Monday, March 24, 2025

ஒற்றை ரோஜா (சிறுகதை)

      


  “டேய் சேகரு, இது மாதிரி இன்னியொரு சான்ஸு ஒனக்கு கெடைக்கவே கெடைக்காது. உம் மனசுல உள்ளத, இதயம் முரளி மாதிரி கடேசி வரைக்கும் சொல்லாம மூடி மறைச்சுட்டு இருக்காத! இப்பயாவது அவ காதுல சொல்லிபுடுரா! இதை வுட்டா பொறவு ஒனக்கு வேற நல்ல சான்ஸே கெடைக்காது!”, என பாலு சேகரின் காதில் கடிக்காதக் குறையாக கிசுகிசுக்க, சேகரும் பதிலுக்கு, "“சரிடா பாலு, இன்னைக்கு கண்டிப்பா அவகிட்ட சொல்றேண்டா!”, என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பள்ளி ஒலிபெருக்கியில், "சேகர், மேடை அருகே வரவும்", என ஓங்கி ஒலித்தது. பாலு அவனை கண்களாலேயே வாழ்த்தி முதுகில் தட்டிக்கொடுத்து வழியனுப்பிவைக்க சேகர் மெதுவாக பள்ளியின் ஆண்டு விழா மேடையை நோக்கி நகர்ந்தான்.


        அவனுக்கு முன்பாகவே அவளது பெயர் அழைக்கப்பட்டு ஏற்கனவே அவள் விழா மேடையில்  நின்றிருந்தாள். இப்படி இருவரும் ஒரே மேடையில், ஒரே நாளில், ஒருசேர நிற்கப் போகிறோம் என நினைக்கையில் அவன் உடம்பு ஒரு கணம் புல்லரித்ததுப் போனது. இப்படி அவளுடன் அவன் ஒன்றாக இருப்பது போல கனவுகள்தான் வரும். ஆனால் இன்று, தற்போது, தான் கண்ட கனவுகள் நனவாக இருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை.


        அதுபோல இனிய கனவுகள் அவனுக்கு அடிக்கடி வரும். அந்தக் கனவுகளைப் பற்றி நினைத்தாலே அவன் உடனே மெலிதாகி வானத்தில் மேகமாய் பறக்க ஆரம்பித்து விடுவான். அந்தக் கனவுகளில் மணமேடை போன்ற ஒரு சூழல் வரும். சுற்றிலும் வெண்பஞ்சு மேகங்கள் பரந்திருக்கும். பச்சைப் புல்வெளிகளும், பூந்தோட்டங்களும் நிறைந்து அந்த இடமே பசுமையாக, சுவர்கமாக காட்சியளிக்கும். பூமாலைகள் தாங்கிய வெள்ளை உடை தேவதைகள் தன்னை சுற்றிசுற்றி வருவார்கள். அவளுடைய மூச்சுக் காற்று தன் மேலே படும்படியான ஒரு  நெருக்கத்தில் அவன் அவளுடைய கண்களையே நோக்கிக் கொண்டு அகில உலகையே வென்ற ஒரு பூரிப்புடன் நின்று கொண்டிருப்பான். கிட்டதட்ட பாரதிராஜா படங்களில் வருவது போலவே அந்தக் கனவுகள் இருக்கும். அடிக்கடி கனவில் வந்து அவனை ஆட்கொள்ளும் அளவுக்கு அவன் மனதை அவள் முழதாக ஆக்கிரமித்திருந்தாள்.


        ஒரு கணம் இப்பவும் அந்த கனவு மின்னலாய் அவன் மனதில் வந்து போனது. அந்தப் பூரிப்பிலேயே அவன் மேடையை நோக்கி மிதந்து கொண்டேபோனான்.


