
கிழக்கால கம்மாக்கரை
தண்ணியில்ல வறண்டு போயி
ஆகிப்போச்சு சும்மாக்கரை
மழை பேய்ஞ்சு பல வருசமாச்சு
ஆடு மாடு மேய்ச்சி திரியும் இளவட்டம்
கில்லியாட இடமுமிங்கே தோதாச்சு
மேற்கால மாரியாக் கோயில்
வருசம் கண்டா திருவிழா
அதுக்கொண்ணும் குறைச்சலில்லை
இங்க அரிசி சோத்துக்கே வழியில்லை
ஆனா எம் பொஞ்சாதி
மாவிளக்கு போட மட்டும் தப்பவில்லை
குறுக்கால அரை கிலோ மீட்டர்
கூரை வீடு மச்சி வீடுன்னு
ஊரு ஜனமும் பெருகிப் போச்சு
அப்பன் வழி என் சொத்து
அரை ஏக்கர் மேட்டாங்காடாச்சு
பேருக்குதான் விவசாயி
பயிருக்கே வழியில்லாம போச்சு
காத்தால குடிக்கத்தான்
குளுகுளுன்னு கம்பங்கூழு
பகலெல்லாம் வேர்வை சிந்த
கிழங்கு மில்லு கூலி வேலை
ராவுக்கு உடம்பு நோவு
இருக்குதய்யா
கிளுகிளுன்னு நாட்டு சரக்கு
சாயங்கால வேளையில
பஞ்சாயத்து டிவிதான்
அப்பப்ப கீத்து கொட்டாய்
தரை டிக்கட்டுல சினிமாதான்
எம்.ஜி.ஆர் சிவாஜி போயி
ரஜினி கமலும் வந்தாச்சு
ரேடியோல கேட்ட காலம் போயி
டிவி சீரியலும் வந்தாச்சு
எத்தனைதான் மாறினாலும்
எம் பொழப்பு மாறாது
எதிர்பார்ப்பும் ஒண்ணுமில்லை
ஏமாற்றமும் காணவில்லை
ஏன்னா நான் எப்பவுமே
மனசார குடியானவ ராசாதான்
4 comments:
குடியானவர்களின் உண்மை நிலையை விளக்கும் அருமைக் கவிதை. நாடு சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டு காலமாகியும், அறிவியல் வளர்ச்சிகள் ஆயிரம் கண்டும் இன்னும் கிராமப்புற விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட அனுபவக் கவிதை அருமை. வாழ்க - தொடர்க
இயல்புக் கவிதை; உண்மைக் கவிதை; நல்ல கவிதை.
இது போன்ற கிராமியக் காட்சிகளை கவிதையாக்கும்போது, "ரிதம்" இருக்குமாறு பார்த்துக்கொண்டால், வாசிப்பதற்கு மிகச் சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
சீனா, ஜான் - தங்கள் விமர்சன கருத்துகளுக்கு நன்றி.
ஜான் - நீங்க சொன்னது மாதிரி, கொஞ்சம் எதுகை மோனை இருந்தா நல்லா இருக்கும். அடுத்த கவிதையில முயற்ச்சிக்கிறேன்.
unnakkul ivalluvu thiramai ya ? Wish you all the best nee innum niraya eluthanum- Un mama
Post a Comment