Friday, May 23, 2025

சிலேட்டு


வீட்டில் உள்ள பழைய டிரங்குப் பெட்டியைக் கிளறிக்கொண்டிருந்த போது என் கண்ணில் அது பட்டது. மர ஃப்ரேம் போட்ட சதுரமான ஒரு கருஞ்சிலேட்டு அது. அதை நான் எப்போது வாங்கினேனென்பதே எனக்கு நினைவில்லை. எப்படியும் ஒரு நாற்பது வருசதுக்குக் குறையாமல் இருக்கும். அதன் நான்கு மூலைகளையும் இணைக்கும் இரும்புக் கிளிப்புகளின் ஓரங்கள் துரு ஏறி கருத்திருந்தது. அதைக் கையால் தூக்கிப் பார்த்தேன். அது ஒரு கல்லு சிலேட்டு. நன்கு கனமாகவே இருந்தது. அதன் நடுவில் ஒரு உடைந்த விரிசல் வேறு இருந்தது. ஆனால் உடையவில்லை. 

        பேப்பர் பென்சிலுக்கே இப்போதெல்லாம் நமக்கு வேலையில்லை. ஆனால் ஒரு காலத்தில் சிலேட்டு பென்சில் இல்லையென்றால் நமக்கு ஒரு வேலையும் ஓடாது. சிலேட்டில் எழுதும் பென்சிலை பல்பம் என்றும் அழைப்போம். அதுவும் வகுப்பில் கொடுத்த வீட்டுப்பாட வேலையை செய்துவிட்டு அதைப் பக்குவமாக அழியாமல் எடுத்துப்போய் டீச்சரிடம் காட்டிவிட்டு மார்க்கு வாங்குகிற வரையில் ரொம்பவே கவனமாக இருக்கவேண்டும் அதைப்போல் பள்ளியில் இருந்து திரும்பி வரும்போது அந்த மார்க்கை அழியாமல் பாதுகாத்து வீட்டிலே வந்து காட்ட வேண்டும். 

        அந்த சிலேட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன் பழைய நினைவுகளெல்லாம் என் கண்ணில் மின்னலாய் பட்டு ஓடியது. எப்பொழுதோ எழுதி சரியாக அழிக்கப்படாமல் இருந்தது போல சில இடங்கள் வெளுத்துப் போயிருந்தது. என் உள்ளங்கையை வைத்துத் துடைத்துப் பார்த்தேன். அழியவில்லை. என்னையறியாமல் என் கைவிரல்கள் வாயைத் தேடிப் போனது. ஆனால் சிரித்துக்கொண்டே கையை உடனே எடுத்துவிட்டேன். அப்போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் எச்சிலை கையில் தொட்டு அழித்ததின் பழக்கதோசத்தினால் வந்த வினை. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என சும்மாவா சொல்லிவைத்தார்கள். என்னை சுதாரித்துக்கொண்டு பக்கத்திலுள்ள வாட்டர் பாட்டிலிலிருந்த தண்ணீரை ஒரு துளி தொட்டு துடைத்தேன். இப்போது பளிச்சென அழிந்தது போல இருந்தது. ஆனால் காய்ந்தவுடன் மீண்டும் தன் வெளுப்பை பல்லை போல இளித்துக் காட்டியது. 

        இன்னும் உற்றுப் பார்த்தேன். ஏதோ அந்த எழுத்துகள் என் கண்களுக்கு இன்னும் அழியாமல் இருப்பதாகவே தெரிந்தது. அது என்னவாக இருக்கும். ஒருவேளை நாம் போட்ட முதல் யானை ஓவியமாக இருக்குமோ. வால் பகுதியின் முனையில் அடர்த்தியான முடி இருக்கவேண்டுமென நான் அழுத்திஅழுத்தி தீட்டிய வெண்பட்டைகளாக இருக்குமோ. தமிழாசிரியரின் செய்யுல் பாடம் மனதில் பிடிபடாமால் பக்கத்து மாணவனுடன் கோடிட்டு 'இனிஷியல் ஸ்கொயர்' விளையாடிய கோடுகளா அவை, இல்லை கோடுகள் ஒன்றைஒன்றைத் தொடாமல் தூரத்துப் புள்ளிகளை இணைக்கும் கோடு விளையாட்டாக இருக்குமோ. ஒருவேளை ஆயுதபூஜைக்கு ஒருமுறை சிலேட்டைக் கழுவிவைத்து நடுவில் போட்ட பட்டையின் மிச்சமாக இருக்குமோ. என் மனம் பழைய நினைவுகளில் கோடிட்டு ஊஞ்சலாடியது. மனதுக்கு இதமாக இருந்தது. சிலேட்டும் மனிதனின் மனமும் ஒன்றுதானோ. எவ்வளவோ நினைவுகள் நம் மனதில் பதியும். மறைந்தும் போகும். ஆனால் அதன் அழுத்தம் பொறுத்து அழியவே அழியாது. பசுமையாகவே இருக்கும். என் தத்துவ போக்கை தளர்த்திவிட்டு  இன்னுமொரு முறை சிலேட்டின் அந்தப்பகுதிகளைத் தொட்டுப் பார்த்தேன் 