        சேகர் அவளை மனதாரக் கொண்டாடி, ரசித்து, காதலிக்கத் தொடங்கி இன்றோடு ஐந்து வருடங்களாயிருந்தது. இயற்கை அவர்கள் இருவரையும் எட்டாம் வகுப்பிலிருந்தே ஒரே வகுப்பறையில் ஜோடியாக அமர்த்தி அழகு பார்த்தது. அவளை என்று முதன்முதலாகப் பார்த்தானோ அன்று விழுந்தவந்தான் இன்று வரை எழவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையில் அப்படி ஒரு பொருத்தம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும் அப்படிதான் தோன்றும். படிப்பில் இருவரும் படுகெட்டி. போட்டி போட்டுக்கொண்டு முதல் இரண்டு இடத்தையும் மாறிமாறி பிடிப்பார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவர்கள் வாங்கிய மதிப்பெண்களைப் பார்த்து வகுப்பாசிரியர் கிண்டலாக, “என்ன ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து படிச்சீங்களா, சொல்லி வச்ச மாதிரி ஒரே மார்க்கு வாங்கிருக்கீங்க”, என ஏதேச்சையாக சொன்னதுதான் இவனுக்கு முதல் அட்சாரமே. அந்த அட்சாரத்தின் கிளைமாக்ஸ்தான் இன்றைய மேடை நிகழ்வு. பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் அவள் முதல் இடத்தையும் இவன் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தான். அவள் அங்கு ஏற்கனவே மேடைக்குச் சென்று முதல் இடத்தை ஆக்கிரமித்து நின்றது கண்டு அவனுக்குப் பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருந்தது. தூரத்தில் அவள் அணிந்திருந்த கண் கண்ணாடியில் காலை இளம் வெயில்பட்டு பிரதிபலித்தது அவனுக்கு அவள் ஏதோ ஞானஒளி சித்திரமாகத் தெரிந்தாள்.


        இவனும் ஒரு காலத்தில் தலைவலி பிரச்சினைக்காக கண்ணாடி அணிந்திருந்தான். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அதுவே சரியாகி இப்போதெல்லாம் கண்ணாடி அணிவதில்லை. அப்போது அவனைப் பார்த்து ஒருவர், “என்னடா சைட்டுக்காக கண்ணாடி போட்டிருக்கியா”, என யதார்த்தமாக ஐ-சைட்டைப் பற்றிக் கேட்க இவனுக்குள் ஏற்கனவே இருந்த ஃப்ளேம் இன்னும் பலமாகப் பற்றிக் கொண்டது. அது இப்போது திடீரென நினைவுக்குவர அதை நினைத்து மனதால் வெட்கித்துக் கொண்டே மேடையை நெருங்கினான்.


        வேகமாக மேடை மேலே ஏற இருந்தவனை, "இங்கே வாப்பா", என ஒரு ஆசிரியரின் குரல் தடுத்து அழைத்தது. "யாருடா இது, சிவ பூஜையில புகுந்த கரடி மாதிரி நடுவுல? நம்ம இன்னைக்கு அவளோடா கிட்டக்க போயி நிக்க முடியாதா? பேச முடியாதா?", என பலத்த சந்தேகப் பார்வைகளுடன்,  "சார், நாந்தான் சேகர்", என்று பவ்யமாக நின்றான். 


        "இந்தா இந்த பேட்ஜை கழுத்தில் போட்டுக்கோ, அதுல உம் பேரையும் நல்லாத் தெரியற மாதிரி பெருசா எழுது", என ஒரு பேனாவை அந்த ஆசிரியர் அவன் கையில் கொடுத்தார். "ஓ இதுக்குதான் நிக்க சொன்னாரா", என அப்போதுதான் அவனுக்கு உயிரே வந்தது. ஆனால் அவர் கொடுத்த பேனா எழுதாமல் மக்கர் செய்யவே அவன், "வேறு பேனா இருக்குமா", எனக் கேட்டான். அவரும் தன்னிடம் இருந்த இன்னொரு பேனாவைக் கொடுக்க, உடனே அவனுக்கு ஒரு நமட்டு சிரிப்பு வந்தது. "என்னடா இளிப்பு வேண்டி கெடக்கு, சீக்கிரமா பேரை எழுதிட்டு, மேலே போ, எல்லாரும் வெயிட் பண்றாங்க", என அவர் ஒரு அதட்டு அதட்ட அவனும் அவன் பெயரை மெதுவாக எழுத ஆரம்பித்தான்.


