரு கடி. 


ஆஹா … சொர்கமே என்றாலும் நம்ம குஸ்காவைப் போல வருமா எனப் பாடத் தோன்றும். அப்படியே மாறிமாறி முதல் ரவுண்டை முடித்து இரண்டாம் ரவுண்டுக்கு போகும்போதுதான் பிரச்சனையே வரும். 


முட்டை கிரேவி தீர்ந்து போயிருக்கும். டோக்கன் இல்லாமல் மீண்டும் கொடுக்க மாட்டான். நம்மிடம் டோக்கனும் தீர்ந்திருக்கும். அப்போதுதான் நம் கண் டேபிளில் கிரேவி பிடிக்காத மாப்பிள்ளைகள் மச்சான்கள் எல்லாம் கண்ணில் படுவார்கள். இல்லையெனில் எக்ஸ்டிரா டோக்கன் வைத்திருப்பவனிடம் கைமாறாக வாங்கி எப்படியாவது கிரேவியை வாங்கி அந்த இரண்டாவது ரவுண்டையும் சாப்பிட்டும்போது ஒரு ஏப்பம் வருமே … ஆஹா அதுவே வரமாகும். 


சாப்பிட்டு கைகழுவிய பிறகும் அந்த நெய் வாசனை ரம்மியமாக நம்மையே ஒட்டியிருக்கும். 


குஸ்கா வாழ்க!!!

4 comments:

Anonymous said...

Super

Sadha said...

Wow... I want Kuska now

Kotteeswaran said...

இதை படிக்கும் போதும் அந்த வாசனைகள் வருது.
அட்டகாசம் ரவி 👍👍

Ravikumar Veerasamy said...

நன்றி நணபர்களே