        ஆனால் அந்தப்பகுதி சற்று வழவழப்பாக இருந்தது. சிலேட்டுகள் பொதுவாக தேர்ந்த தோசைக்கல்லைப் போல கொஞ்சம் சொரசொரப்பாக இருந்தால்தான் நன்றாக எழுதவரும் என ஒரு நம்பிக்கை உண்டு. வழவழப்பாக இருந்ததால் பல்பத்தை அழுத்தம் கொடுக்க முடியாது. அதனால் எழுத்து எழுத வராமல் வழுக்கிப்போகும். எஙகள் வகுப்பிலுள்ள கரும்பலகைக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை கரி பூசும் வைபவம் நடக்கும். அதாவது அடுப்புக்கரி, ஆமணக்கு விதை, வேலியில் இருக்கும் ஒரு வகையான தழைவகை அனைத்தும் ஒன்றாக தண்ணீர் சேர்த்து இடித்தக் கலவையை கரும்பலகையில் நன்றாகப் பூசிவிடுவோம். அடுத்த நாள் அதைத் துணியால் நன்கு துடைத்துவிட்டால் 'போர்டு' கருகருவென எழுதுவதற்கு அருமையாக இருக்கும். இந்த முறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானி யார் எனத் தெரியாது. ஆனால் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்த ஒரு பழக்கம். அப்படி இடித்த கரியின் மிச்சமீதியை என் சிலேட்டில் பூசி பதப்படுய்திய அனுபவமும் நிறைய உண்டு. என் கை சிலேட்டை விட்டு இன்னும் விலகவில்லை. என் கை இப்போது விரிசலைத் தொட்டது.

        இந்த சிலேட்டு என்னுடன் எவ்வளவு காலம் பயணப்பட்டிருக்கும். வெகு ஆச்சரியமாக இருந்தது. சிலேட்டு கொண்டு வரவில்லையெனில் எங்கள் வகுப்பாசிரியர் வெளியே நிற்க வைப்பார். அதனால் ஞாபகமாக அதைப் பையில் வைத்து எடுத்து போவோம். புத்தகங்களுக்கு இடையில் நடுப்பகுதியில்தான் வைப்பேன். அப்போதுதான் அது உடையாது. இல்லாவிட்டால் சைக்கிளில் பையை மாட்டும்போது உராய்ந்தோ அல்லது வகுப்பில் பையை வைக்கும் போதோ மோதியோ உடைந்துவிடும். வீட்டுப்பாடம் எழுதிய சமயங்களில் கையில்தான் தூக்கி செல்லவேண்டும். வேறுவழியில்லை. பையில் வைத்தால் அழிந்துவிடும். அப்படி ஒருமுறை கையிலேயே தூக்கிசெல்லும் போது தவறி விழுந்ததில் விழுந்த விரிசல்தான் அது.

        சமீபத்துல இந்த மாதிரி சிலேட்டுகளை என்னுடைய ஊரில் அண்ணாச்சி மளிகைக்கடைகளில் பார்த்ததாக ஒரு ஞாபகம். அரிசி மற்றும் தானிய மூட்டைகளுக்கு மேல் அன்றைய விலையை எழுதி தொங்கவிட்டுருப்பார்கள். அதேபோல ஒருமுறை கிராமப்பகுதியில் உள்ள ஒரு சின்ன கடையில் டிஃபன் சாப்பிடும்போது கல்லாவில் உட்கார்ந்து இருந்த கடைக்காரர் சிலேட்டு பென்சில் வைத்து கணக்கு சொன்னார். வேறு எங்கும் பார்த்த நினைவு இல்லை.