        ஒருமுறை இப்படிதான் இவனுடைய பேனா எழுதாமல் போனது. அப்போது அவன் வகுப்பில் இருந்த மற்ற சக மாணவர்களிடம், "எக்ஸ்ட்ரா பேனா ஏதாச்சும் இருக்கா", எனப் பொதுவாகக் கேட்க உடனே அவள் எல்லோரையும் முந்திக்கொண்டு வந்து ஒரு பேனாவைக் கொடுத்தாள். இவனும் வாஞ்சையோடு மூடியைக் கழற்றிவிட்டு எழுதப் போகும் போதுதான் கவனித்தான். அந்த பேனாவில் "நிப்" இல்லாமல் வெறும் நாக்கை மட்டும் காட்டிக் கொண்டிருந்தது. இப்படி அவனை முட்டாள் ஆக்கி விட்டாளே என அவன் கோபமாக தலையை நிமிர்த்த அவளும் அவன் ஏமாந்ததை பார்த்து சிரித்துக் கொண்டே போய்விட்டாள். அவளுடைய அந்த சிரிப்பு அவன் கோப அலையை அமர்த்தி அவனும் அவளுடன் சேர்ந்து சிரித்துவிட்டான்.


        ஒருவழியாக பெயர் எழுதிய பேட்ஜைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு மேடையேறி அவள் அருகிலேயே வந்து நின்றுவிட்டான். கை கால் எல்லாம் படபடவென தந்தியடித்தது. அவள் அவனைப் பார்ப்பது நன்கு தெரிந்தும் ஏனோ இவன் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். தலைமையாசிரியர், "விழா ஆரம்பமாகலாம்", எனச் சொல்ல கடவுள் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அனைவரும் வாய்விட்டு கூடவே பாட ஆரம்பித்தார்கள். படபடப்பில் இருந்த இவனுக்கு பாட்டு வரிகள் மறந்து பாடவே வரவில்லை. அவள் அவனைப் பார்த்து பாட்டை எடுத்துக் கொடுக்க இவனும் அவளைத் தொடர்ந்து பாட ஆரம்பித்தான்.


        இது ஒன்றும் இவனுக்கு புதியதில்லை. பலமுறை அவள் அவனுக்கு இதுபோல பிண்ணனி உதவி செய்திருக்கிறாள். இருவரும் நல்ல உயரமானதால் கடைசி பெஞ்சுக்கும் முந்தைய பெஞ்சில்தான் அமர்வார்கள். இருவரின் இருக்கையும் கிட்டதட்ட ஒரே வரிசையில் இருக்கும். ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டு இவனுக்கு ஸ்டார்டிங் டிரபிள் இருந்தால் அவள் குசுகுசுவென தலையைக் குனிந்து கொண்டே பதிலை எடுத்துக் கொடுப்பது ஒன்றும் அவனுக்கு புதிதில்லை. இன்றும் அதேதான் நடந்தது. அவள் பாட இவனும் அவளைப் பின் தொடர்ந்து பாடினான். 


        கடவுள் வாழ்த்து முடிந்து தலைமையாசிரியர் இவர்கள் இருவரின் திறமையையும் மதிப்பெண்களையும் பாராட்டிப் பேசி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். மாணவர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்து ஒலித்தது. மேடையருகே வீற்றியிருந்த பூவரச மரம் கரகோஷக் காற்றில் அசைந்து பூவை அவர்கள் மேலே அட்சதையாக அள்ளித் தெளித்தது. அவனைச் சுற்றியிருந்த வெள்ளை வேட்டி கட்டிய ஆசிரியர்கள் தேவதைகளாக அவன் கண்ணில் பட்டனர். விழா முடிந்தவுடன் அவளிடன் கண்டிப்பாக சொல்லிவிட வேண்டும் என அவன் மனதில் உறுதியை வரவழைத்துக் கொண்டே அவளுடன் மேடையில் இருந்து இறங்கினான். 


        கூடவே படித்திருந்தாலும், பார்த்திருந்தாலும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதில்லை. அவன் அவளை வகுப்பில் மறைந்திருந்து பார்ப்பதும், அவள் வீட்டின் தெருவில் அடிக்கடி சைக்கிளில் உலா வருவதும், பள்ளி முடிந்து போகும் போது பின் தொடர்வதும் அவளும் நன்கே அறிவாள். ஆனால் இதுவரை பேச்சு இல்லை. விழா முடிந்து அவரவர் செல்ல இவர்கள் இருவர் மட்டும் நடந்து கொண்டிருந்தனர்.  


        இதுதான் சரியான சமயமென, "ஒரு நிமிஷம் ஒங்கிட்ட பேசணும்", என சொன்னான்.


        "அப்பாடா இப்பவாவது பேசுனயே, சொல்லு", என அவளும் திரும்பி சிரித்தவாறு இவன் என்ன சொல்லப்போகிறான் என்ற ஆர்வத்தோடு நின்றாள். 


        "இல்லை, சும்மாதான், கங்ராஜுலேசன்ஸ்".


         "ம் ... தாங்க்ஸ், அவ்வளவுதானா", என்றாள். 


        "பெஸ்ட் ஆஃப் லக்".


        "தாங்க்ஸ், ஒனக்கும் என்னோட பெஸ்ட் ஆஃப் லக்" என அவள் சொன்ன பிறகு இருவரும் பிரிந்து தத்தம் நண்பர்கள் நின்ற பகுதிக்கு சென்றனர்.


        "என்னடா மேட்டர சொல்லிட்ட போல! சூப்பர்! என்ன சொன்னா? எல்லாம் சக்ஸஸ்தானே", என பாலு அவன் வந்ததும் வராதுமாக குதித்தான்.


        "இல்லைடா பாலு, பேசுனேன் ஆனா அதை மட்டும் சொல்லலை. வேண்டாம்டா. எனக்கு பயமா இருக்கு. ஒரு வேளை அவளுக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டாக்கா என்னால அதை தாங்க முடியாது. ஒருவேளை அவ என் விருப்பத்துக்கு ஒத்துகிட்டாலும் எங்க குடும்பங்கள் வேணாமுனு சொல்லிட்டாலும் என்னால அதை தாங்கிக்க முடியாது. எனக்கு இப்படி இருக்கறதே ரொம்ப சந்தோசமாதான் இருக்கு. நான் எனக்குள்ள பொத்தி பொத்தி  வளர்த்த ஒத்தை ரோஜா என் மனசுக்குள்ளே இப்பவும் செழிப்பாதான் இருக்கு. அது எப்பவும் அப்படியேதான் இருக்கும். அதைப் பறிச்சு வாடிப் போறதை பார்க்குற தெம்பு எனக்கு இல்லைடா. என் கனவு என்னோடதான் இருக்கும். அது எங்கேயும் போகாது. நான் ரொம்பவே சந்தோசமாதான் இருக்கேன். ஆனா ஒண்ணு சொல்றேண்டா, எனக்கு நல்லா தெரியும். அவளுக்குள்ளேயும் ஒரு ஒத்த ரோஜா இருக்குன்னு எனக்குத் தெரியும். அதுவும் வாடாமல் இருக்கும். அதுவும் அப்படியே செழிப்பாதான் இருக்கும். அது எனக்கு நல்லாத் தெரியும்", என்று சொல்லிவிட்டு சைக்கிளைத் தள்ளிக் கொண்டே செல்லும் அவனை தூரத்தில் இருந்து இரண்டு கண்கள் மட்டும் பார்க்கத் தவறவில்லை---  அதை அவனும் அறியாமலில்லை ... சிரித்துக் கொண்டே நடந்தான்.


(1960களில் குமுதம் இதழில் பதிப்பிற்காக அனுப்பப்பட்ட 'ஒற்றை ரோஜா' என்ற கதையைத் தழுவி எழுதப்பட்டது)  

7 comments:

Anonymous said...

பள்ளிக்காதலை மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. இதை படித்த அனைவருக்கும் அவர்களின் பள்ளிக்காதல் நிச்சயமாக நினைவுக்கு வரும்.
தன் பெயரைக்கூப்பிட்டதிலிருந்து மேடையை அடையும்வரை சேகரின் உணர்வுகளை காவியம் போல் வருணித்திருக்கிறது.
மிகவும் ரசித்தேன்👏👏👏

Anonymous said...

பதின் மொட்டு பருவ ரோஜா💐

Anonymous said...

கிளைமாக்ஸ் சூப்பர்

Anonymous said...

அருமையான கதை கற்பனைகள் மிகவும் சிறப்பாக இருந்தது கண்ணாடி மற்றும் பேனா போன்ற கதையில் வரும் கற்பனை மிகவும் நன்றாக இருந்தது கதை எடுத்துச் சென்ற விதம் மிகவும் சுவாரஸ்யமாகவும் முடிவு மிக பிரமாதமாக இருந்தது வாழ்க வளமுடன்

Sadha said...

அருமை. ஒற்றை ரோஜாக்கள் என்றும் வாடுவதில்லை.

Anonymous said...

😍 thanks Sadha

Anonymous said...

அருமையான எளிய கதை நடை… தங்களின் முயற்சிக்கும் பகிர்ந்தமைக்கும் நனி நன்றி