        என் மகள் எழுத ஆரம்பித்தப் புதிதில் ஒரு சிலேட்டை வாங்கி கொடுத்தேன். அது பிளாஸ்டிக் ஃப்ரேம் போட்ட பெயிண்ட அடிக்கப்பட்ட தகர சிலேட்டு வகை. தூக்கவே லேசாக இருக்கும். ஆனால் அதை அவள் ஒரு வாரம் கூடப் பயன்படுத்தியதாக எனக்கு நினைவில்லை. பள்ளியிலும் தேவைப்படவில்லை. அவள் பேப்பர் பென்சிலுக்குத் தாவிவிட்டாள். 

        நான் படிக்கும் காலங்களில் சிலேட்டால் மாணவர்களுக்கு பல உபரி பயன்பாடுகளும் உண்டு. சமயத்தில் சிலேட்டுதான் நமக்கு ஆயுதம். மற்றவரைத் தாக்கவும் உதவும். தாக்குதலில் இருந்து தப்பிக்க கேடயமாகவும் இருக்கும். சிறுமழைத் தூறலில் இருந்து காக்கக் குடையாகவும் பயன்பட்டதுண்டு.

       கிளீன் சிலேட்டு என இப்போதெல்லாம் நம் சொல்லில் மட்டும்தான் சிலேட்டு உள்ளது.  'ஸ்டைலஸ்', 'ஸ்கிரிபிள் பேடு" என எலக்ட்ரானிக் ஸ்லேட்டுகள் வந்துவிட்டது. பளிச்சென எழுதும். பளீரென அழியும். புத்தம் புதியதாக இருக்கும் ..... ஆனால் ஒன்று இந்த இயந்திர கால 'மாடர்ன் எலெக்ட்ரானிக் பேடுகள்' நாம் எழுதி அழித்த நினைவுகளை கல்லு சிலேட்டு போல வெளிறிய எண்ணங்களாக பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே ....

        பி.கு: என் கல்லூரி மூத்தவர் இளம்பரிதி தன் பழைய சிலேட்டை கண்ட சந்தோசத்தைப் பகிர்ந்து என்னை எழுதத் தூண்டியதில் நான் எழுதிய என் அனுபவம்தான் இது!

        சிலேட்டு பிடித்திருப்பின் தங்கள் அனுபவத்தை கமெண்டில் பகிருங்க

6 comments:

Anonymous said...

Excellent Ravi. Palaya gnabagam varuthu. Thanks

Sadha said...

Wow. Super Ravi 💯

Anonymous said...

Slate arumaiyana korvaiyana ezuthukalal sethukitathu....karupu varnam kovai Kodi ilai matrum adupukari...

Anonymous said...

❤️மிக்க நன்றி ரவி உன்னைக் காட்டிலும் வேறொருவர் இந்த பாணியில் எழுதியிருக்க முடியாது
ஏனோ ரவி என்று டைப் செய்தால் “லவ்” என்று ஆட்டோ சஜ்ஜசன் வந்தது அதுவும் சரிதான்
சிலேட்டு பரிதி 🙏🏽

Anonymous said...

Remembering my “சிலேட்” அனுபவங்கள்!! Excellent narration 👌

Anonymous said...

"சிலேட்டு" எதார்தமாக எழுதப்பட்டிருந்தாலும் படித்தவர்கள் தங்கள் அனுபவங்களை அப்படியே பிரதிபலிப்பதாக உணரும் வகையில் அமைந்துள்ளது.
ஏறக்குறைய இந்த எல்லா அனுபவங்களையும்
பெற்றவன் நான்.

எங்கள் சமயத்தில்" பம்பாய்" பலப்பம் என்று ஒன்று உண்டு..வண்ணனண்ணமாக இருக்கும்.எழுதினாலும் Multi colourல் இரூக்கும். பணக்கார பசங்களுக்கு மட்டும்தான் இந்த பலப்பம். எங்களுக்கு " கோமுட்டி செட்டி" கடையில் கிடைக்கும் மலிவான பலப்பம்தான்.
இந்த பலப்பம் கடித்து தின்ன ருசியாக இருக்கும்.
தின்றுவிட்டு வீட்டில் அடியும் கிடைக்கும்!!

சிலேட்டை அழிக்க ஒருவித Sponge (plastic டப்பாவுடன்) கிடைக்கும். அதை ஈரமாக்கி சிலேட்டு துடைப்போம்

"நினைவுகள் மனதில் பதியும்,அழிந்தும் போகும்,ஆனால் அந்த அழுத்தம் அழியவே அழியாது " ...மிக அருமையான வார்த்தைகள்👏👏👏